மரங்களின் வரங்கள்! நீலத் நிறத்தழகன் - காயா மரம்!

நான் தான் காயா மரம் பேசறேன். எனது அறிவியல் பெயர் காயா செனிகாலென்சிஸ் என்பதாகும்.
மரங்களின் வரங்கள்! நீலத் நிறத்தழகன் - காயா மரம்!
Updated on
1 min read

குழந்தைகளே நலமா ?
 நான் தான் காயா மரம் பேசறேன். எனது அறிவியல் பெயர் காயா செனிகாலென்சிஸ் என்பதாகும். நான் மேலஸ்டோமட்டாசியே குடும்பத்தைச் சேர்ந்தவன். எனக்கு காயான், காசா, பூவை, பூங்காலி, அஞ்சனி, பூவை, பூங்காலி என வேறு பெயர்களும் உண்டு. என்னை ஆங்கிலத்தில் கார்ப்பா என அன்போடு அழைப்பாங்க. அதிக மழை பொழிவுள்ள இடங்களிலும், ஆற்றுபடுகையை ஒட்டிய இடங்களிலும், மரங்களே வளராத இடங்களிலும் நான் வளருவேன். பூவால் பெயர் பெற்ற மரங்களுள் நானும் ஒருவன். கார்காலத்தில் மலரும் என் பூக்கள், காலையில் மலர்ந்து இரவில் உதிரும் தன்மையன. என் அரும்பு முனை கருமையாகவும், மலர்ந்தால் மயில் கழுத்துப் போன்று பளபளக்கும் நீல நிறத்திலிருக்கும். அது மெல்லியதாகவும், மணமுடையதாகவும் இருக்கும். அது காண்பவர்கள் உள்ளத்தைக் கவர்ந்திழுக்கும்.
 நான் இலை உதிரா சிறு மரம். அதனால் தான், "காடுகள் அழிந்தாலும் காயா அழியாது' என்று சொல்வதுண்டு. திருமாலை காயாம்பூ மேனியன் என்பர். ஏன்னா என் மலர் நீல நிறத்திலிருக்கும். பரிபாடலில் திருமாலின் உடல் அழகுக்கு உவமையாக சொல்லப்பட்ட மலர் காயா மலர். என் பூ திருமாலை தெய்வமாகக் கொண்ட முல்லை நிலத்துக் கருப்பொருள்களில் ஒன்று. நான் ஒரு பசுமை மாறா மரமாவேன்.
 கபிலர் இயற்றிய குறிஞ்சிப்பாட்டில் கூறப்பட்டுள்ள தொன்னூற்றொன்பது மலர்களுள் என் மலரும் ஒன்று என்பது எனக்குப் பெருமிதத்தைத் தருகிறது. பழமொழி நானூறு 93-ஆம் பாடலில் "பூத்தாலும் காயா மரம்' என்று என்னைப் பற்றிய குறிப்பிருக்கு. என் பூக்கள் மயில் கூட்டம் போல் பூத்துக் கிடக்கும். என் பூக்களை வாசனை திரவியம் தயாரிக்க பெரிதும் பயன்படுத்தறாங்க. பழங்காலத்திலிருந்து என் பட்டை பல்வேறு மருத்துவப் பொருள்கள் தயாரிக்க பயன்படுது.
 எங்கிட்ட உறுதித் தன்மையும், உழைப்புத் திறனும் இருப்பதால் நான் கட்டுமானப் பொருள்கள் தயாரிக்கவும், கட்டுமான தொழில்களுக்கும், வீட்டு உபயோகப் பொருள்கள் தயாரிக்கவும், விலை உயர்ந்த மரச்சாமான்கள் தயாரிக்கவும், கைபிடிகள் தயாரிக்கவும். கதவு, ஜன்னல், சிற்பங்கள் தயாரிக்கவும் பெரிதும் பயன்படுகிறேன். ஏழை மக்கள் விறகிற்காகவும், கரி உற்பத்திக்காவும் என்னை பயன்படுத்தறாங்க.
 ஒரு வருடத்திற்கு திட்டமிட்டால் தானியத்தை பயிரிடு, பத்து வருடங்களுக்கு திட்டமிட்டால் மரங்களை நடு, நூறு வருடங்களுக்குத் திட்டமிட்டால் நல்ல மனிதர்களை கண்டெடு என்று அறிஞர் பெருமக்கள் சொல்றாங்க. மரங்கள் இயற்கைத் தாய் பெற்றெடுத்த அதிசய குழந்தைகள். மண்ணிலுள்ள நீரும், இதர சத்துகளுடன் விண்ணிலிருந்து சூரிய ஒளியுடன் காற்றும் இணைந்து உங்களுக்குக் கிடைத்த அதிசய படைப்பு தான் மரங்களாகும். எங்கும் வாழும் உயிரினங்கள் பன்னெடுங்காலமாக பெருகி வாழ ஏற்று சூழ்நிலைய உருவாக்கி, சிறந்த ஒரு பரிணாமச் சேவையை நாங்கள் செய்து வருகிறோம். நன்றி குழந்தைகளே, மீண்டும் சந்திப்போம்.
 (வளருவேன்)
 }பா.இராதாகிருஷ்ணன்
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com