
ஒரு வானம்பாடி வானில் பறந்து கொண்டிருந்தது. அப்போது அது ஒரு கழுகைச் சந்தித்தது. கழுகைச் சந்தித்த வானம்பாடி, "வணக்கம் அண்ணே!.... நலமா இருக்கீங்களா?'' என்று கேட்டது.
கழுகுக்குத் தான் சக்தி வாய்ந்த பெரிய பறவை என்ற கர்வம் இருந்தது! மேலும் தான் பறவைகளின் ராஜா என்ற நினைப்பும் அதற்கு இருந்தது. இந்தச் சின்னஞ்சிறிய பறவை தன்னைப் பார்த்து தைரியமாகப் பேசுவதைக் கேட்ட கழகுக்கு சற்று கோபம் ஏற்பட்டது.
"இதோ பார்!.... நான் பறவைகளுக்கு எல்லாம் ராஜா!.... நான் பேசுவதற்கு முன்னால் நீங்களாக வந்து என்னிடம் பேசக்கூடாது! இது உனக்குத் தெரியாதா?'' என்று கழுகு கேட்டது.
"நாமெல்லாம் ஒரே பறவைக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்தானே!.... நான் உன் சகோதரப் பறவைதான் என்று எண்ணினேன்..... அதனால்தான் நலம் விசாரித்தேன்! '' என்றது வானம்பாடி.
"சகோதரப் பறவையா?....அதிகப் பிரசங்கித்தனமாகப் பேசாதே!....நீயும், நானும் ஒரே குடும்பம் என்று யார் சொன்னது?....''
"என்னாலும் உன்னளவுக்குப் பறக்க முடியும்!.... அது மட்டுமல்ல!.... என்னால் பாடவும் முடியும்!.... இந்த உலகத்தில் இருக்கிற ஜீவராசிகளை என் பாட்டால் மகிழ்விக்க முடியும்!.... ஆனால் உன்னால் யாரையும் சந்தோஷப்படுத்தவோ, உற்சாகப் படுத்தவோ முடியாது!....'' என்றது வானம்பாடி.
கழுக்குக் கடும் கோபம் ஏற்பட்டது!
"அற்ப ஜீவியே!.... நீ ரொம்ப அகம்பாவம் பிடித்தவன்!.... நான் நினைத்தால் என் கூரிய அலகால் உன்னைக் கொத்தியே கொல்ல முடியும்! ஜாக்கிரதை!'' என்றது கழுகு.
வானம்பாடி உயரே எழும்பி வட்டமடித்தது. சிறகுகளை அசைக்காமல் தாழப் பறந்துவந்து கழுகின் முதுகில் உட்கார்ந்து அதன் சிறகுகளைக் கொத்திற்று. கழுகு சினத்தோடு, வானம்பாடியைச் சுமந்தபடி கொஞ்ச நேரம் பறந்தது. நேரம் ஆக, ஆக அதற்கு சோர்வாகிவிட்டது! குன்றின் மீது வந்து அமர்ந்தது! வானம்பாடி இறங்குவதாக இல்லை!
இதையெல்லாம் ஒரு ஆமை பார்த்துக் கொண்டிருந்தது. அது கழுகைப் பார்த்துச் சிரித்தது!
"ஏன் என்னைப் பார்த்துச் சிரிக்கிறாய்?'' என்று கேட்டது கழுகு.
"நீ வானம்பாடியின் வாகனமாக ஆகிவிட்டாய்!... உன் முதுகில் அது சவாரி செய்கிறது!.... பார்ப்பதற்கு அது உன்னைவிடச் சிறந்த பறவை போல் தோன்றுகிறது!.... அதை நினைத்துத்தான் சிரித்தேன்!'' என்றது ஆமை.
"நீ உன் வேலையைப் பார்த்துக்கொண்டு போ!.... இது எனக்கும், என் சகோதரப் பறவை வானம்பாடிக்குமான குடும்ப விவகாரம்!'' என்றது கழுகு.
"ஒரு வழியா எனக்கு அண்ணன்னு ஒத்துக்கிட்டியே அதுவே போதும்!...'' என்று கூறிவிட்டு கழுகின் முதுகை விட்டுப் பறந்த வானம்பாடி தன் இனிய குரலால் ஒரு பாட்டு பாடியது.
அதை ரசித்துக் கொண்டே பறந்தது கழுகு.
(கலீஸ் ஜிப்ரானின் கதை)
க.பன்னீர் செல்வம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.