அரங்கம்: மேதை

அரங்கம்: மேதை

காட்சி 1
இடம் இல்லம்
மாந்தர்: இரண்டாம் வகுப்பு படிக்கும் ஐஸ்வர்யா, அம்மா மாலதி, அப்பா அருண். 
(அடுக்களையில் சமையல் செய்யும் மாலதி குக்கரில் நீராவி புஸ் என வேகமாக வர)

மாலதி  - இந்தக் குக்கர் வெயிட்டை எங்கே வச்சேன்னு தெரியலையே. கண்ணில் அகப்பட மாட்டேங்குதே... என்னங்க கொஞ்சம் உங்க கண்ணில் படுதான்னு பாருங்க.
அருண்: இரு நம்ம செல்லம் ஐஷு கண்ணுக்கு எல்லாம் தெரியும்.. ஐஷு கண்ணா, கொஞ்சம் அம்மாவுக்கு குக்கர் வெயிட் தேடிக் கொடும்மா.
ஐஸ்வர்யா: (வீட்டுப் பாடம் எழுதியபடி) அம்மா கேஸ் அடுப்பு கீழே பார்த்தீங்களா...?
மாலதி: அட இருக்கே.. என் செல்லக்குட்டி..
அருண்:  நம்ம வீட்டில் எது எங்கே இருக்குன்னு ஐஷுவுக்கு எல்லாம் அத்துபடி.
மாலதி: ஞாபகசக்தி அவளுக்கு அதிகமா இருக்கு. உலக நாடுகளின் கொடிகளைக் காட்டினால் நாட்டின் பெயரை டக்குன்னு சொல்றாள்.
அருண்:  அன்னிக்கு அருணகிரிநாதர் "முத்தைத் தரு' திருப்புகழ் டிவியில் போட்டாங்க.  உடனே அதை மனனம் செய்து சொல்லிட்டாள்.
மாலதி: எனக்குதான் எல்லாம் மறந்து மறந்து போகுது. ஐஷுக்கு நல்ல ஞாபகசக்தி. போன வாரம் என்னிடம் வந்து "வர்ற பத்தாம் தேதி உங்க அம்மா (பாட்டி) பிறந்த நாள் வாழ்த்து சொல்ல மறந்துடாதீங்கன்னு' சொல்றாள். எப்போதோ சொன்னதை நல்லா ஞாபகம் வச்சிருக்காள்.
அருண்: இந்த மாதிரி அதீத ஞாபக சக்தி உள்ள குழந்தைகளை நன்கு பயிற்றுவித்தால் பிற்காலத்தில் மேதைகளா உருவாகுவாங்க.. சரி ஆபீஸ் கிளம்பறேன்.. டூ வீலர் சாவியை எங்கே வச்சேன் காணோமே...
ஐஷ்வர்யா:  அப்பா.. டி.வி. மேலே பாருங்க.
அருண்:  அடடே இங்கே வச்சிருக்கேனா.. தாங்க்ஸ்டா ஐஷு.
மாலதி:  என்னங்க ஐஷு மியூசிக் கிளாஸூக்குப் பணம் கட்டிடுங்க. பொது அறிவு புத்தகங்கள் வாங்கி வாங்க.. யோகா மாஸ்டர் வரச் சொன்னார் என்னனு கேளுங்க.
அருண்:  (போய்க்கொண்டே) ஐஷு அடிக்கடி மயங்கி விழறாளாம். போன் போட்டுக் கேட்டேன்.
 
காட்சி - 2
இடம்: பள்ளிக்கூடம். இரண்டாம் வகுப்பு 
ஏ பிரிவு.
மாந்தர்: ஆசிரியை நிர்மலா, ஐஸ்வர்யா 
மற்றும் மாணவிகள்.  

ஆசிரியை நிர்மலா:  இப்போ உங்களுக்கு 9-ஆவது வாய்ப்பாடு சொல்லித் தரப் போறேன்.
(ஆசிரியை சொல்லச் சொல்ல மாணவ மாணவிகள் திரும்பச் சொல்கின்றனர்)
நிர்மலா:  சரி நாளைக்கு இதை ஒரு தரம் பார்த்து எழுதுங்க. என்னம்மா ஐஸ்வர்யா எழுதாமல் உட்கார்ந்திருக்கே?
ஐஸ்வர்யா:  நீங்க நடத்தும் போதே எனக்கு மனப்பாடம் ஆயிடுச்சு மிஸ்.  அப்பவே எழுதிட்டேன். நோட்டைக் காட்டுகிறாள்.
நிர்மலா : என்னது எழுதிட்டியா...? ஆச்சரியமா இருக்கே.  எங்கே ஒப்புவி பார்க்கலாம்.
ஐஸ்வர்யா:  ஒப்புவிக்கிறாள்.
நிர்மலா: ஆச்சரியமா இருக்கே... சரி பசங்களா நாளைக்கு  இதுதான் வீட்டுப்பாடம்.
(மணி அடிக்க, வகுப்பு உணவு இடை
வேளைக்காகக் கலைகிறது)

