நூல் புதிது!
By DIN | Published On : 26th September 2020 06:00 AM | Last Updated : 26th September 2020 06:00 AM | அ+அ அ- |

சிறுவர் அமுதம்
ஆசிரியர் : பொன் கண்ணகி (சிறுவர் பாடல்கள்)
பக்கம் : 44
அருமையான கவிதைத் தொகுப்பு இது. அழாதே பாப்பா...., வா தம்பி வா,....பூந்தோட்டம்,.... யானை... போன்ற தலைப்புகளில் 55 பாடல்கள் கொண்ட தொகுப்பு. குழந்தைகள் கைதட்டிப் பாடும் சந்தத்தோடு, கற்பனை வளம் நிறைந்த பாடல்கள். இந்நூலின் ஆசிரியர், பல ஆண்டுகள் ஆசிரியராகவும், தலைமை ஆசிரியராகவும் பணியாற்றிய அனுபவமிக்க படைப்பாளர். "மழை வருது' கவிதை, குடையைத் தேடச்சொல்லியும், கொடிகளில் காயப்போட்ட துணிகளை எடுத்துவர நினைவு படுத்துவதும்,
கப்பல் விடும் வாய்ப்பாக மழையை நினைப்பதும், நொறுக்குத் தீனியைத் தயார் செய்து வைத்துக் கொள்ளச் சொல்வதும், விதைகள் தூவ மழைக்காலத்தைப் பயன் படுத்திக் கொள்ளச் சொல்வதும், நீரைச் சிக்கனமாகச் செலவு செய்து சேமித்து வைத்துக் கொள்ளச் சொல்வதும் ஆகிய அனைத்தையும் கைதட்டல் இசையோடு நயமாய் சொல்கிறது. அதுவும் பத்தே வரிகளில்! அருமையான கவிதைத் தொகுப்பு. புத்தகம் வேண்டுவோர் அலைபேசி எண், 9486743250 எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.
பட்டாம்பூச்சி (சிறுவர்பாடல்கள்)
ஆசிரியர் : நல்லரசன்
பக்கம் : 120 / விலை : ரூ 120/-
மிக மிக அருமையான நூறு கவிதைகள்! "மூத்த மொழி' கவிதையில், ...."உயிரும் தமிழும் ஒன்றாகும்....... உலகம் தமிழால் நன்றாகும்!'' என்ற வரி, "அடேங்கப்பா!' எனறு கூறத் தோன்றுகிறது! மற்றொரு உதாரணம்,.... திருக்குறள் என்ற தலைப்பில் வந்த பாட்டில், ""உலகமென்றும் சென்றது!..... பொது மறையாய் வென்றது!' போன்ற வரிகள் மொழிப்பற்றுடையோரைச் சிலிர்க்க வைக்கும்! "திசைகள்' தலைப்புக் கவிதை திசை காணும் முறையை அருமையாய் போதித்துவிட்டு, அதோடு நில்லாமல், "எல்லாத் திசையும் சென்றுவிடு!.... இலக்கு வைத்து வென்று விடு!' என்று முத்தாய்ப்பாய் முடிக்கிறார் பாடலாசிரியர்! தவறாமல் படித்துச் சுவைக்க வேண்டிய புத்தகம்! வெளியிட்டோர் : பாவை பதிப்பகம், 214, நேதாஜி ரோடு, மஞ்சக் குப்பம், கடலூர் - 1. தொலைபேசி - 04142 - 231055.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...