மரங்களின் வரங்கள்!

இந்திய கலாசாரத்துடன் தொடர்புடையவன் பாக்கு மரம்
மரங்களின் வரங்கள்!

இந்திய கலாசாரத்துடன் தொடர்புடையவன் பாக்கு மரம்

குழந்தைகளே நலமா?

நான் தான் பாக்கு மரம் பேசுகிறேன். எனது தாவரவியல் பெயர் அரிகா கேட்டிச்சு. நான் அசிகேசியே குடும்பத்தைச் சேர்ந்தவன். என் பிறப்பிடம் மலேயா நாடு என தாவரவியலார்கள் சொல்கின்றனர். என்னை இந்தியக் கடற்கரையோரப் பகுதிகளிலும், மலையடிவாரங்களிலும் அதிகமாகக் காணலாம். நான் தென்னையைப் போல் கடற்கரை சார்ந்த உப்பு மண்ணில் நன்றாக வளருவேன். எனினும், மலைகளில் 1000 மீட்டர் உயரம் வரை வளருவேன். நான் தமிழ்நாட்டு மக்களுடன் எப்போதும் தொடர்பில் உள்ளவன். நான் உங்களின் எல்லா சுபநிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்கிறேன் என்பதை நினைக்கும் போது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நான் இந்திய கலாசாரத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டவன். எந்த ஒரு விசேஷமான நிகழ்ச்சிக்கு வெற்றிலைப் பாக்கு வைத்து அழைப்பது இன்றும் நடைமுறையில் உள்ளது தானே குழந்தைகளே.

பாக்கினை உலகில் அதிகம் உற்பத்தி செய்யும் நாடு இந்தியா. உலகின் மொத்த உற்பத்தியில் 49.24 சதவீதம் இந்தியாவில் தான் உற்பத்தியாகிறது. இந்தியாவில் பாக்கு உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் மாநிலங்கள் கர்நாடகா, கேரளா மற்றும் அஸ்ஸாம். பாக்கு உற்பத்தியில் கர்நாடகம் முதலிடத்திலுள்ளது குழந்தைகளே. என்னிடமும் நிறைய மருத்துவ குணங்கள் இருக்கு.

உங்களின் பல் வலிக்கு நான் ஒரு சிறந்த நிவாரணியாவேன். வாய்ப்புண்கள், ஈறுகளில் ரத்தக் கசிவு, பல் வலி போன்றவற்றை குணப்படுத்த பாக்கு கஷாயத்தை கொப்பளித்தால் தீர்வு நிச்சயம். பாக்குத் தூளை உடலில் ஏற்படும் காயங்களில் வைத்து கட்டுவதன் மூலம் ரத்தப் போக்கை கட்டுப்படுத்துவதுடன், காயங்கள் விரைவில் ஆறும்.

குழந்தைகளே. உங்களுக்கு, வயிற்றுப் போக்கு மற்றும் குடல் பூச்சிகள் இருக்கா, பயப்படாதீங்க. பாக்கு கஷாயம் அருந்தினால் வயிற்றுப் போக்கு நின்று விடுவதுடன், குடல் பூச்சிகளும் வெளியேறும். இந்தியாவிலும், சீனாவிலும் நீண்ட காலமாக பாக்கைக் குடல்பூச்சி நீக்கியாக பயன்படுத்தி வந்துள்ளனர். கால்நடை மருத்துவர்கள் பாக்கை நாடாப்புழுவை நீக்கப் பயன்படுத்துவதுண்டு. பாக்கு ஊற வைத்த நல்லெண்ணெயை தடவினால் மூட்டு வலி மற்றும் மூட்டு வீக்கத்தைக் கட்டுப்படுத்தலாம். குழந்தைகளே, பாக்குக் கொட்டையில் அர்கோலின் என்னும் நச்சுத் தன்மை வாய்ந்த அல்கலாய்டு உள்ளது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இது நரம்பு மண்டலத்தைப் பாதிக்கக் கூடியது. பெருமளயில் உட்கொண்டால் பக்கவாதம் வரும் என்று எச்சரிக்கிறாங்க. இப்பொழுதெல்லாம் என் மீது ஏறி பாக்குக் கொட்டைகளைப் பறிக்க பயிற்சி தருகிறார்களாமே, இதிலிருந்தே நீங்க தெரிந்து கொள்ளலாம் நான் எவ்வளவு சக்தியானவன் என்று.

முற்றாத பாக்கை சிறிது நேரம் வாயில் அடக்கி வைத்து பின் துப்பினால் வாய் நாற்றம், வாய்ப்புண் ஆகியவை குணமாகும். முற்றாத பாக்குடன் சிறிது ஜாதிக்காய், கிராம்பு ஆகியவை சேர்த்து மென்று விழுங்கினால் மலச்சிக்கல் நீங்கும். உண்ட உணவு எளிதில் ஜீரணமாகும். குழந்தைகளே, வெறும் பாக்கை உட்கொண்டால் இரத்த சோகை, நரம்பு தளர்ச்சி உண்டாகும்.

குழந்தைகளே, சாலைகளில் காணப்படும் வேகத் தடுப்பான் மாதிரி காட்டாறுகளின் வேகத் தடுப்பான்கள் அடர்ந்த காடுகள் தான். மண் அரிப்பை மரங்கள் தான் தடுத்து நிறுத்துகின்றன. ஒரு நாட்டினுடைய தட்ப வெப்ப நிலையைச் சமன் செய்து ஒரே சீராக வெப்ப நிலையைப் பராமரிக்க காடுகள் பெரிதும் துணை புரிகின்றன. மரங்கள் சுற்றுப்புற சூழலை தூய்மைப்படுத்துகின்றன. எனவே, காடுகளை வெப்ப நிலைக் காப்பாளர்கள் என்றும் அழைக்கலாமல்லவா ? மரங்கள் கால்நடைகளுக்கும் உணவாகின்றன. மரம் வளர்ப்போம், மழை பெறுவோம். மிக்க நன்றி குழந்தைகளே, மீண்டும் சந்திப்போம்.

(வளருவேன்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com