காட்சி -3
இடம்:  ஆசிரியர்கள் ஓய்வு அறை
(ஆசிரியர்கள், ஆசிரியைகள் பேசிக்கொண்டே உணவை சாப்பிடுகிறார்கள்)


நிர்மலா:  ஹெச் எம் மேடம்... எங்க வகுப்பில் ஐஸ்வர்யான்னு ஒரு 
பொண்ணு. அபார ஞாபகசக்தியோட இருக்காள்.
தலைமை ஆசிரியை: அப்படியா?
மற்றொரு ஆசிரியை:  நான் தமிழ் நடத்தினேன். திருக்குறள் வாசித்தேன் ஒரு முறை. பத்து குறட்பாக்களையும் உடனே திருப்பிச் சொல்லிட்டாள் 
அந்தப் பொண்ணு!
சமூக அறிவியல் டீச்சர்:  ஆமாம்... அவளுக்குப் பொது அறிவும் அதிகமா இருக்கு.  உலக நாடுகளின் தலை 
நகரங்களின் அத்தனை பெயர்களையும் சொல்கிறாள். இந்திய நாட்டின் அனைத்து மாநிலங்களின் தலை நகரங்களின் பெயர்கள், உலக அதிசயங்கள் எல்லாம் சொல்கிறாள்.

கிளாஸ் டீச்சர் அனிதா:  மேடம் நான்தான் அந்தக் கிளாஸ் டீச்சர். இங்கிலீஷ் எடுக்கறேன். பாடப் புத்தகத்தில் உள்ள ரைம்ஸ் முழுக்க அவளுக்கு அத்துபடி. அது மட்டுமா? ஆங்கில எழுத்தாளர்களின் படைப்புகளைச் சொன்னால் எழுதியவர் பெயரை உடனே 
சொல்றாள்.
தலைமை ஆசிரியை:  ஐஸ்வர்யா திறமையை நம் பள்ளி ஆண்டு விழா அன்னிக்கு சிறப்பு விருந்தினர் குழந்தை என்று டாக்டர் வேணுகோபால் முன்னிலையில் வெளிப்படுத்துவோம். பெற்றோர், சக மாணவ- மாணவிகள் பொதுமக்கள் ஆச்சரியப்படுவார்கள்.
 
காட்சி- 4
பள்ளி ஆண்டு விழா
மாந்தர்:  குழந்தை மருத்துவர் டாக்டர் வேணுகோபால், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர், பொது மக்கள்.

தலைமை ஆசிரியை (மைக்கில்): இப்போது எங்கள் பள்ளியில் இரண்டாம் வகுப்பில் பயிலும் மாணவி ஐஸ்வர்யா தன் தனித் திறமையை வெளிப்படுத்துவார்.
(ஆசிரியை ஒருவர் கொடிகளைக் காட்ட  ஐஸ்வர்யா நாட்டின் பெயரைச் சொல்கிறாள். பின், 
புத்தகத் தலைப்பைச் சொல்ல ஆசிரியர் பெயரைச் சொல்கிறாள். குறளின் முதலடியைச் சொல்ல, அதிகாரம், எண், குறள் எண் சொல்கிறாள். 
எல்லோரும் கைதட்ட சிறப்பு விருந்தினர் பரிசை வழங்கி)
ஐஸ்வர்யாவிடம் ""பாப்பா ஒரு வாரம் கழிச்சு ஞாயிறு மாலை உன் அப்பா அம்மாவுடன் என் கிளினிக்குக்கு வா..'' (தன் விசிடிங் கார்டைத் தருகிறார்)
ஐஸ்வர்யா: கண்டிப்பா வர்றேன் டாக்டர் அங்கிள்
(விழா முடிந்து தன் பெற்றோரிடம் டாக்டர் 
சொன்னதைச் சொல்கிறாள்)
அருண்: எதுக்காக நம்மை வரச்சொல்லி இருப்பார்?
மாலதி: குழந்தையின் திறமையைப் பார்த்தார் இல்லையா. நல்ல சத்துள்ள உணவுகள் கொடுக்க பரிந்துரை செய்யலாம். என்னென்ன ஊட்டச்சத்து தரணும்ன்னு சொல்லுவார்ன்னு நினைக்கிறேன். அடுத்த வாரம் போகணும். ஞாயிறுதானே! நீங்க லீவும் போட வேண்டாம்.

காட்சி - 5
மாந்தர்:  டாக்டர் வேணுகோபால் , அருண், மாலதி, ஐஸ்வர்யா.

டாக்டர்:  வாங்க மிஸ்டர் அருண், வாங்க மேடம். ஐஸ்வர்யா வாம்மா உட்கார்.
அருண்: டாக்டர் இப்போ ஐஸ்வர்யா சில கடினமான கணக்குகளை எளிதில் போடுகிறாள்.  எந்த ஆறு இலக்க எண்ணையும் மற்றொரு ஆறு இலக்க எண்ணால் பெருக்கச் சொன்னால் நொடியில் விடைசொல்றாள்.  பாட்டில் அதீத ஆர்வம் இருக்கு. இப்போ பல சினிமா பாடல்களின் அடிப்படை என்ன ராகம் எனச் சொல்லிவிடுவாள். இன்னும் பல துறைகளில் பொது அறிவை வளர்த்துக்கொள்ள "மனோரமா இயர் புக்' என்சைக்ளோபீடியா வாங்கித்தரப் போறேன்.

