
இந்தியாவின் தேசிய அடையாளங்களின் சிலவற்றைப் பார்ப்போமா?
தேசியச் சின்னம்!
சாரநாத்தில் உள்ள அசோகர் ஸ்தூபியில் இருந்து எடுக்கப்பட்ட சக்கரமே இந்தியாவின் தேசியச் சின்னமாகும். 1950 - ஆண்டு இது இந்தியாவின் தேசியச் சின்னமாக அங்கீகரிக்கப்பட்டது. இந்திய அரசாங்கத்தின் அதிகாரபூர்வ முத்திரை இது!
இச் சின்னத்தை இந்திய அரசாங்கம் மற்றும் மாநில அரசாங்கங்களின் அலுவலக நோக்கங்களுக்கு மட்டுமே பயன் படுத்த முடியும்.
தேசியக் கொடி!
1947 - ஜூலை 22 ஆம் தேதி அரசியல் நிர்ணய சபை நமது மூவர்ணக் கொடியை ஒருமித்த கருத்துடன் அங்கீகரித்தது.
ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த " பிக்களி வெங்கைய்யா' என்பவரே நமது கொடியை வடிவமைத்தார். காவி நிறம் தைரியம், மற்றும் தியாகத்தையும், வெண்மை நிறம், உண்மை மற்றும் அமைதியையும், பச்சை நிறம் செழுமையையும், நம்பிக்கையையும் குறிக்கின்றன. கொடியின் அளவு 3 : 2 என்ற விகிதத்தில் இருத்தல் வேண்டும். 1947 - ஆம் ஆண்டு ஆக,ஸ்டு 15 - ஆம் தேதி இந்தியா சுதந்திரக் காற்றைச் சுவாசித்தபோது ராஷ்டிரபதி பவனில் 31 குண்டுகள் முழங்க இந்திய தேசியக்கொடி முதன் முதலாகப் பறக்கவிடப்பட்டது!
தேசிய விலங்கு!
1972 - ஆம் ஆண்டு நமது தேசிய விலங்கு புலி என அறிவிக்கப்பட்டது. (அதுவரை சிங்கமே நம் நாட்டின் தேசிய விலங்காக இருந்தது.)
தேசியப் பாரம்பரிய விலங்கு!
யானை. 2010 - ஆம் ஆண்டு அக்டோபரில் இந்தியாவின் தேசிய பாரம்பரிய விலங்காக யானை அறிவிக்கப்பட்டது.
தேசியப் பறவை!
1963 - ஆம் ஆண்டில் இந்தியாவின் தேசியப் பறவையாக மயில் தேர்ந்தெடுக்கப்பட்டது.
தேசிய மலர்!
தாமரை! பத்மம், கமலம், ராஜீவம், அரவிந்தம், நீரஜா, ஜலஜா, பங்கஜம், நளினம், முண்டகம் முதலிய பெயர்களும் தாமரைக்கு உள்ளன. இந்து மத தெய்வங்களில், பிரம்மா, சரஸ்வதி, லக்ஷ்மி முதலிய தேவதைகள் அமரும் இடமாக புராணங்களின் வர்ணிக்கப் பட்டுள்ளன.
தேசியக் கனி!
மாம்பழம்! சுமார் 4000 ஆண்டுகளுக்கும் மேலாக நம் தேசத்தில் சாகுபடி செய்யப்பட்டு வரும் புராதனக் கனி இது. பழங்களின் ராஜா என அழைக்கப்படுகிறது.
தேசிய மரம்!
ஆலமரம்! எவ்வளவு சரியாக மிகக் கச்சிதமாக இந்தச் சின்னம் இருக்கிறது?... அற்புதம்! ஒற்றுமையும் இந்திய தேசத்தை தாங்கும் விழுதுகளாக அதன் குடிமக்கள் இருப்பதை மிக அழகாக உணர்த்தும் சின்னம் இது!
இன்னும் பல்வேறு தேசிய அடையாளங்கள் உள்ளன. அவற்றைப் பிறிதோர் சமயம் பார்ப்போம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.