உழைப்பாளி! - தூங்கு மூஞ்சி மரம்

நான் தான் தூங்கு மூஞ்சி மரம் பேசறேன். எனது தாவரவியல் பெயர் சாமானியா சாமன் என்பதாகும். நான் மைமோசாசியி குடும்பத்தைச் சேர்ந்தவன்.
 உழைப்பாளி! - தூங்கு மூஞ்சி மரம்
Updated on
2 min read

மரங்களின் வரங்கள்!
 என்ன குழந்தைகளே நலமாக இருக்கிறீர்களா ?
 நான் தான் தூங்கு மூஞ்சி மரம் பேசறேன். எனது தாவரவியல் பெயர் சாமானியா சாமன் என்பதாகும். நான் மைமோசாசியி குடும்பத்தைச் சேர்ந்தவன். என் தாயகம் மத்திய அமெரிக்கா. நான் சுமார் 60 அடி முதல் 80 அடி வரை வளருவேன். எனக்கு சாமானியா, குரங்கு ஓடு, மழை மரம், பண்ணி வாகை என்ற வேறு பெயர்களும் உண்டு. நான் என்னால் முடிந்தவரை பூமியை குளிர்விப்பேன்! நான் பகல் நேரத்தில் பட்டைகளிலும், இலைகளிலும் ஈரப்பதத்தைச் சேமித்து வைத்துக் கொள்வேன். இரவில் அதை மழைத் தூறல் போல உதிர்ப்பேன். அதனால என்னை மழை மரம் என்றும் சொல்றாங்க.
 என் மரத்தின் மென் பகுதி வெண்மை நிறமாகவும், வைரப் பகுதி கருமை நிறமாகவும் இருக்கும். மாலை நேரம், மேகமூட்டம் அல்லது மழை நாளில் என் இலைகள் மூடிக்கொள்ளும், அப்போது தானே மழை நீர் பூமிக்கு வர ஏதுவாக இருக்கும். ஆனால், சிலர் என் பெருமையை உணராமல் தூங்குமூஞ்சின்னு சொல்லி என்னை அவமானப்படுத்தறாங்க. என்னை சோம்
 பேறின்னு சொல்லாதீங்க ப்ளீஸ்....
 என் அடி மரம் குட்டையாகவும், மேல் குடை போல் பரந்தும் இருக்கும். இவை இரட்டை கூட்டிலை. அதில் 2 முதல் 4 இணை ஈர்க்குகளும், ஒவ்வொரு ஈர்க்கிலும் 2 முதல் 8 இணைச் சிற்றிலைகள் இருக்கும். இரவில் சிற்றிலைகள் கைகளைக் கூப்புவது போல், இணையாக மடிந்து கொண்டு தொங்கும். அந்திசாயும் நேரத்திலும், மேகமூட்டமான காலங்களிலும் என்னிலைகள் மூடி தொங்கிக் கொண்டிருப்பதால என்னை தூங்குமூஞ்சி மரமுன்னு சொல்றாங்க. நான் ஒண்ணும் சோம்பேறியில்லை. மழை வரும் சமயத்திலும் என் இலைகள் மூடிக்கொள்ளும். என் மரத்தை சில வண்டுகள் இளந்திசுக்களை குத்தி சாற்றை உறிஞ்சும். அப்போ சாறு சிறு மழைத் துளிகள் போல சிந்துவதுண்டு.
 என் கனியும், இலையும் கால்நடைகளுக்கு நல்ல தீனி, பால் அதிகம் கொடுக்கும். பிண்ணாக்கிற்கு சமமான சத்து என் மரத்தின் காய்களிலிருந்து கிடைக்கிறது. என் இலைகளை தழை உரமாகவும் பயன்படுத்தலாம். என் கனியில் புரோட்டின் 12 சதவீதம், கொழும்பு 2 சதவீதம், கார்போஹைட்ரேட் 55 சதவீதமிருக்கு. நான் இரவிலும் ஆக்ஸிஜனை வெளியிடுவேன். சமீபத்தில் இந்தோனேசியாவில் மேற்கொண்ட ஓர் ஆய்வில் 15 மீட்டர் வளர்ந்த மரம் ஆண்டொன்றுக்கு 28.5 டன் கார்பன்டை ஆக்சைடை உட்கொள்வதாக கூறியுள்ளது. என் பூக்கள் மார்ச் முதல் ஜுன் வரை பூக்கும். பூக்கள் சிவப்பு - வெள்ளை நிறத்தில் காணப்படும்.
 என் இலைகளிலும், காய்களிலும் நீர், புரதம், கொழுப்பு, நார்ப்பொருள், மாவுப் பொருள், உலோக உப்புகள் அடங்கியுள்ளன. என் இலைகளை உலர்த்தினால் 4 சதவீத அளவில் நைட்ரஜன் கிடைக்கும். என் காய்களை இடித்துத் தூளாக்கி, கால்நடைகளுக்கு தீவனமாகக் கொடுக்கலாம். என் மரப்பட்டையில் ஆல்கலாய்டுகள் உள்ளன. மேலும், காலிக் அமிலம், குளுகோஸ், சுக்ரோஸ், கொழுப்பு அமிலம் போன்றவைகளும் உள்ளன.
 பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், ஜமைக்கா, வெனிசுலா, கொலம்பியா நாட்டு மக்கள் என் அருமை, பெருமையை நன்கு உணர்ந்து என்னை பல வகைகளில் பயன்படுத்துறாங்க. என் பட்டை அல்லது இலைகளைத் தூளாக்கி தேநீர் அல்லது சுடுத்தண்ணீரில் கலந்து குடித்தால் மலச்சிக்கல் இருக்காது, இரத்த அழுத்தமும், தலைவலியும், வயிற்று வலியும், நீங்கிடுமுன்னு சொல்றாங்க. வயிற்றுப் போக்கு, குடல் அழற்சியும், சளியும் நீங்க என்னை பயன்படுத்தறாங்க. குறைந்த கனமுடைய பொருள்களைச் செய்ய நான் பயன்படறேன். என் விதைகளை மென்று வந்தீர்களேயானால் நாள் பட்ட தொண்டைப் புண் விரைவில் குணமாகும். என் இலைகளின் சாறு காசநோய்க்கு அருமருந்து. கொலம்பியா நாட்டில் என் பழத்தை மயக்க மருந்து தயாரிக்க பயன்படுத்தறாங்க. என் மரத்திலிருந்து பிசினும் எடுக்கறாங்க, இதை பசையாகவும் பயன்படுத்தலாம். என் தமிழாண்டு மன்மத. நன்றி குழந்தைகளே ! மீண்டும் சந்திப்போம்.
 (வளருவேன்)
 -பா.இராதாகிருஷ்ணன்
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com