டாக்டர் வேணுகோபால்: அது விஷயமாத்தான் உங்களிடம் சில விஷயங்கள் பேசணும். இவளுக்கு என்ன வயசு ஆவுது?

மாலதி: ஏழு முடியப் போவுது டாக்டர். (ஐஸ்வர்யாவை பரிசோதிக்கிறார்.)

டாக்டர்:  நான் சொல்றதைக் கொஞ்சம் கவனமாக் கேளுங்க. பரிசு வாங்க அவ மேடைக்கு நடந்து வந்தப்போ ரொம்ப சோர்வா நடந்து வந்ததைக் கவனிச்சேன். குழந்தைகளுக்குக் கண்களில் இருக்கும் பிரகாசம் அவள் கண்ணில் இல்லை. சரியான தூக்கம் இல்லாதது போல இருக்கா. அதீதக் கற்கும் ஆற்றலால் அவள் ஆழ்மனதில் அமைதி இல்லை. இது உடல் நிலையை வெகுவாகப் பாதிக்கும்.

அருண்: என்ன சொல்றீங்க டாக்டர்? அவளுக்கு நாங்க கற்பிக்கும் இதர விஷயங்களால் பாதிப்பு இருக்கா?

டாக்டர்: பள்ளி விட்டு வந்ததும் இசை, அப்புறம் யோகா, அதன் பிறகு  வீட்டுப் பாடம்... அதிகாலை நாலு மணிக்கு எழுந்து மறுபடி படிப்பு பொது அறிவு மனனம்  இப்படி அவளை எப்போதும் மூளை வேலை செய்ய வைச்சுக்கிட்டே இருக்கீங்க. இது மாபெரும் தவறு. அவள் உடல் நலம் பாதிப்பு அடையும்.

அருண் (அதிர்ச்சியுடன்): என்ன சொல்றீங்க டாக்டர்?

டாக்டர்:  நீங்க ஒரு கணினி பிரிவில் இருக்கிறதா சொன்னீங்க.  கணினியில் நிறைய போட்டோக்கள், விடியோக்கள், செய்திகள், பதிவுகள் சேரச் சேர அதன் நினைவு எனும் மெமரி கொள்ளளவு சீக்கிரம் நிறைந்துவிடும்.  அதன் காரணமா கணினி மெதுவாக இயங்கும்.  கம்ப்யூட்டரில்  நீங்கள் தேவையற்ற பதிவுகளை நீக்கினால் மறுபடி வேகமாக இயங்கும் இல்லையா? அது போல்தான் மனித மூளையும். அதில் நிறைய விஷயங்களை போடப் போட சோர்வடைந்து அதன் இயக்கம் பாதிப்படையும். அதனால் மற்ற அவயங்களின்  இயக்கத்தில் கோளாறு உண்டாகும். ரத்த அழுத்தம், சீரண உறுப்புகளில் அழற்சி,  இதயக் கோளாறுகூட உண்டாகும்.

குழந்தைகளின் கற்கும் திறன் அதிகம்.  ஆனால் தக்க ஓய்வும் மூளையில் கற்க வெற்றிடமும் அவசியம் வேண்டும். நன்கு தூங்கி ஓய்வெடுக்காவிட்டால், உடல் நலம் பாதிக்கும். அதனால்தான் இப்படி மெலிந்திருக்கிறாள். அவள் எத்தனை படிக்கிறாள், எத்தனை பரிசு வாங்குகிறாள் என்பதைவிட அவள் ஆரோக்கியம் மிக முக்கியம்.

அருண்:  ஆமாம் டாக்டர்.

மாலதி: நாங்க அவளுக்கு இனி நிறைய ஓய்வு தறோம் டாக்டர்.

டாக்டர்: அவளுக்கு சில சத்தான உணவு வகைகளை பரிந்துரைக்கிறேன். பேரீச்சை, முந்திரி, வாழைப்பழம் தாருங்கள். எடை கூடும். அவள் பள்ளியில் கற்பது மட்டும் போதும். அதிக பாரம் வேண்டாம்.

அருண்: ஆர்வக் கோளாறால் அவளை அதிகம் கற்கச் செய்து ஒரு பெரும் பாரத்தை சுமக்க வைத்துவிட்டோம். சரியான சமயத்தில் எங்களை வழிநடத்தினீர்கள்... மிக்க நன்றி.

டாக்டர்: மற்ற குழந்தைகளுடன் சமமாக அவள் இருக்கட்டும். படிப்பில் மட்டும் முந்தட்டும். தவறில்லை. 

(மூவரும் டாக்டரை வணங்கி விடை 
பெறுகின்றனர்)
 (திரை)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com