ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

குறள் நெறிக் கதைகள்! யார் பெரிய திருடன்?  

முன்னொரு காலத்தில் "சித்திர சேனன்' என்ற மன்னன் "விஜய புரி' என்ற நாட்டை ஆண்டு வந்தான். அவன் தன் பிரதம

News image
Updated On :15 பிப்ரவரி 2020, 11:18 am

என். பாலசுப்ரமணியன்


முன்னொரு காலத்தில் "சித்திர சேனன்' என்ற மன்னன் "விஜய புரி' என்ற நாட்டை ஆண்டு வந்தான். அவன் தன் பிரதம மந்திரியிடம் எல்லாப் பொறுப்புகளையும்  ஒப்படைத்துவிட்டு மற்ற தேசங்களுக்குப் பயணம் செல்ல ஆரம்பித்தான்.

 இவனது மேற்பார்வையில் இருந்த வரையில் நாட்டில் வரி வசூல் சரியாக இருந்தது. பிரதம மந்திரியின் பொறுப்பிற்கு வந்த பின் மக்களிடமிருந்து வரியாக வசூலாகும் நெல்லின் அளவு குறைந்து கொண்டே வந்தது.  இதனால் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை முழுமையாக செயல் படுத்த முடியவில்லை. இதற்கான காரணம் அறிய ஒரு நாள் மன்னன் மாறு வேடம் அணிந்து நகர்வலம் வரத் தொடங்கினான். 

 மக்கள் நெருக்கம் நிறைந்த சந்தைப் பகுதியில் ஒரு இளைஞன் யாரும் அறியாதவாறு சாலையோரக் கடை ஒன்றில் இருந்து சில நாணயங்களைத் திருடினான். இதைக் கண்ட அரசன் கோபமடைந்து அவனைப் பின் தொடர்ந்து சென்றான். 
 நாணயங்களைத் திருடிய அந்த இளைஞன் நேரே ஒரு உணவகத்திற்குச் சென்றான். அங்கு அப்பம் வடை போன்றவற்றைக் கூடையில் போட்டு ஒரு சிறுவன் விற்றுக் கொண்டு இருந்தான். அங்கு  சென்ற இளைஞன் இரண்டிரண்டு அப்பம் வடை ஆகியவற்றை ஒரு இலையில்  வாங்கி சாப்பிட்டான். 

 சாப்பிட்ட பொருளுக்குக்  காசு கேட்ட சிறுவனிடம், ""அடேய்  தம்பி! என் பெயர்  "ஈ'..... நான் உன் தந்தைக்கு மிகவும் வேண்டியவன் ! அவரிடம் போய் ஈ வந்து தின்பண்டங்களை சாப்பிடுகிறது என்று கூறு!'' என்றான்.

   அந்தக் கடையின் பின் புறத்தில் அவனது தந்தை பலகாரங்கள் செய்து கொண்டிருந்தார். சிறுவன் அவரிடம் சென்று ""அப்பா!  “ஈ” வந்து நம்ம கடை பலகாரங்களைத் தின்று விட்டார்!'' என்றான். 

   உடனே அவன் தந்தை,  ""ஈ க்கெல்லாம் “அவர்”  “இவர்” என்று என்ன மரியாதை வேண்டிக் கிடக்கு?  ஈ பலகாரம் தின்பது சகஜம் தானே! இதற்கெல்லாம் கடையைவிட்டு வரலாமா? மூங்கில் தட்டைப் போட்டு கூடையை மூட வேண்டியது தானே?'' என்றார்.

 ""அதில்லை அப்பா ! அவர் ஒரு மனிதர்!''என்று அவன் கூறினான்.  
 ""சரி சரி சீக்கிரம் போய்ப் பார்!'' என்று அவனது தந்தை அவனை விரட்டி விட்டார்.

