

கூடா நட்பாம் சோம்பலுடன்
கூடிக் குலவிப் பழகாதே!
கூடவே வந்து குழிபறிக்கும்!
குப்புற உன்னைக் கவிழ்த்து விடும்!
சோம்பல் உதறிச் சுறுசுறுப்பாய் - அதி
காலையில் பளிச்சென எழுந்திடுவாய்!
படுத்த படுக்கை, தலையணை எல்லாம்
உடனே சுருட்டி வைத் திடுவாய்!
காலைக் கடனை முடித்துவிட்டுக்
கை, கால், முகத்தைக் கழுவி விடு!
வெளியில் சென்று நடை பழகு!
வைகறை அழகை ரசித்துப் பார்!
காய்த்தலை, பூத்தலைத் தாவரங்கள்
காலத்தில் செய்யாது இருந்ததுண்டா?
சூரியன், நிலவு, காற்று என்றும்
சோம்பிப் படுத்ததைப் பார்த்ததுண்டா?
வானில் பறக்கும் பறவை பார்!
வனத்தில் விரையும் விலங்கைப் பார்!
தரையில் ஊர்ந்திடும் எறும்பைப் பார்!
தேனடை மொய்க்கும் ஈக்கள் பார்!
சாகும் வரைக்கும் சுறுசுறுப்பாக
சலிப்பே இன்றி உழைத்தலைப் பார்!
இயற்கை சோம்பி இருந்துவிட்டால்
இந்த உலகம் இயங்கிடுமா?
தன்னம்பிக்கை, முயற்சி எல்லாம்
முன்னேற்ற த்திற்கு வழிகோலும்!
சோம்பலைத் தூர எறிந்துவிட்டால்
சுறுசுறுப்பாக மகிழ்ச்சி வரும்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.