மரங்களின் வரங்கள்!

என்ன குழந்தைகளே நலமாக இருக்கிறீர்களா ?
மரங்களின் வரங்கள்!
Updated on
2 min read

தெய்வீக மரம் பாரிஜாத மரம்

என்ன குழந்தைகளே நலமாக இருக்கிறீர்களா ?

நான் தான் பாரிஜாத மரம் பேசுகிறேன். என்னை தாவரவியல் அறிஞர்கள் அடான்சோனியா டிஜிடாடா என்று அழைக்கிறார்கள். காரணம், நான் அந்த வகை மரங்களைப் போன்று இருப்பது தான். அதாவது, குழந்தைகளே, அடான்சோனியா வகை மரங்கள் உலகில் எட்டே எட்டு இடங்களில் தான் இருக்கின்றன. எனக்கும் பவளமல்லிக்கும் சம்மதமில்லை. நான் வேறு பவளமல்லி என்பது வேறு.

என்னைப் பற்றி பல புராணக் கதைகள் உண்டு குழந்தைகளே. தேவர்கள் பாற்கடலைக் கடைந்து அமிழ்தம் பெற மேரு மலையை மத்தாகவும், வாசுகி எனும் பாம்மை கயிறாகவும் கொண்டு கடைந்தார்கள். அப்போது கற்பக மரம், ஹரிசந்தனம், சந்தனம், மந்தாரம் மற்றும் அடியேனும் பாற்கடலிலிருந்து வெளியே வந்தோம். எங்களை பஞ்ச தருக்கள் என்று அழைப்பாங்க.

என் பூக்கள் வாடாமலும், ஒளி வீசுவதாகவும் இருப்பதால் இந்திரன் என்னை சொர்க்கலோகத்திற்கு எடுத்துக்கிட்டு போயிட்டார். சிவன் திருமாலைப் பார்த்தார். திருமால் விடுவாரா, "பாரிஜாத மரம், உனக்கு சொந்தமல்ல, என்னையும், ஈசனையும் நாளும் வணங்கி வழிபடும் மக்களுக்குத் தான் சொந்தம், அவர்களின் நலமே நம் நலம் இந்திரா, அதுவே திருநீலகண்டனின் விருப்பம். எனவே பூமிக்கு அனுப்பி விடு' என இந்திரனிடம் சொன்னார். இந்திரனும் மனம் மகிழ்ந்து என்னை பூமிக்கு அனுப்பி வைத்தார். ஆனால், நான் என்ன பாவம் செய்தேன். துன்பம் தனித்து வருவதில்லை. கூடவே இன்னொன்றையும் கூட்டி வரும் அல்லவா.

குழந்தைகளே, நான் ஆதவன் மீது மிகவும் அன்பு காட்டினேன். அவரும் என்னைத் தான் நேசிப்பார்ன்னு நினைச்சேன். ஒரு நாள் அவர்கிட்ட போய், "என்னை இவ்வளவு, பிடிச்சிருக்கா, இவ்வளவு பிடிச்சிருக்கான்னு' என இரு கைகளையும் குவித்தும், விரித்தும் காண்பித்து கேட்டேன். நான் அவரை அவ்வளவு நம்பினேன். ஆனால், அவரோ "பாரிஜாதம், நீ அழகின் சிகரமாக இருக்கலாம். சிவனுக்கும், திருமாலுக்கும், இந்திரனுக்கும் பிடித்தவளாக இருக்கலாம். ஆனால், நீ என் மனதில் ஒரு மணல் அளவுக் கூட இல்லை என அனலைக் கக்கினார். இது எனக்கு பேரிடியாய் இறங்கியது. நான் தகித்தேன், அழுதேன், புரண்டேன், வெடித்து விம்மினேன், நான் அவர் மீது காட்டிய அன்பு கானல் நீராகி விட்டது. அதனால், மனமுடைந்து என்னையே நான் மாய்த்துக் கொண்டேன். ஆதவன் என்னை எரித்து விட்டார். ஆனாலும், நான் விடவில்லை, அந்த அஸ்தியிலிருந்து தான் நான் பாரிஜாத மரமாக உருவெடுத்தேன். நான் வளர்ந்ததும் என் கரம் பற்ற மறுத்த ஆதவன் என் பூக்களைக் பார்க்கக் கூடாது என்று முடிவெடுத்தேன். அதனால், நான் இரவிலே என் பூக்களை மலர்வித்து, அவர் என்னை காண்பதற்கு முன் என் பூக்களையெல்லாம் உதிர்த்து பூமித் தாய்க்கு மாலைச் சூட்டி மகிழ்கிறேன். என் பூக்கள் வெண்மையான இதழ்களைக் கொண்டு, ஆரஞ்சு நிற காம்பையும் கொண்டிருக்கும். என் பூக்கள் இரவு முழுவதும் ரம்மியான சுகந்தை மணத்தைப் பரப்பும்.

நான் திருமாலாலும், சிவனாலும் ஆசிர்வதிக்கப்பட்டவள். என்னை துளையிட முடியாது. என்னை நீங்கள் தொட்டு கண்களில் ஒற்றிக் கொண்டால் நான் உங்களின் மன வலி, உடல் வலி, துக்கம், சோர்வு ஆகியவற்றிலிருந்து உங்களை விடுவிப்பேன். உங்களின் அனைத்து வேண்டுதல்களையும் நிறைவேற்றும் சக்தி என்கிட்ட இருக்கு. மேலும், பாண்டவர்கள் தன் தாய் குந்தியுடன் கிண்டூர் வனத்தில் வசித்த போது, குந்திக்கு சிவபெருமானை பூஜை செய்ய எந்த மலர்களும் கிடைக்காத போது, அர்ஜுனன் தேவந்திரனை வணங்கி என்னை அளிக்கும்படி கேட்டார். இந்திரனும் தனது புதல்வனின் வேண்டுகோளுக்கிணங்க என்னை வழங்கினார்.

நான் இன்றும் உத்திரபிரதேச மாநிலம் பராபங்கிக்கு அருகிலுள்ள கிந்தூர் கிராமத்தில் இருக்கேன். இது குந்தி பிறந்த இடமாதலால் அவர் பெயராலேயே அழைக்கப்படுகிறது. நான் ஒரு பாலின மரமாவேன். அதாவது, என் கிளைகளை நட்டுவைப்பதன் மூலம் ஒரு போதும் என்னை வளர்க்க முடியாது. நான் விதைகள், பழங்கள் எதையும் உற்பத்தி செய்ய மாட்டேன். என் இலைகள், உங்களின் விரல் நுனி போல இருக்கும். மத்திய அரசு 1997-ஆம் ஆண்டு மார்ச், 8 உலக மகளிர் தினமன்று என் உருவம் தாங்கிய அஞ்சல்தலையை வெளியிட்டு என்னைப் பெருமைப்படுத்தியது. மன்னிசுடுங்க குழந்தைகளே, அழாதீங்க, என் சோகம் உங்களையும் தாக்கக் கூடாது. நன்றி, குழந்தைகளே, மீண்டும் சந்திப்போம்.

(வளருவேன்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com