ஆலமரம் தந்த மாற்றம்!

நீலிபுரம் என்னும் ஊரில் நெடுமாறன் பண்ணையார் என்னும் செல்வந்தர் வசித்து வந்தார். அவருக்கு ஏராளமான விளை நிலங்கள் இருந்தன.
ஆலமரம் தந்த மாற்றம்!
Published on
Updated on
1 min read


நீலிபுரம் என்னும் ஊரில் நெடுமாறன் பண்ணையார் என்னும் செல்வந்தர் வசித்து வந்தார். அவருக்கு ஏராளமான விளை நிலங்கள் இருந்தன. ஆடம்பரமான பங்களாவும் இருந்தது. விவசாய நிலத்திலும், பங்களாவிலும் நிறைய பேர் வேலை செய்து வந்தார்கள். 

அங்கு வேலை செய்வோருக்குக் கூலியைத் தவிர கூடுதலாக பத்து பைசா கூடத் தரமாட்டார். கோயில் திருவிழா என்று ஊரில் உள்ளவர்கள்  நன்கொடை கேட்டுச் சென்றாலும், குறைவான தொகையே கொடுப்பார். எச்சைக் கையால் காக்கை ஓட்டாத அவரை கஞ்சன் என்றே ஊர் மக்கள் அழைத்தனர்.

நெடுமாறன் பண்ணையார் எங்கு சென்றாலும் தன் குதிரை வண்டியில்தான் செல்வார். ஒரு நாள் குதிரை வண்டியில் பக்கத்து ஊருக்குச் சென்றபோது, வண்டியின் அச்சாணி உடைந்து போக, வண்டி ஓட்டுபவன் அதைச் சரி செய்ய முயன்றான். அப்போது பண்ணையார்  ஆலமரத்து நிழலில் சற்று நேரம் இளைப்பாறினார். 

அப்போது அந்த ஆலமரத்தில் பல பறவைகள் அழகான கூடு கட்டியிருப்பதைக் கண்டார். கிளைகளில் அணில்கள் அங்குமிங்கும் ஓடி பழுத்திருந்த பழங்களைப் பறித்துப் பசியாறுவதையும் கண்டார். மரத்தின் கீழே உதிர்ந்து கிடந்த காய்ந்த சருகுகளை வெள்ளாடுகள் மேய்வதைக் கண்டார்.

அந்த ஆலமரத்து நிழலில் வழிப்போக்கர்கள் சிலர் படுத்துத் தூங்குவதையும் கண்டார். மூதாட்டி ஒருத்தி சுள்ளிகளைப் பொறுக்கி சேகரிப்பதையும் கண்டார். ஒரு கிளையில் பூத்திருந்த பூக்களில் வண்டுகளும், வண்ணத்துப் பூச்சிகளும் தேன் அருந்தி மகிழ்வதையும் கண்டு ரசித்தார். 

அப்போது அவர் சிந்தனையில் "இந்த மிகப்பெரிய ஆலமரம் தனக்காக இல்லாமல் மற்றவர்களுக்காக நிறைய பலன் தரக்கூடியதாக இருக்கிறது. இந்த மரத்தால் மனிதர்கள் மட்டுமின்றி ஏராளமான உயிரினங்களும் பயன்பெறுகின்றன. எல்லாருக்கும் எல்லாமும் தரும் இந்த ஆலமரம் போல தான் இல்லாமல் தன்னுடைய செல்வங்களைத் தான் மட்டுமே வைத்து வாழ்வது முறையா?' என்று அவரது கல் மனம் சற்று நெகிழ்ந்து கேள்வி எழுப்ப, அந்த மனமே "அது முறையல்ல' என்ற பதிலையும் தந்தது. 

உடனே மனம் மாறினார் பண்ணையார். தன் பங்களாவுக்கு வந்ததும் தன் செல்வங்களைத் தன்னிடம் கூலி வேலை செய்வோருக்கும்,  ஏழைகளுக்கும் வாரி வழங்கினார். அவர் மனம் என்றும் இல்லாத மகிழ்ச்சியில் திளைத்தது. 

பண்ணையாரின் மனமாற்றத்தை கண்டு மக்கள் வியப்படைந்தனர். காரணம் தேடினர். ஆனால்,  தன் மன மாற்றத்திற்கு ஆலமரம்தான் காரணம் என்பது பண்ணையாருக்கு மட்டுமே தெரிந்த உண்மை!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com