அரங்கம்:  காட்டிலே ஒரு கிரிக்கெட்

 (துணை கேப்டன் கரடியிடம்)  - என்னப்பா,  துணை கேப்டன்!....புலி அணி முதலில் இறக்கப் போற பேட்ஸ்மேன்கள் பற்றி ஏதாவது ஐடியா இருக்கா?
அரங்கம்:  காட்டிலே ஒரு கிரிக்கெட்

காட்சி 1
இடம் - காட்டில் உள்ள புல்வெளி மைதானம்.
மாந்தர் - சிங்கம் அணி, புலி அணி  வீரர்கள்.

சிங்கம்  (துணை கேப்டன் கரடியிடம்)  - என்னப்பா,  துணை கேப்டன்!....புலி அணி முதலில் இறக்கப் போற பேட்ஸ்மேன்கள் பற்றி ஏதாவது ஐடியா இருக்கா?
துணை கேப்டன் கரடி - வழக்கம் போலத் தான் தலைவரே இருக்கும். குதிரையும் காட்டெருமையும் தான்.
சிங்கம் - அவங்க அணியில் யாரோ வேகப் பந்து வீச்சாளர் புதுசா சேர்த்து இருக்காங்களாமே...
கரடி -  அப்படியா? அந்த சேதி எனக்குத் தெரியாதே...
விக்கெட் கீப்பர் யானை -  ஆமாமாம்.  புதுசா ஒரு கங்காரு தான் பவுலிங் போட சேர்த்திருக்காங்க.
சிங்கம் - அவன் கிட்டே நீங்க ஜாக்கிரதையா இருக்கணும்.  அவன் குடும்பமே வேகப் பந்து வீச்சில் சாதனை படைச்சவங்க.
பேட்ஸ் மேன் வரிக்குதிரை -  யாரா இருந்தா நமக்கென்ன. நீங்களும் நானும் தான் தொடக்க வீரர்களா பேட்டிங் செய்யப் போறோம்.  வெறும் ஆறுகளா அடிச்சு விளாசிடுவோம்.
சிங்கம் - சரி. அம்பயர்கள் யார் யாரு?
விக்கெட் கீப்பர் யானை - வழக்கம் போல ஒட்டகமும் ஒட்டகச் சிவிங்கியும் தான்.
சிங்கம் -  இரண்டு பேருமே சரியாத் தான் முடிவெடுப்பாங்க.  சரி எல்லோரும் போய் வலையில் நெட் பிராக்டீஸ் எடுங்க.  நானும் சிறிது ஓய்வெடுத்துக் கொள்கிறேன்

காட்சி 2
இடம் - புலி அணி கூடாரம்
மாந்தர் - கேப்டன் புலி. துணை கேப்டன் காண்டாமிருகம் மற்றும் வீர்ர்கள் முள்ளம்பன்றி, ஓநாய், கங்காரு, நரி, சிறுத்தை, குதிரை, காட்டெருமை மற்றும் 
மிருகங்கள்.

புலி - இந்த தடவை நாம புது வியூகம் அமைச்சு ஐம்பது ஓட்டங்கள் கூட எடுக்காமல் எதிர் அணியை 
சுருட்டணும்.
குதிரை - கங்காரு போடப் போற வேகப் பந்தில் 
எல்லோரும் டக் அவுட் தான் தலைவரே.
புலி - எங்கே நம்ம விக்கெட் கீப்பர் நீர் யானை?
நீர்யானை - இதோ புல் திங்கப் போனேன் பசிச்சுது.
புலி - இதோ பாருப்பா நீ கொஞ்சம் உடம்பை 
குறைக்கணும்.
நீர்யானை - உடம்பு பெரிசா இருந்தா என்ன   ஒரு பந்தாவது என்னைத் தாண்டி போவுதா..?  அதைப் பாருங்க. இருங்க பசிக்குது கொஞ்சம் கிழங்கு தின்னுட்டு 
வர்றேன்.
புலி - இவனுக்குத் திங்கறதே வேலை.  சரி எதிர் அணியின் தொடக்க பேட்ஸ் மேன் யாராம்?
நரி - அனேகமா சிங்கமும் கழுதையும் இருக்கலாம்.
புலி - சிங்கம் சில சமயம் அடிக்கிறான். சில சமயம் டக் அவுட் ஆயிடுவான்..ஆனால் கழுதையை மட்டும் அல்பமா நினைக்காதீங்க. நின்னு கடைசி வரை ஆடுறான்.  எப்படியோ எழுபது எண்பது அடிச்சிடறான்.
சரி நீங்க எல்லோரும் வலை பயிற்சி செய்யுங்க.. எங்கே அந்த நீர் யானை விக்கெட் கீப்பர்..?
நீர்யானை - (கிழங்கை மென்றபடி) இங்கேழ் தாழ்ன் இழ்ருக்கேன்.. நீங்க சொழ்ன்னது பூரா காதில் வாழ்ங்கிக்கிட்டு தான் இருக்கேன்.
புலி - சரி பந்தயம் முடியும் வரை கொஞ்சம் வயிறைக் காயப் போடு அன்னிக்கு பார்த்து வயிற்று வலின்னு ஓடிடாதே.

