தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

மரங்களின் வரங்கள்!: புகையை உறிஞ்சும் - ஆயா மரம்

நான் தான் ஆயா மரம் பேசுகிறேன். எனது தாவரவியல் பெயர் ஹோலோப்டெலியே இன்டெகரிஃபோலியா என்பதாகும். நான் உல்மேசி குடும்பத்தைச் சேர்ந்தவன்.

News image
Updated On :10 அக்டோபர் 2020, 12:30 am

பா.இராதாகிருஷ்ணன்

குழந்தைகளே நலமா?

நான் தான் ஆயா மரம் பேசுகிறேன். எனது தாவரவியல் பெயர் ஹோலோப்டெலியே இன்டெகரிஃபோலியா என்பதாகும். நான் உல்மேசி குடும்பத்தைச் சேர்ந்தவன். எனக்கு ஆவி, ஆமிலி, தம்பச்சி என வேறு பெயர்களும் உண்டு. நான் ஒரு வெப்ப மண்டல மரம். நான் செடிப்பருவத்தில் குறைந்த வளர்ச்சியுடனும், முற்றிய பிறகு விரைவாகவும் வளருவேன். நல்ல சூழ்நிலை இருந்தால் நான் நூறடி உயரம் கூட வளருவேன். கடல் மட்டத்திலிருந்து 1000 மீட்டர் உயரமான பகுதிகளில் நான் வளருவேன். ஆனால், கரிசல் மண்ணில் நான் வளரவே மாட்டேன். ஆண்டுக்கு 300, 500 மில்லிமீட்டர் அளவு மழை பொழிவு உள்ள இடங்களில் கூட நான் சிறப்பாக வளருவேன்.

நான் இமயமலைத் தொடரின் வெளிப்பகுதியிலிருந்து, கேரள மாநிலம் வரை பரவியிருக்கிறேன். நான் மண்ணின் ஆழம் அதிகமாக இருந்தால் செழிப்பாகவும், குறைவாகயிருந்தால் குட்டையாகவும் இருந்து, மணற்பாங்கான பகுதிகளில் படர்ந்து வளருவேன். நான் மண் வளத்துக்கேற்ப நீட்டி, சுருக்கி மாற்றிக் கொண்ட தகவமைப்புக் கொண்டவன்.

குழந்தைகளே உங்களுக்கு என்னைத் தெரியாது. ஆனால், எனக்கு உங்களைத் தெரியும். நீங்க இரயில் வண்டியில் ஜிகு ஜிகுன்னு பயணம் செய்யும் போது உங்களைப் பார்த்து நான் கை அசைப்பேனே அப்போ என்னை நீங்க கவனிக்கலையா. அக்கால மக்கள் இரயில் தண்டவாளங்கள் அருகிலும் மற்றும் நெடுஞ்சாலைகளிலும் என்னை வளர்த்தார்கள்.

ஏன்னு கேளுங்க, அக்காலத்தில் இரயில் வண்டிகளை புகை வண்டிகள் என்று தான் அழைப்பாங்க. அந்தப் புகை வண்டிகளில் கரியை எரிபொருளாக பயன்படுத்தினாங்க. அப்போ அந்தப் புகை வண்டிகள் புகையை கக்கிக் கொண்டே ஓடும். புகைகளை உறிஞ்சும் ஆற்றல் எங்கிட்ட மற்ற மரங்களைக் காட்டிலும் நிறையவே இருக்கு. அதனால, அந்தக் கரும்புகைகளை உறிஞ்ச எங்களை நட்டு வளர்த்தாங்க. அந்த மகாராசன்கள் நட்டு வளர்த்த மரங்களைத் தான் நீங்க இன்று இரயில் பெட்டியில் ஜன்னல் ஓரம் அமர்ந்து பாக்கறீங்க. நான் வறட்சிக் காலத்தில் இலைகளை உதிர்த்து விடுவேன். என் இலைகள் அடர்த்தியாக இருப்பதால் நல்ல தழை உரம் நான் தருவேன். இலைச் சந்துகளில் பச்சை நிறத்தில் என் மலர்கள் கொத்துகளாகக் காணப்படும். என் விதைகள் மிகவும் மெல்லியவை, அரச இலையில் சிறிய விதையை ஒட்டினாற் போலயிருக்கும். விதைகளைச் சுற்றிலும் மெல்லிய படலம் படர்ந்திருக்கும். விதை முற்றியதும் காற்று மூலமாக விதைப் பரவல் உண்டாகி, ஜுன் - செப்டம்பர் அதாவது தென்மேற்குப் பருவமழைக் காலங்களில் இயற்கையாகவே முளைத்து விடும்.

என்னை இப்போதெல்லாம் பிளைவுட், கடைசல் வேலைபாடுகள் செய்ய, கட்டில்கள் செய்ய, மாட்டு வண்டிகள் செய்ய பயன்படுத்தறாங்க. என் பலகைகள், மஞ்சள் கலந்த சாம்பல் நிறத்தில் மிக கடினத் தன்மையுடனிருக்கும். என் இலைகள் கால்நடைகளுக்கு நல்ல தீவனம். ஏழை மக்களுக்கு எரிபொருளாகவும் உதவறேன்.

என் மரப்பட்டையை அரைத்து பற்றுப் போட்டால் வாயுவினால் உண்டான பிடிப்பு, குத்தல், குடைச்சல் குணமாகும். என் பட்டையை விழுதாக அரைத்து படர்தாமரை, சிரங்கு அழற்சி மேலே தேய்த்து வந்தால் அவையிருந்த இடம் தெரியாது. என் பட்டையை, வேர்களை அரைத்து வெந்நீரிலிட்டு குடித்தால் வயிற்று வலி, குடல் புழுக்கள், வாந்தி, தொழுநோய், நீரிழிவு நோய், மூல நோய் மற்றும் மூட்டுவலி சட்டுன்னு குணமாகும்.

குழந்தைகளே, மரங்களால் சூற்றுச்சூழல் மாசடையாது. மனித வாழ்வு நலமாகும். மரம் வளர்க்க மழை பொழியும். மழை பொழிய மக்களின் வறுமை ஒழியும். எனவே, மரம் நடுங்கள், நீங்கள் மண்ணில் வாழ, உங்கள் மனதில் அன்பு மலர்கள் பூத்துக் குலுங்க. நன்றி, குழந்தைகளே, மீண்டும் சந்திப்போம்.

(வளருவேன்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.