  சிறுவன் வருவதற்குள் மேலும் சில பலகாரங்களை அள்ளிக் கொண்டு வெளியேறினான் அந்த இளைஞன். ஆளைக் காணாமல் அதிர்ச்சி அடைந்தான் சிறுவன். அரசன் மாறு வேடத்தில் தன்னைக் கண்காணித்துக் கொண்டிருப்பதை அந்த இளைஞன் உணரவில்லை.

  ஆத்திரமடைந்த அரசன் அந்த இளைஞனின் கையைப் பிடித்து இழுத்து,  ""சீ!.... உனக்கு வெட்கமாயில்லை? விலங்குகள் கூடத் தம் உணவை உழைத்தே உண்கின்றன!  உன்னைப் போலத் திருடித் தின்பதில்லை! வா! உன்னை அரசரிடம் ஒப்படைக்கிறேன் !'' என்றான்.

 ""அப்படியா!.... என்னோடு வா!.... என்னை விடப் பெரிய திருடனைக் காட்டுகிறேன்! உன்னால் முடிந்தால் அவனை அரசரிடம் கொண்டு போய் நிறுத்தி தண்டனை வாங்கிக் கொடு!'' என்றான்.

 மாறுவேடத்தில் இருந்த அரசன் சற்றே யோசித்தான். இளைஞனைப் பின் தொடர்ந்து சென்றான். 

 இளைஞன்  மாறு வேடமணிந்த அரசனுடன்,  ஒரு மாட்டு வண்டியில் ஒரு  வீட்டிற்குச் சென்றனர். 

 அந்த வீட்டுத் தலைவரிடம்,  தாங்கள் அரண்மனையில் இருந்து வரி வசூலிப்பதற்காக வந்திருப்பதாகக் கூறினான். 

அதற்கு அந்த விவசாயி, ""அய்யா! இம்முறை மழை பொய்த்து விட்டதால் விவசாயம் நடை பெறவில்லை! வழக்கமாகப் பத்து மூட்டை நெல்லை அளிக்கும் என்னால் இம்முறை இரண்டு மூட்டை நெல்லை மட்டுமே தர முடியும்!'' என்றார்.  

 ""சரி'' என்று கூறி அதைப் பெற்றுக் கொண்டான் அந்த இளைஞன்.

  இப்படியாக ஒவ்வொரு வீட்டிலும் நெல்லை வசூலித்தனர். நேரே நெல் வசூலிக்கும்  அதிகாரியிடம் சென்று மாட்டு வண்டியுடன் நெல் மூட்டைகளை ஒப்படைத்தனர். அந்த அதிகாரி மாட்டு வண்டியில் இருந்து இரண்டு நெல் மூட்டைகளை  எடுத்துத் தன் வீட்டில் வைத்து விட்டு அதற்கு பதிலாக இரண்டு மூட்டைத் தவிட்டை வைத்தான். இதைக் கண்ட அரசனுக்கு  ஆத்திரத்தில் உள்ளம் கொதித்தது.  இருந்தாலும் தன்னை அடக்கிக் கொண்டான்.

""என்னைப் பெரிய திருடன் என்றாயே? இப்பொழுது பார்த்தாயா?.... இன்னும்  இதை விடப் பெரிய திருடனைக் காட்டுகிறேன்!'என்றான் அந்த இளைஞன். இப்படி ஒவ்வொரு பகுதியிலும் வசூலிக்கும் அதிகாரிகள் அவற்றை அரசாங்கத்தின் கருவூலத்திற்குக்  கொண்டு சென்றனர். அடுத்த படியாக இளைஞன் அரசனை அந்த இடத்திற்கும் அழைத்து வந்தான்.          தலைமைக்  கருவூலத்தில் இருந்த முதன்மை அதிகாரி கள்ளைக் குடித்து  மயங்கிக் கிடந்தான். ஒவ்வொரு துணை அதிகாரியும் அவனுக்கு மேலும் சில பானைக் கள்ளைக்  வாங்கிக் கொடுத்துவிட்டு இரண்டு அல்லது மூன்று மாட்டு வண்டிகளை மட்டும் அரசுக் கருவூலத்திற்குக்  கொடுத்தனர். ஆறு , ஏழு வண்டிகள் எனத் தம் இஷ்டம் போல் கூறி ஓலையில் எழுதி அரசு முத்திரை பெற்றுச் சென்றனர். இதைக் கண்ட அரசனின் இரத்தம் கொதித்தது . மறு நாள் அந்தத் தலைமை அதிகாரி  பிரதம மந்திரியிடம் மழை பொழிவின்மையால் மிகக் குறைந்த அளவே வரி வசூலிக்க முடிந்தது என்று கூறினான்.