காட்சி 3
இடம் - புல்வெளி மைதானம்
மாந்தர் - அனைத்து மிருகங்கள், மற்றும் பறவைகள்

---கிரிக்கெட் மேட்ச் ஆரம்பம்---
(ரசிகர்கள் - பறவைகள், முயல்கள், எலிகள், பாம்புகள்)

-மிருகங்களின் குட்டிகள், பசுக்கள், நாய்கள், 
பூனைகள் அரங்கைச் சுற்றியும், மரங்களின் மீதும் அமர்ந்து ஆவலுடன் போட்டியைக் கண்டுகளிக்கத் தயாராகி விட்டன!-

மேடையில் இருக்கும் மூன்றாவது நடுவர் மலைப் பாம்பு - இதோ இரு அணி தலைவர்களும் நாணயத்தைச் சுண்டி பூவா தலையா போடப் போகிறார்கள்.
வர்ணனையாளர் காகம் மைக்கில் - இதோ இரு அணி தலைவர்களும் மைதானத்தில் சிங்கம் போல கம்பீரமாய் நடந்து செல்வது கண்கொள்ளா காட்சி.. புலி எப்படி சிங்கம் போல நடக்கும்ன்னு நினைக்கறீங்களா..கம்பீரத்துக்குச் சொன்னேன்.  இதோ நாணயத்தைச் சுண்டுகிறார் நடுவர் ஒட்டகச் சிவிங்கி.. இதோ விழுந்து விட்டது தரையில்.  சிங்கம் தலை என்றும் புலி பூ என்றும் கேட்டிருக்காங்க.. அடடே என்ன இது நாணயம் விழுந்து குத்துக்க நேரா நிக்குது.. ஓ.. தரையில் புல் இடுக்கில் அப்படி ஆயிட்டுது. இப்ப என்ன செய்யப் போறாங்கன்னு தெரியலையே.  மறுபடி டாஸ் போடுவாங்களா.  இதோ மூன்று அம்பயர்களும் கூடி ஆலோசிக்கறாங்க.  அட டே  அவங்களால் ஒரு முடிவுக்கு வர முடியலே.  திரும்ப டாஸ் போடறதா வேணாமா.. அதுக்கு அவங்க மூணு பேரும் டாஸ் போட்டு தலை விழுந்தா திரும்ப டாஸ் பூ விழுந்தா அம்பயர்கள் சீட்டு குலுக்கி போட்டு முடிவெடுப்பது என தீர்மானிச்சு இதோ அம்பயர்களே ஒரு டாஸ் போடறாங்க.
இரண்டாம் வர்ணனையாளர் மயில் - சரி இவங்க போடற காசும் குத்துக்க நின்னுட்டா?
வர்ணனையாளர்  காக்கா -  உன் அழகு வாயைத் திறக்காதே அபசகுனமாய்...
காகம் - (வர்ணனையைத் தொடர்கிறார்...)  இதோ நடுவர்கள் டாஸ் போட்டதில் மறுபடி ஒரு தரம் சிங்கமும் புலியும் டாஸ் போட முடிவாயிட்டுது. இதோ மறுபடி டாஸ் போட்டதில் பூ விழுந்து புலியார் பேட்டிங் என தெரிவு செய்துவிட்டார் இதோ வர்ணனையை மயிலார் தொடர்வார்.

காட்சி 4
இடம் மைதானம்
புலி அணியார் பேட்டிங்

தொடக்க வீர்ர்களாக பன்றியும் கோவேறு கழுதையும் இறங்க மைதானத்தில் ஒரே கைதட்டல். பன்றியும் கோவேறு கழுதையும் கையில் பேட்டை உயர்த்தியபடி ரசிகர்களின் கைதட்டல் விசிலை ஆமோதித்து செல்கின்றனர்.

