பாராட்டுப் பாமாலை! - 66: சாதனைச் செல்வி சம்ஹிதா வாழ்க!

பாட்டுத் திறத்தால் பார் போற்றும் பாரதிப் புலவன் பிறந்தநாள்நூற்று முப்பத் தெட்டதனை 
பாராட்டுப் பாமாலை! - 66: சாதனைச் செல்வி சம்ஹிதா வாழ்க!

பாட்டுத் திறத்தால் பார் போற்றும் 
பாரதிப் புலவன் பிறந்தநாள்
நூற்று முப்பத் தெட்டதனை 
இளசையில் விழாவாய் எடுத்தனரே

நடுநிலை நாளிதழ் தினமணியில் 
நற்பெரும் முயற்சித் திருவினையால் 
விடுதலைக் கவியின் சீர் போற்றும் 
வித்தகர் தமக்கும் விருதளித்தார்

சேதுவைக் கட்டிய ஸ்ரீராமன் 
சிந்தை கவர்ந்த சிற்றணிபோல் 
மேதகு ஆளுநர் பாராட்டை 
வெகுவாய்ப் பெற்றார் சம்ஹிதா

ஆற்றிய அருஞ்செயல் என்னென்று 
அறிந்தால் வியப்பில் ஆழ்ந்திடுவோம்!
போற்றும் பாரதி திருவுருவைப்
பொற்புற வடித்தார் பாக்குத்தட்டில்

வடித்த ஓவியம் ஒன்றல்ல....
வனப்பாய் நூற்று முப்பத்தெட்டாம்!
எடுத்த நேரம் அதை முடிக்க 
இருபத்தி மூன்று மணியளவாம்!

பாளை நகரில் வகுப்பெட்டில் 
பயிலும் மாணவி சம்ஹிதா
ஆளுநர்க்கதனைப் பரிசளித்தார்
அவரும் வியந்து பாராட்டினார்!

பாலர் பள்ளிப் பருவத்தில் 
பற்றுதல் கொண்டார் வரைகலையில்
மேலும் ஓவியப் பயிற்சியினால் 
மெத்த வளர்ந்தது மேதைமையே!

போட்டிக் களத்தில் சம்ஹிதா 
போற்றும் பரிசுகள் பல வென்றார்!
பாட்டுக் கரசன் பாரதிமேல் 
பக்தியும் பற்றும் மிகக் கொண்டார்!

நோற்ற பக்தியில் வெளிப்பாடே
நூற்று முப்பத் தெட்டோவியம்!
சாற்றும் சாதனைச் சம்ஹிதாவைச் 
சான்றோர் மதித்துப் பாராட்டினார்!

ஓவியம் நல்லிசை யோகாவுடன் 
ஓதும் கல்வித் திறன் கொண்டார்
மேவிய புகழுடன் சம்ஹிதாவை 
மேன்மை பெற்றிட வாழ்த்திடுவோம்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com