 அந்தப் புரத்தில் சதுரங்கம் விளையாடிக் கொண்டிருந்த பிரதம மந்திரி அதைச் சரி பார்க்க சோம்பல் பட்டுக் கொண்டு “""சரி சரி,  நீ சொன்னால் எல்லாம் சரியாகத் தான் இருக்கும்!'' என்று கூறி அவனை அனுப்பி  வைத்தான்.

 மாறு வேடத்தில் இருந்த அரசனுக்கு அதையும் காட்டிய இளைஞன், ""பார்த்தாயா? வயிற்றுப் பசிக்காகத் திருடிய நான் திருடனா? இல்லை அரசு சம்பளம் பெற்றுக் கொண்டும் உல்லாசத்திற்காகத் திருடும் இவர்கள் திருடர்களா? யார் பெரிய திருடன் ? யாரை முதலில் தண்டிப்பீர்?'' என்றான். அரசனால் இதற்கு பதில் ஏதும் கூற முடியவில்லை.

 ""நாளை அரண்மனைக்கு வந்து இந்த விஷயத்தை அரசனிடம் கூறுவாயாக!''என்று இளைஞனிடம் கூறினான்.

  மறு நாள் அரண்மனைக்கு வந்த இளைஞன்  அரசனை அடையாளம் கண்டு கொண்டான்! மிரண்டு போனான்! அச்சத்தால் பேச முடியாமல் தவித்தான். அரசன் அவனைப் பார்த்து,  "" இவர்கள் அனைவரும் குற்றம் செய்கின்றார்கள் என்பதை இத்தனை நாளும் அறியாமல் இருந்த நானே பொறுப்பற்றவன்!'' என்றான். இதைக் கேட்ட பிரதம மந்திரியும், பிற அமைச்சர்களும் வெட்கித் தலை குனிந்தனர். தம் தவறுகளைத் திருத்திக் கொள்வதாக உறுதி  அளித்தனர். இது நாள்வரை பிறரிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு அதை மேற் பார்வை கூடச் செய்யாமல் இருந்தது எவ்வளவு தவறு  என்பதை மன்னனும் உணர்ந்து கொண்டான். எனினும் திருடுவது குற்றம்... ஆதலால் அந்தத் திருட்டு இளைஞனுக்கு சில நாட்கள் சிறை தண்டனையையும் வழங்கினான். தன் கடமையைச் சரிவரச் செய்யலானான். சில வருடங்களில் நாட்டின் நிலை உயர்ந்தது. சரியான வேலை வாய்ப்பு கிட்டியதால் நாட்டில் கொலை, கொள்ளை,திருடு போன்ற சம்பவங்கள் நடைபெறவில்லை.

நல்ல அரசனின் இலக்கணமாகத்  திருவள்ளுவர் “செங்கோன்மை” அதிகாரத்தில், 
குடிபுறங் காத்தோம்பிக் குற்றங் கடிதல்
வடுவன்று வேந்தன் தொழில்.   -என்கிறார்.

 இதன் பொருள் குடி மக்களைப் பிறர் வருத்தாமல் காத்துத்  தானும் வருத்தாமல் காப்பாற்றி அவர்களுடைய குற்றங்களைத் தண்டனையால் ஒழித்தல் அரசனுடைய தொழிலாகும் ; அது பழியாகாது என்பதாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.