பார்க்கப் பார்க்கப் பரவசம்!
By நம்பிக்கை நாகராஜன் | Published On : 11th July 2020 06:00 AM | Last Updated : 10th July 2020 07:41 PM | அ+அ அ- |

எங்கள் வீட்டு வாசல் பக்கம்
இருக்கும் குருவிக் கூட்டமே
அங்கும் இங்கும் பார்த்துப் பார்த்து
அலைந்து நின்று ஓய்ந்தது!
தட்டித் தட்டி நிலத்தில் தேடும்
தவிப்பைப் பார்க்க முடியலே!
தானியங்கள் தரையில் கொட்டிக்
கொடுத்துப் பசியைப் போக்கினோம்!
நாளும் நடக்கும் நடப்பை நின்று
நேரில் பார்க்க மகிழ்ச்சியே
வேலை விடுப்பு கிடைத்ததாலே
விரைந்து சென்றோம் ஊருக்கு!
ஊரைப் பார்த்துத் திரும்பும் போது
குருவி நினைவு இல்லையே
தீர்ந்து போச்சு தீனி என்று
தெரிந்த நிலையும் இல்லையே!
கூடிக் குருவி வாசல் பக்கம்
கூவி இரையைக் கேட்டது!
ஓடி தானியங்கள் வாங்கி
வாசல் நிறையத் தூவினோம்!
நாடி வந்து குருவிக் கூட்டம்
நறுக்கி, நறுக்கித் தின்றது!
பார்க்கப் பார்க்கப் பரவசந்தான்
பரிந்து உயிர்கள் காப்பது!