உயர்ந்தவர் யார்?

ஒருநாள்... காட்டில் வாழும் விலங்குகளில் உயர்ந்தவர் யார் என்று விவாதம் நடந்தது. 
உயர்ந்தவர் யார்?
Published on
Updated on
2 min read

ஒருநாள்... காட்டில் வாழும் விலங்குகளில் உயர்ந்தவர் யார் என்று விவாதம் நடந்தது.
அப்பொழுது சிங்கம் கூறியது ""காட்டு விலங்குகளிலேயே வீரம் மிக்கவன், வலிமையானவன் நான்தான்! காட்டுக்கு ராஜாவாகவும் இருக்கிறேன்... இதனால் விலங்குகளிலேயே நான்தான் உயர்ந்தவன்...!'' என்றது.
""இதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன்...'' என்று குரல் வந்த திசையை நோக்கி அனைத்து விலங்குகளும் திரும்பிப் பார்த்தன.
அங்கே யானை தும்பிக்கையை உயர்த்தி இடமும் வலமுமாக ஆட்டிக்கொண்டே ""மாட்டேன்... மாட்டேன்...'' என்று கத்தியபடி வந்து நின்றது. அதைக் கண்டு சிங்கம் கோபமாக ""நான் உயர்ந்தவன் இல்லையென்றால் இந்தக் காட்டில் வேறு யார் உயர்ந்தவர் என்று சொல்..!'' என்றது.
""சொல்கிறேன்...! யானை இருந்தாலும் ஆயிரம் பொன்; இறந்தாலும் ஆயிரம் பொன் என்ற பழமொழியை நீங்கள் அறியவில்லையா?''
""அறிந்திருக்கிறோம்..! அதற்கென்ன இப்போது..?'' -சிங்கம் சிடு சிடுத்தது.
""சிங்க ராஜாவே... நீங்கள் வலிமையானவராக இருக்கலாம். ஆனால் உங்களிடம் செல்வம் இல்லை. உங்கள் பற்களை விற்றால் செல்லாத 50 பைசா கூட தரமாட்டார்கள். உங்கள் தோல் புலித்தோலை விட மட்டம். வீரத்தை விட செல்வம் உயர்ந்தது. அந்த அடிப்படையில் பார்த்தால் என்னிடமுள்ள மிகப்பெரிய தந்தங்கள் இறைவன் அளித்த கொடை..! இவை விலை மதிப்பு மிக்கவை..! எனவே நான்தான் உயர்ந்தவன்..!'' என்று யானை
பிளிறியது.
""இல்லை... இல்லை... இதை நான் மறுக்கிறேன்...! நீங்கள் இரண்டு பேருமே உயர்ந்தவர்கள் இல்லை..!'' என்று கத்திக்கொண்டே அங்கு பஞ்சவர்ணக் கிளி ஒன்று பறந்து
வந்தது.
சிங்கமும், யானையும் கிளியை கோபமாகப் பார்த்தன. ""ம்....ம்.... என்ன பிதற்றுகிறாய்..?''
கிளி பேசியது: ""நான் பிதற்றவில்லை..! உண்மையைக் கூறுகிறேன்...! பொறுமையுடன் கேளுங்கள்..! வீரத்தையும், செல்வத்தையும் விட கல்விதான் பெரியது. எனக்கு நான்கு வேதங்களும் தெரியும். இதிகாசங்களும் புராணங்களும் கற்றிருக்கிறேன்..!''
""அப்படியா... நீ எப்படிப் படித்தாய்...?''
