ரோஜாச் செடியும் இளவரசியும்!

அரண்மனையை ஒட்டிய ஓர் அழகிய தடாகம். இளவரசி ஆதித்யா தினந்தோறும் தடாகத்தில் நீராட தன் தோழிகளுடன் வருவாள்.
ரோஜாச் செடியும் இளவரசியும்!
Published on
Updated on
2 min read

அரண்மனையை ஒட்டிய ஓர் அழகிய தடாகம். இளவரசி ஆதித்யா தினந்தோறும் தடாகத்தில் நீராட தன் தோழிகளுடன் வருவாள். தடாகத்தை ஒட்டி ரோஜாச் செடி ஒன்று இருந்தது. அது இளவரசியுடன் நட்பு கொள்ள விரும்பியது. இளவரசி கண்ணில் படும்படியாக அழகிய மலர்களை பூக்கச் செய்தது. ஆதித்யா அந்தப் பூக்களையும் கவனிக்கவில்லை.

பழகாமல் எப்படி நட்பு பாராட்ட முடியும்? அடுத்தமுறை இளவரசி நீராட வரும்போது அவளிடம் தன்னை அறிமுகம் செய்துகொள்ள வேண்டும் என செடி நினைத்தது. மறுநாள் இளவரசி அருகே வந்தபோது அவளிடம்  "நான் மாயா! ரோஜாச் செடி! மனதை மயக்கும் அழகிய வண்ணப் பூக்களைப் பூக்கச் செய்வதால் எல்லோரும் என்னை மாயா என்பார்கள்' என்றது.

""அப்படியா? மகிழ்ச்சி!'' என்ற இளவரசி ஓரிரு வார்த்தைகள் பேசிவிட்டு செடியை வருடிக் கொடுத்துவிட்டுச் சென்றாள். இளவரசியின் மென்மையான வருடலில் செடி மகிழ்ச்சியில் சிலிர்த்துப் போனது. 

அடுத்தடுத்த நாள்களில் நீராட வரும்போது இளவரசி தன்னிடம் பேசுவாள் என செடி எதிர்பார்த்தது. ஆனால், அவள் அதைக்  கண்டு கொள்ளவில்லை. அவளின் கவனத்தைக் கவர வேண்டும் என்பதற்காக அவள் வரும் போதெல்லாம் செடி தனது உடலை வளைத்து நின்றது. மிகுந்த நறுமணத்தை வெளிப்படுத்தியது. இளவரசி திரும்பிக்கூட பார்க்கவில்லை. இதனால் செடி வருந்தியது.

அந்தத் தடாகத்தில் வந்து தினமும் நீர் அருந்தும் மயில் ஒன்று ""என்ன மாயா? எப்படி இருக்கே?'' என்று கேட்டது.

""நல்லா இருக்கேன். ஆனா...'' என்று தன் மனக்குறையை வெளிப்படுத்தியது செடி.

""எதுக்காக இளவரசி உன்கூட நட்பா இருக்கனும்னு ஆசைப்படுற?''

""அவள் இந்த நாட்டு இளவரசி! அவள் என்கூட நட்பா இருக்குறது எனக்குப் பெருமை இல்லையா?'' என்றது செடி.

""நட்புங்குறது அன்புல வரணும்; அந்தஸ்துல வர்றது நட்பு கிடையாது. அது மரியாதை. இளவரசியிடம் உனக்கு இருப்பது மரியாதை'' என்றது மயில். செடி சிறிது நேரம் மெளனமாக இருந்துவிட்டு, ""கயிலாயம் என் பிறப்பிடம்! நான் இளஞ்செடியா இருந்தப்ப ஒரு வான்பறவை என்னைக் கொண்டுவந்து இங்கே போட்டுடுச்சு. இங்கயும் நான் வளரக் கத்துக்கிட்டேன். அழகுமிகு பூக்களும், சிறந்த நறுமணமும் என்னிடம் உள்ளன. நான் தேவதைக்கு ஒப்பானவள்'' என்றது செடி. 

மயில் சிரித்துவிட்டு, ""நீ அழகா, திறமைசாலியா இருக்கலாம். ஆனால், இளவரசிக்கு அவை தேவைப்படல. இளவரசிக்கு,  பல செடிகளில் நீயும் ஒரு செடி... அவ்வளவுதான்! ஒரு வான்பறவை உன்னைக் கொண்டுவந்து இங்கே போட்டுட்டதா சொன்னே! எந்த ஒரு செயலும் காரண-காரியம் இல்லாம நடப்பதில்லை. தடாகத்தில் தாமரையும், அல்லியும் மண்டிக்கிடக்கின்றன. அன்னப் பறவைகள் நீந்தி விளையாடுகின்றன. கரையில் இருக்கும் மரங்கள் தடாகத் தண்ணீரைத் தூய்மையாக வைத்திருக்கின்றன. இந்த இடத்தில் நந்தவனம் மாதிரியான சூழலுக்கு அழகான செடி வேண்டும்.  நீ அதை நிறைவேற்றி இருக்கிறாய். முதலில் அதற்காகப் பெருமைப்படு'' என்றது மயில்.

மயில் கூறியதில் இருந்த உண்மையைச் செடி உணர்ந்தது. இளவரசியோடு நட்புக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தை அன்றே கைவிட்டது. அது எப்போதும் போல பூக்களைப் பூத்து, நறுமணத்தை வெளிப்படுத்தி, தன் கடமையைச் செய்து வந்தது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com