பார்வையாளர் மைனா - மரக் கிளையில் இருந்து குருவியிடம் - போன மேட்சில் கோவேறு கழுதை 152 நாட் அவுட் தெரியுமோ?
குருவி - பன்றியார் மட்டும் சும்மாவா சதம் அடிச்சுதானே கேட்ச் கொடுத்து அவுட்டானார். சிங்கம் அணி விக்கெட் கீப்பர் யானை ஒரு பந்து விடாமல் தன் துதிக்கையால் பிடித்து ரன் எடுக்க விடாமல் செய்கிறார். 
காகம் - (வர்ணனை தொடர்கிறது.  ஆஹா புலி அணியின் தொடக்க வீரர்கள் பன்றியும் கோவேறு கழுதையும் அற்புதமாய் விளாசுகிறார்கள்.  இதோ பன்றியை நோக்கி சிங்க அணியின் வேகப் பந்து வீச்சாளர் கருஞ்சிறுத்தை பந்தை வீசுகிறார்.. மயிலாரே என்ன வேகம் பாருங்க.  இதோ பன்றியார் காலை மடக்கி பந்தை அடிக்கிறார்.. ஓ.. ஓ  பவுண்டரி லைனுக்கு மேல் போவுது நிச்சயம் ஆறுதான்.. அட டே! பவுண்டரி லைனில் நிற்கும் மான் துள்ளி குதித்து கேட்ச் பிடிச்சிட்டார்.. ஆஹா மான் பந்தை பிடிக்கும் போது கால் கோட்டுக்கு வெளியே போயிட்டாரே.. ஓ மை காட்.. கடவுளே அவர் பந்தை தட்டி எல்லைக்குள் உள்ளே வானத்தில் விழச் செய்து எல்லைக்குள் மறுபடி உள்ளே வந்து மறுபடி பிடிச்சிட்டார். என்ன சாமர்த்தியம்! நொடிக்குள் பந்தை உள்ளே தள்ளி எல்லைக்குள் வந்து பிடிச்சிட்டாரே அபாரம்.  கிரிக்கெட் வரலாற்றில் இப்படி ஒரு கேட்ச் யாரும் பிடிச்சதில்லை.
துணை வர்ணனையாளர் மயில் -  இது செல்லுமா?
காகம் - ஓ தாராளமாக செல்லும்..சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிராக இந்திய வீராங்கனை  ஹர்லீன் தியோல்அப்படித்தான் ஒரு அற்புத கேட்ச் பிடித்தார்.  ஓ!... அவுட் பன்றியார் அவுட்!....
(மேட்ச் இப்படியாகத் தொடர ஒரு கட்டத்தில் 
நீர்யானை பேட்டிங்கின் போது பசி எடுக்க தன் 
பாக்கெட்டில் இருந்து நைஸாக சமயம் கிடைக்கும் போது ஒரு காரட்டைஎடுத்துத் தின்கிறார். கேப்டன் புலியார் பெவிலியனில் இருந்து இதைக் கவனித்து விட்டு,  "அஞ்சு நிமிஷம் கூட தின்னாமல் இருக்க முடியாதா!' என நினைக்கிறார்).

மயிலார் வர்ணிக்கிறார் -  ஓ இப்போது நீர்யானை கங்காரு போட்ட பந்தை அடித்து விட்டு நீர்யானையும் குதிரையும் ரன் எடுக்க ஓடுகிறார்கள்.  ஓ என்ன ஆச்சு நீர் யானைக்கு காலில் தசைப் பிடிச்சுக்கிட்டுது. அப்படியே பிட்சில் விழுந்து கிடக்கார்.  சிங்கம் கையில் பந்து நினைச்சால் ரன் அவுட் ஆக்கி இருக்க முடியும். பெருந்தன்மையாக ஓடி வந்து நீற் யானையைத் தூக்கி விட்டு காலை நீவி விடுகிறார்.  ஆஹா விளையாட்டு கண்ணியம் என்றால் இது வல்லவா.  நாளை ஆங்கிலப் பத்திரிக்கையில் இந்த நிகழ்வை ஆராய்வார்கள் பாரேன் காக்கையாரே.
காகம் - உண்மை.. இதுதான் கண்ணியமான கிரிக்கெட்.
( புலியார் பத்தாவது ஆளாக வந்து விளாசுகிறார்.
கங்காரு போடும் ஒரு பந்து மட்டையில் பட்டு யானையார்  விக்கெட் பின்னால் கேட்ச் பிடிக்க, சிங்க அணியினர்,  "அவுட்!'  என கூச்சலுடன் ஒருவரை ஒருவர் கட்டிப் பிடிக்க,... சந்தேகமாக இருக்கிறது என புலி சொல்ல, மூணாவது அம்பயர் மலைப்பாம்பு  கம்ப்யூட்டரில் மெல்ல காட்சியை ஓட வைத்து பந்து லேசாக பட்டு விலகுவதைப் பார்த்து ரெட் 
லைட்டை எரிய விடுகிறார்.)

