

குழந்தைகளே நலமா?
நான் தான் நறுவல்லி மரம் பேசுகிறேன். எனது தாவரவியல் பெயர் கார்டியா டொகோடோமா என்பதாகும். நான் பராஜினசியே குடும்பத்தைச் சேர்ந்தவன். நான் எப்போதும் பசுமையாகவே இருப்பேன். எனக்கு விருசம், மூக்குசளி மரம் என்ற வேறு பெயர்களும் உண்டு. வாக்கப்பட்டு வந்ததுதான் விருசம் பழம்னா, வயித்துல பொறந்தது வாழைப்பழமா இருக்கேனு ஒரு பழமொழி இருக்கு. இதுல விருசம் பழமுன்னு என்னைத் தான் சொல்றாங்க. என் மரத்தின் அனைத்து பாகங்களும் மருத்துவ குணம் கொண்டவை.
என் இலைகள் பளபளப்பான நீள்வட்ட அமைப்பைக் கொண்டிருக்கும். உங்கள் வீட்டில் வளரிளம் பருவத்தினர் யாருக்காவது முகப்பருக்கள் இருக்கா, அவங்க முக அழகை கெடுக்குதா. கவலைப்படாதீங்க, என் இலைச்சாறினை அந்த முகப்பருக்களின் மீது தடவினால் அவை உடனே நீங்குவதுடன் வடுக்களும் இருக்காது. என் கொழுந்து இலைகளை மைய அரைத்து, வெண்ணெய் கலந்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கலும், மூல நோயும் ஓடிடும்.
என் பழங்கள் ஆரஞ்சு நிறத்தில் வழுவழுப்பாக இருக்கும். முன்பெல்லாம், பள்ளி அருகில் என் பழத்தை தாத்தா, பாட்டிகள் விற்பாங்க. ஏன்னா, என் பழம் மிகுந்த சத்து மிக்கது. என் பழத்தை சுவைக்கும் போது பிசுபிசுப்பு சுவையுடன் இருப்பதால் எனக்கு மூக்குச்சளி மரமுன்னு இன்னொரு பெயருமுண்டு.
முகத்தை சுளிக்காதீங்க. “உருவு கண்டு எள்ளாமை வேண்டும்” குழந்தைகளே. என் பழம் துவர்ப்பு கலந்து இனிப்பு சுவையுடன் இருக்கும். என் பழங்கள் தொழுநோய், தோல் வியாதிகள், உடல் எரிச்சல், மூச்சிரைப்பு, மூட்டுவலி, வறட்டு இருமல், சிறுநீரகக் கோளாறுகள், தொண்டை வறட்சி, மண்ணீரல் வீக்கம், பல் வலி ஆகியவற்றை குணப்படுத்தும் மருந்தாக பயன்படுகிறது. என் பழத்தில் வைட்டமின் “சி” சத்து அதிகமாயிருக்கு. உங்க உடம்பு பலம் பெற வேண்டுமா என் பழத்தை தொடர்ந்து சாப்பிட்டுவாங்க. நல்ல பலம் கிடைக்கும். என் பழத்தை உண்டால் உங்களுக்கு மலச்சிக்கலே வராது. ஏன்னா, என் பழத்தில் நார்ச்சத்து அதிகமாயிருக்கு. என் பழத்தில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாயிருக்கு. இரத்தத்தை சுத்தம் செய்யும் ஆற்றலும் என் பழத்திலிருக்கு.
உங்க வயிற்றில் இருக்கும் புழுக்களை அழிக்கவும் என் பழம் உதவுது, கல்லீரல் வீக்கத்தையும் போக்கி, அதில் சேர்ந்திருக்கு நச்சுகளையும் நீக்கும். குடல்களில் ஏற்படும் நோய்களைப் போக்கி, குடல்களின் நலன் மற்றும் சீரான இயக்கத்திற்கு மூக்குசளி பழம் பேருதவி புரிகிறது. கோடைக்காலத்தில் பலருக்கும் உடல் வெப்படைந்து தலைவலி, உடல் சோர்வு ஏற்படும், அப்போது என் பழங்களை உண்டால் உடல் குளிர்ச்சி அடைவதோடு, உடல் சோர்வும் நீங்கி, உடலுக்கும், மனதிற்கும் உற்சாகத்தைத் தரும்.
தோல் நோயா, கவலைவிடுங்க குழந்தைகளே, என் விதையைப் பொடி செய்து அதனுடன் தேங்காய் எண்ணெய்யை கலந்து சொறி, சிரங்கு, புண்களின் மேல் தடவினால் அவை இருந்த இடம் தெரியாது. என் மரப்பட்டைச் சாறுடன் தேங்காய்ப் பால் சேர்த்து அருந்தினால், சட்டென வயிற்றுவலி போய்டும். என் பட்டையைப் பொடித்தும், கொட்டையைப் பொடித்தும் நீரில் கலந்து அருந்தினால் பித்தம், அக்கி, குடற்புண், சிறுநீர் குழாய் நோய்கள் அறவே நீங்கிடும். என் வேர்பட்டையை பொடித்து, தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி வாய் கொப்பளித்தால் துர்நாற்றம் பிரச்னையே வராது. குழந்தைகளே உங்களுக்குத் தெரியுமா ? முற்காலத்தில் ஈறுகொல்லி, சீப்புகள் என் மரத்திலிருந்து தான் செய்வாங்க. நன்றி குழந்தைகளே, மீண்டும் சந்திப்போம்.
(வளருவேன்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.