மரங்களின் வரங்கள்!: காசில்லா வைத்தியம்!  - காரை  மரம்!

நான் தான் காரை  மரம் பேசுகிறேன்.  எனது தாவரவியல் பெயர் டையோஸ்பைரோஸ் மெலானக்சைலான் என்பதாகும். என்னை ஆங்கிலத்தில் ஈஸ்ட் இந்தியன் எபோனி ட்ரீ என்று அன்பா அழைப்பாங்க.  நான் எபினேசியே
மரங்களின் வரங்கள்!: காசில்லா வைத்தியம்!  - காரை  மரம்!
Updated on
2 min read


குழந்தைகளே நலமா? 

நான் தான் காரை  மரம் பேசுகிறேன்.  எனது தாவரவியல் பெயர் டையோஸ்பைரோஸ் மெலானக்சைலான் என்பதாகும். என்னை ஆங்கிலத்தில் ஈஸ்ட் இந்தியன் எபோனி ட்ரீ என்று அன்பா அழைப்பாங்க.  நான் எபினேசியே குடும்பத்தைச் சேர்ந்தவன். என் தாயகம் இந்தியா.  நான் ஒரு வறண்ட நில தாவரமாவேன். நானும் காற்றின் வேகத்தை தடுத்து, தூசியை வடிகட்டி, காற்றை தூய்மைப்படுத்துவேன்.  நான் நீலகிரி, கோயம்புத்தூர், சேலம், தர்மபுரி, திருநெல்வேலி, கடலூர், காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் அதிகமா காணப்படறேன். 

என் இலையை பீடிகள் சுருட்டவும் பயன்படுத்தறாங்க. என் பட்டையில் டேனின் சத்து நிறைய இருக்கு. உங்களுக்குத் தான் தெரியுமே, டேனின் சத்து இருந்தால் அந்த மரப்பட்டை  தோல் பதனிட உதவுமுன்னு. 

விவசாயிகள் என்னை விரும்பி வளர்க்கிறார்கள்.  ஏன்னா, என் தழை விளை நிலங்களுக்கு நல்ல உரமாவதுடன், அவங்களுக்குத் தேவையான வேளாண் கருவிகள் செய்யவும் நான் உதவுறேன். அது மட்டுமல்ல குழந்தைகளே, நான் வண்டிச் சக்கரங்கள் செய்யவும், பில்லியர்ட் கழிகள், தூண்கள், கடைசல் வேலைகள், பொம்மைகள், காகிதம் தயாரிக்கவும் நான் பெரிதும் உதவறேன். பியானோவுக்குத் தேவையான சாவிகளைத் தயாரிக்கவும் என்னை பயன்படுத்தறாங்க. 

உங்களை இப்போதெல்லாம் பிளாஸ்மோடியம் பால்சிபோரம் என்னும் மலேரியாக் கிருமிகளை உங்களைத் தாக்குதாமே, அந்தக் கிருமிகளைக் கட்டுப்படுத்தும் திறன் எங்கிட்ட இருக்கு. 

அத்திப் பழத்துக்கு நிகரான பழம் என் பழம் தான். குழந்தைகளே, உங்களுக்கு ஹீமோகுளோபின் குறைவாக உள்ளதா, கவலைப்படாதீங்க,  என் பழத்தை சாப்பிடுங்க, 100 சதவீதம் நீக்கி, பல நோய்களையும் போக்கும். ஹீமோகுளோபின் என்பது நம் சிவப்பு இரத்த அணுக்களில் உள்ள இரும்பு சத்து நிறைந்த புரதமாகும்.  நம் உடல் முழுவதும் ஆக்சிஜனை எடுத்துச் செல்லும் பொறுப்பு இந்தப் புரதத்துடையதாகும். அணுக்களிலிருந்து கார்பன்-டை-ஆக்ûஸடை எடுத்துச் சென்று மீண்டும் அதனை நுரையீரலில் கொண்டு சேர்க்க ஹீமோகுளோபின் உதவும் குழந்தைகளே. 

மேலும், என் பழத்தை உடைத்து விதையை நீக்கி காய வைத்து அதை ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டு இரவில் ஊறவைத்து நாள்தோறும் காலை, மாலையில் குடித்து வந்தால் மலச்சிக்கல், சீதபேதி குணமாகும்.  என் இலையை வேக வைத்து கடைந்து சாப்பிட்டால் வயிற்றுக் கடுப்பு, இரத்தபேதி சட்டுன்னு குணமாகும்.  அது மட்டுமா, சூடு தணியும். தொடர்ந்து சாப்பிட்டால், இரைப்பை, நுரையீரல் போன்ற உள்உறுப்பு பலப்படும். மேலும், என் பழத்தின் சதைகளை சேகரித்து, நிழலில் காய வைத்து பொடியாக்கி, குறைந்தளவு தண்ணீர் கலந்து உண்டு வந்தால் வாதம், பக்கசூலை, இருமல் நீங்கும்.  சிலர் சத்து குறைவால் அடிக்கடி மயக்கம் அடைந்து கீழே விழுந்துடுவாங்க, அவர்கள் இதை உண்டு வந்தால் குணம் ஏற்படும். 

முகப்பருக்களைப் போக்கும் குணமும் எங்கிட்ட இருக்கு. என் பழத்தின் சதைகளை நிழலில் காய வைத்து, பருக்கள் மீது தடவி வந்தால் பருக்கள் உடைந்து அந்த இடத்தில் வடு இல்லாமல் குணமாகும். என் வேரின் பட்டையை சேகரித்து தண்ணீர் விட்டு மைய அரைத்து கட்டியின் மீது பற்று போட்டால் கட்டிகள்  உடைந்து விரைவில் ஆறும். 

ஆடுகளுக்கு மிகவும் பிடித்த உணவு என் இலைகள் தான்.  தேனீக்கள் என் பூவை தான் சுற்றி சுற்றி வருவாங்க.  நான் கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகில் உள்ள காரமடை, அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோவிலில் தலவிருட்சமாக இருக்கேன். மிக்க நன்றி குழந்தைகளே, மீண்டும் சந்திப்போம். 

(வளருவேன்)
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com