""எப்படியோ படித்தேன்...! இதென்ன பைத்தியக்காரத்தனமான கேள்வி...! பிச்சைப் புகினும் கற்கை நன்றே.... என்று ஒளவையார் கூறியிருக்கிறார். ஆசிரமத்தில் மகரிஷி குருகுல மாணவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுத்தபோது நான் மரத்தின் மேலிருந்து அதைக் கேட்டுக் கேட்டு கேள்வி ஞானத்தால் படித்து வளர்ந்தேன்..! அதனால்தான் கூறுகிறேன்... அழிந்து போகும் வீரத்தையும், செல்வத்தையும் விட அழியாத செல்வமான கல்வியே பெரியது...! எனவே உங்கள் இருவரையும் விட நானே உயர்ந்தவன்..!''
சிங்கமும், யானையும் அதிர்ச்சியடைந்தன..! பிறகு, மற்ற மிருகங்களை நோக்கி ""இந்தக் கிளி சொல்வதை நீங்கள் நம்புகிறீர்களா?'' என்றன.
""நம்பவும் முடியவில்லை; நம்பாமல் இருக்கவும் முடியவில்லை...! எங்களுக்கு ஒரே குழப்பமாக இருக்கிறது..!'' என்றன
மிருகங்கள்.
""குழப்பம் தேவையே இல்லை... நான்தான் உங்கள் மூவரையும் விட உயர்ந்தவன்!'' என்று கீச்சுக் குரல் கேட்டது. அனைவரும் திரும்பிப் பார்த்தனர்.
ஒரு சிறிய தேரில் பார்வதி, லட்சுமி, சரஸ்வதி, துர்க்கை, விநாயகர் பொம்மைகளை வைத்து நடைவண்டியைப் போல் இழுத்துக் கொண்டு வந்தது விநாயகரின் வாகனமான எலி.
எலியைப் பார்த்ததும் அனைத்து மிருகங்களும் ஏளனமாக சிரித்தன.
""சிங்கம், யானை, கிளியை விட ஒரு எலி எப்படி உயர்ந்ததாக இருக்க முடியும்... இது உனக்கே பேராசையாகத் தெரியவில்லையா..?'' என்று கேலி செய்தன.
அதைப் பார்த்து எலிக்கு கோபம் வந்தது...!
""சும்மா சிரிக்காதீங்க...! வாயை மூடுங்க...! நான் கேக்குற ஒரே ஒரு கேள்விக்கு பதில் சொல்லுங்க..! சிங்கமோ, யானையோ, கிளியோ... யாரா இருந்தாலும் அவங்களை வலை வீசி பிடிக்க முடியும் இல்லியா...?''
""ஆமாம்... பிடிக்க முடியும்...''
""ஆனா... எந்த மிருகமோ, எந்தப் பறவையோ வலையில் மாட்டியிருந்தாலும் என்னால் அந்த வலையைக் கடித்து அவற்றைக் காப்பாற்ற முடியும்... இல்லியா..?''
""ஆமாம்... ஆமாம்.... காப்பாற்ற முடியும்..! எத்தனையோ முறை பல விலங்குகளை வலையிலிருந்து விடுவித்து இருக்கிறாய்...!''
""அப்படியானா... வீரம், செல்வம், கல்வி மூன்றும் உடைய மூவரையும் காப்பாற்றும் சக்தி உடையவர் உயர்ந்தவரா... இல்லையா...?''
""ஆமாம்... ஆமாம்... நீயே உயர்ந்தவன்...! இனிமேல் உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற விவாதம் நமக்குள் வரக்கூடாது. தன்னை உயர்ந்தவர் என்று கூறிக்கொள்ளாதவரே உண்மையில் உயர்ந்தவர்...'' என்று அனைத்து மிருகங்களும் ஒற்றுமையோடு கூறின.
""அதென்ன சக்கர வண்டியில் சுவாமி சிலைகள் கொண்டு வந்திருக்கிறாய்?'' என்று யானை கேட்டது.
""நாளைக்கு ஆயுத பூஜை, விஜயதசமி கொண்டாட வேண்டாமா..? அதற்குத்தான்..!''
""ஆஹா... அருமை...! அருமை...!''
அனைத்து விலங்குகளும் ஆரவாரம் செய்தன..!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com