மரங்களின் வரங்கள்!
குழந்தைகளே நலமா....
நான் தான் வாதநாராயண மரம் பேசறேன். எனது அறிவியல் பெயர் டெலானிக்ஸ் எலாட்டே என்பதாகும். நான் கயேசல் பினியோய்டையே குடும்பத்தைச் சேர்ந்தவன். எனக்கு வாதரக்காட்சி, ஆதிநாராயணன், வாதரசு, தழுதாழை, வாதமடக்கு என்ற வேறு பெயர்களும் உண்டு. என்னை ஆங்கிலத்தில் டைகர் பீம், ஒயிட் குல்மோஹர் என்றும் அன்பா அழைப்பாங்க. நான் வெளிர் மஞ்சள் நிறமான கட்டைகளைக் கொண்ட ஒரு மென்மையான மரமாவேன். இரு சிறகாகப் பிரிந்த சிற்றிலைகளைக் கொண்ட கூட்டிலைகளையும், உச்சியில் பெரிய வெள்ளை மற்றும் மஞ்சளான பூக்களையும், தட்டையான அரை அடி வரை நீண்ட காய்களையும் கொண்டிருப்பேன். வாதத்தைப் போக்கும் குணம் எங்கிட்ட இருக்கிறதாலே என்னை வாத நாராயண மரம் என ஆசையா அழைக்கிறாங்க.
களித்துப் பூச்சொரியும் என் காட்சி, குழந்தைகளே உங்களுக்கு, மயில் அழகாக தோகை விரித்து ஆடிக்கொண்டிருப்பதை போன்ற கண்கொள்ளாக் காட்சியாகு இருக்கும். என்னுடைய வேர், இலை, பட்டை ஆகியவை மிகுந்த மருத்துவ பயன் கொண்டவை. என் இலைகள் பார்ப்பதற்கு புளியமர இலைகளைப் போல சிறியதாக இருக்கும். என் இலைகளை கால்நடைகள் விரும்பி உண்ணும். என் மரத்தில் பூக்கள் பூத்துக் கொண்டேயிருக்கும்.
குழந்தைகளே, என் இலைகள் வாத நோய்க்கு நல்ல மருந்து. உங்க வீட்ல யாருக்காவது வாத நோய் இருக்கா ? கவலைப்படாதீங்க, என் இலையை நெய்யில் வதக்கி, உளுத்தம் பருப்பு, பூண்டு, இஞ்சி, கருவேப்பிலை, கொத்துமல்லி, மிளகாய், உப்பு, புளி சேர்த்து துவையல் செய்து வாரம் முறை உணவுடன் கலந்து சாப்பிட சொல்லுங்க, வாத நோய் இருந்த இடம் தெரியாது. மேலும், என் இலையுடன் சுக்கு, ஓமம், சீரகம் ஆகியவற்றை சேர்த்து அரைத்து சாப்பிட்டால் இதய நோய்கள் குணமாகும்.
என் இலையைப் பிழிந்து சாறு எடுத்து, சுக்கு, மிளகு, திப்பிலி, வெள்ளைக் கடுகு ஆகியவைகளை ஒன்றாகக் கலந்து காய்ச்சி அருந்தினால் கீல் வாதம், முடக்கு வாதம், நரம்புத் தளர்ச்சி, கை கால் குடைச்சல், மூட்டு வீக்கம், இடுப்பு வலி, இளம்பிள்ளை வாதம், ஜன்னி, மேகநோய் யாவும் போய்விடும். மலச்சிக்கலும் குணமாகும். இது மட்டுமா, என் இலைகளை உலர்த்தி, அரிசி தவிட்டுடன் சேர்த்து பொறுத்துக் கொள்ளும் சூட்டுடன் ஓத்தடம் கொடுத்தால் பக்கவாதம் குணமாகும்.
வைரம் பாய்ந்த என் உடம்பை நன்றாக தண்ணீரில் ஊற வைத்து, கெட்டியாக்கினால் நான் தேக்கு மரத்தை விட அதிக வலிமை உள்ளவனாக இருப்பேன். என் வேரை அரைத்து தயிருடன் கலந்து அருந்தினால் இரத்த சீதபேதி குணமாகும். நகசுத்தி இருக்கா, அப்போ உங்களுக்கு கடுமையான வலியுடன் நகக்கண்ணில் வீக்கம் இருக்குமே, பயப்படாதீங்க, என் இளந்தளிரை மைபோல் அரைத்து வெண்ணெயில் கலந்து வைத்துக் கட்ட இரு நாளில் குணமாகும். வலி உடனே சட்டென்று நிற்கும். என் இலை மட்டும் இல்லை குழந்தைகளே, என் பூக்களைப் பறித்து, காய வைத்துப் பொடியாக்கி, சூரணம் செய்து சாப்பிட்டாலும் பக்கவாத நோய் குணமாகும்.
மூலிகை மருத்துவக் குணம் கொண்ட நான் விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரத்தில் ஒரு காலத்தில் நிறைந்து காணப்பட்டு அந்தப் பகுதி மக்களுக்கு பல வகைகளில் பயன்பட்டு வந்தேன். இப்போ, சொல்லவே வாய் கூசுது. செங்கல் சூளைக்கு என்னை எரிப்பொருளாக பயன்படுத்தறாங்க. அதனால், என்னை வெட்டி அழிக்கிறாங்க, காப்பத்துங்க. மரங்கள் பணத்திற்காகவே வெட்டப்படுகின்றன. நாங்க உங்களுக்கு என்ன தப்புச் செஞ்சோம் சொல்லுங்க, பல வழிகளில் நாங்க உதவறோம். என் தமிழாண்டு சர்வதாரி. நன்றி குழந்தைகளே, மீண்டும் சந்திப்போம்.
(வளருவேன்)
-பா.இராதாகிருஷ்ணன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.