முத்துக் கதை!: ஊதிய உயர்வு!

அழகப்பனுக்குச் சொந்தமாக ஓர் உணவகம் இருந்தது. அதில் பணி செய்யும் ஊழியர்கள் அவரைச் சந்தித்தனர். அவரிடம் சம்பளத்தை உயர்த்திக் கேட்டனர்.""நாளை பார்க்கலாம்!'' என்றார் முதலாளி அழகப்பன்.
முத்துக் கதை!: ஊதிய உயர்வு!


அழகப்பனுக்குச் சொந்தமாக ஓர் உணவகம் இருந்தது. அதில் பணி செய்யும் ஊழியர்கள் அவரைச் சந்தித்தனர். அவரிடம் சம்பளத்தை உயர்த்திக் கேட்டனர்.
""நாளை பார்க்கலாம்!'' என்றார் முதலாளி அழகப்பன்.
அன்று இரவு 10 மணி.
கடையை மூடும் நேரம் வந்தது. ஒரு வயதானவர் கடையின் வாசலில் வந்தார். அவர், ""சாப்பிட என்ன இருக்கு?'' என்று கேட்டார்.
கல்லாவில் இருந்த காசி அந்த வயதானவரிடம், ""எல்லாம் முடிந்து போய்விட்டது!.... '' என்றார்.
பெரியவர் மீண்டும், ""ஐயா!.... எனக்கு ரொம்பப் பசிக்குதுங்க..... பக்கத்திலே எதுவும் கடை இல்லை.... எல்லாம் மூடிட்டாங்க.... ஏதாவது இருக்கான்னு பாருங்க.... '' என்றார்.
காசி உள்ளே குரல் கொடுத்தார்.... ""இல்லை,..... ஒண்ணும் இல்லை!'' என்றே பதில் வந்தது.
அப்போது உள்ளே இருந்து வந்த கார்மேகம், ""ஐயா, கொஞ்சம் இருங்க!.... ஒரு பத்து நிமிஷம் வெயிட் பண்ணுங்க!... இப்படி உட்காருங்க!'' என்றான்.
பெரியவரும் காத்திருந்தார்.
சிறிது நேரத்தில் "சுடச்சுட உப்புமா' கொண்டு வந்து பரிமாறினான். பெரியவர் பில்லைக் கொடுத்துவிட்டு, மனதாற வாழ்த்திவிட்டுச் சென்றார்.
மறுநாள் முதலாளி அழகப்பன் சம்பள உயர்வு அறிவித்திருந்தார்.
எல்லோருக்கும் ஐநூறு ரூபாய் உயர்த்தியிருந்தார். கார்மேகத்துக்கு மட்டும் சம்பள உயர்வு ஆயிரம் ரூபாய்!
மற்ற ஊழியர்கள், ""ஏன் கார்மேகத்துக்கு மட்டும் ஆயிரம் ரூபாய்?'' என்று கேட்டனர்.
அழகப்பன் அவர்களைப் பார்த்து, ""கடை மூடிய நிலையிலும் பசியுடன் வந்த வாடிக்கையாளரை கவனித்தது கார்மேகம் மட்டும்தானே!.... அதுதான் ஒரு பணியாளரின் கடமை!.... அவனுக்குப் பசியுடன் வந்த பெரியவரைப் பார்த்ததும் கனிவு பிறந்து விட்டது!.... உடல் அசதியைக்கூடப் பாராமல் சுறுசுறுப்பாக உப்புமாவைக் கிளறி அவர் பசியை ஆற்றியிருக்கிறான்.... மனித நேயம் மிக்கவனும், உழைப்பிற்கு அஞ்சாதவனும் ஆகிய அவனுக்கு ஊதிய உயர்வு கிடைப்பதில் நீங்களும் மகிழ்ச்சி அடையுங்கள்!..... அதுமட்டுமல்ல!..... அந்தப் பெரியவரை அனுப்பி வைத்ததும் நான்தான்!''
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com