அங்கிள் ஆன்டெனா(2/05/2020)
By DIN | Published On : 02nd May 2020 06:15 PM | Last Updated : 02nd May 2020 06:15 PM | அ+அ அ- |

கேள்வி:
நமது முழங்கை தற்செயலாக எதிலாவது இடித்துக் கொண்டால் ஷாக் (மின்சார அதிர்ச்சி) அடித்தது போன்ற உணர்வு ஏற்படுகிறதே இதற்குக் காரணம் என்ன?
பதில்: இந்த உணர்ச்சியை நம்மில் பலரும் அனுபவித் திருப்போம். முழங்கை தற்செயலாக மேஜையின் முனையில் இடித்துவிட்டாலோ அல்லது வேறு ஏதாவது கடினமான பொருளின் மீதோ இடித்தால் இந்த உணர்வு எல்லோருக்கும் ஏற்படும். இது ஏறக்குறைய ஷாக் அடித்தது போலவே இருக்கும்.
இதற்குக் காரணம் முழங்கையில் இருக்கும் (funny bone) நகைச்சுவை எலும்பு என்று பலர் கூறுவார்கள். ஆனால் உண்மையில் இப்படி நகைச்சுவை எலும்பு என்று எதுவும் கிடையாது.
முழங்கையின் முனையில் இருக்கும் உல்நார் நரம்பு (ulnar nerve) என்ற நரம்புதான் இதற்குக் காரணம். இது உடம்பின் பல பகுதிகளை இணைக்கும் மிக நீண்ட நரம்பு ஆகும். இந்த நரம்பு முழங்கையில் இருக்கும் எலும்புடன் இணைக்கப்பட்டிருக்கிறது. முழங்கையில் இந்த எலும்பு மிகவும் மெல்லிய தோல் மற்றும் கொழுப்பு குறைவான பகுதியில் உள்ளதால், இந்த நரம்பு எளிதில் பாதிக்கப்படுகிறது. இதனால்தான் இந்த ஷாக் அடிக்கும் உணர்வு ஏற்படுகிறது. ஆனால், இதனால் பாதிப்பு எதுவும் ஏற்படுவதில்லை, ஆகவே அஞ்ச வேண்டாம், நன்றாக சிரித்துக் கொள்ளவும். இதனால்தான் இந்த எலும்பை நகைச்சுவை எலும்பு என்று அழைக்கிறார்கள் போலும்.
-ரொசிட்டா
அடுத்த வாரக் கேள்வி
வானவில்லில் ஏழு வண்ணங்கள் உள்ளன என்பது எல்லோருக்கும் நன்றாகவே தெரியும். ஆனால், இந்த ஏழு வண்ணங்களும் ஒரு வரிசையில் அதாவது முதலில் ஊதா, கருநீலம், நீலம், பச்சை, மஞ்சள், ஆரஞ்சு மற்றும் சிவப்பு என்று அமைந்திருப்பதற்குக் காரணம் என்ன? இதில் ஏதாவது மாற்றம் நிகழ்வதற்கு வாய்ப்பு உள்ளதா?
பி.கு.: இந்தப் பகுதிக்கு வாசகமணிகளும் கேள்விகளை அனுப்பலாம். இதுவரை இந்தப் பகுதியில் வெளிவராத கேள்விகளாக இருந்தால், நிச்சயம் நல்ல பதில் கிடைக்கும்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...