காகம் -  புலியார் அவுட்.    மேட்ச் முடிந்தது.. மதியம் சிங்க அணிக்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கு 321.  பார்ப்போம்.  நான் போய் கொஞ்சம் தின்னுட்டு வர்றேன் நீ பார்த்துக்கோ  பறந்து செல்லாதே...
மயிலார் -  வரும்போது ஒரு சோளக் கதிர் இருந்தா பிய்த்து வா எனக்கு.

காட்சி 5
இடம் - மைதானம்
மாந்தர் - அனைத்து மிருகங்கள்

(மதியம் சிங்க அணி பேட்டிங்)
மயிலார் - ( வர்ணனையைத் தொடருகிறார்)   சே, 
என்னமோ தெரியலே தொண்டைகட்டி கிட்டுது. லேசா சளி பிடிச்சிட்டுது... குரல் கர கரப்பா இருக்கு.
காகம் - உன் தொண்டையே அப்படித்தான் மைக்கைப் பிடி.
மயிலார்  - சிங்க அணிக்கு இலக்கு 321..புலி அணி பெற்ற 320 ஐத் தாண்டணும்.  இதோ சிங்கமும் கழுதையும் பிட்ச் நோக்கிச் செல்கிறார்கள் கையில் மட்டையுடன். மைதானத்தில் ஒரே விசில் கைதட்டல்.  கங்காரு தன் கால்சராயில் பந்தைத் தேய்த்து முதல் பந்து...  சிங்கம் தன் பேட்டை உயர்த்தி விளாச  ஓ  ...அது ஒரு ஆறு
(அரங்கத்தில் ஒரே விசில்)

காகம் - இதோ இரண்டாவது பந்து.. ஓ  விளாசிட்டார் பின் புறமாக! ஆணால் நீர் யானை புரண்டு விழுந்து பந்தை காலால் தடுத்திட்டார்.  கேட்ச் பிடிச்சிருந்தா சிங்கம் அவுட் ஆகி இருப்பார்.(ஆட்டம் தொடர்கிறது.).

(திடீரென வர்ணனையாளர் மயில் தோகை விரித்து ஆட)

காகம் - என்னய்யா, திடீர்னு ஆட ஆரம்பிச்சிட்டே?
மயில் - அதோ பாருங்க மேகங்கள் கரு கருவென திரண்டு வர்றதை.  இன்னும் கொஞ்ச நாழியில் பெரிய மழை வரப் போவுது.  மேகங்களைக் கண்டால் என்னால் ஆடாம இருக்க முடியாது..
(திடீரென இடி சத்தம் வானில் மேகங்கள் திரண்டு பெரு மழைக்கான அறிகுறி.)

காகம் - சரி ஆடிக்கிட்டே வர்ணனையைத் தொடரு. எனக்குத் தாகமா இருக்கு போய் தண்ணி குடிச்சிட்டு வர்றேன்.
மயிலார் - (தொடர்கிறார்)  சிங்கம் 99 அடித்து விட்டார் இது வரை..  அடுத்த பந்து சிக்ஸருக்குத் தூக்கறார்.. பந்து பவுண்டரி தாண்டப் போகிறது  ஓ மை காட்!... புலி தாவி வாயில் கவ்வி விட்டார்.  சிங்கம் 99 ல் அவுட்!..... என்ன துரதிர்ஷ்டம்!....சதம் அடிக்க விடவில்லை.
(ஆட்டம் விறு விறுப்பாகச் செல்கிறது.  இப்போது கடைசி ஆட்டக் காரர்கள் கழுதையும் வரிக் குதிரையும் மட்டையுடன் நிற்கிறார்கள்.   320 அடித்து விட்டார்கள்!.... என்ன இப்படி இருண்டு விட்டதே!.... கண்ணுக்கு ஒன்றும் சரியாகத் தெரியலியே!.... மூன்று அம்பயர்களும் பெவிலியனில் கூடி ஆலோசிக்கிறார்கள். ஒரு பந்து தான் பாக்கி! போட்டு ஆட்டத்தை முடித்துவிடலாமா?... கடைசி பால்!..ஒரே பந்து 
பாக்கி!....ஒரே ரன் தேவை!.... அடிச்சால் சிங்க அணி வெற்றி  இல்லாவிட்டல் ஆட்டம் சமன்.. டிரா. ஒரு ரன் எடுத்தால் போதும்.  என்ன இது திடீரென இடி சத்தம் மின்னல் மழை மேகங்கள் நொடியில் சூழ்ந்து விட்டதே! அடடே மழை! பெரு மழை!...)
 
(சோ என பெருமழை பெய்ய பிட்ச்சில் தண்ணீர் ஓட  ஆட்டம் டிரா என மூன்று அம்பையர்களும் நனைத்தபடி அறிவிக்கிறார்கள். -ஆடியன்ஸ் பறந்தும் ஓடியும் மழையில் இருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்கின்றனர்-)

திரை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com