மரங்களின் வரங்கள்!: பழங்குடிகளின் நண்பன்- புன்னாக மரம்

குழந்தைகளே நலமா, நான் தான் புன்னாக மரம் பேசறேன்.  என் தாவரவியல் பெயர், "மகரங்கா இண்டிகா' என்பதாகும்.  நான் ஈப்போர்பியேசியே குடும்பத்தைச் சேர்ந்தவன்.
மரங்களின் வரங்கள்!: பழங்குடிகளின் நண்பன்- புன்னாக மரம்
Updated on
2 min read

குழந்தைகளே நலமா, நான் தான் புன்னாக மரம் பேசறேன்.  என் தாவரவியல் பெயர், "மகரங்கா இண்டிகா' என்பதாகும்.  நான் ஈப்போர்பியேசியே குடும்பத்தைச் சேர்ந்தவன். எனக்கு சன்டடா, வட்டதாமரை என்ற வேறு பெயர்களும் உண்டு.  நான் ஒரு பசுமை மாறா மரமாவேன்.  என்னிடம் மகரங்கா எனும் ரத்தச் சிவப்பு நிறமுடைய பிசின் அதிகமா இருக்கு.   நான் இந்தியாவிலும், இலங்கையிலும், தென்கிழக்கு ஆசியா, வெப்ப மண்டல ஆப்பிரிக்காவிலும் பரவலா காணப்படறேன். நான் 50 அடிக்கும் குறையாமல் வளருவேன்.  நான் அக்டோபர், நவம்பர் மாதங்களில் பூத்துக் குலுங்குவேன்.  

என் இலைகள் பார்க்க பச்சை நிறத்தில் மூக்கு வைத்த இதயம் மாதிரி, நீள்வட்ட வடிவத்தில் அகலமாக இருக்கும்.  தாமரை அல்லது அல்லி இலைகள் போலவும் தெரியும்.     என் வேர், இலை, பட்டை, பூ, காய், பழம், விதை ஆகியவை மருத்துவ குணம் மிக்கவை.  ஆப்பிரிக்காவில் வாழும் பழங்குடிகள் என் வேர், பிசின், பட்டை ஆகியவற்றைப் பயன்படுத்தி பல நோய்களை குணப்படுத்தறாங்களாம்.  

என் பட்டை சீராக சாம்பல் நிறத்திலிருக்கும்.  என் மரக்கட்டைகள் மிருதுவானவை என்பதால் என்னை வெட்டி, ஒட்டி, நறுக்கி, செதுக்கி, இழைத்து, இணைத்து செய்யக் கூடிய அனைத்து விதமான வீட்டு உபயோகப் பொருட்களையும், நீங்க விரும்பும் பொம்மைகளையும் தயாரிக்கலாம். 

அதுமட்டுமில்ல குழந்தைகளே, மரச்சட்டங்கள், கதவுகள், ஜன்னல்கள் போன்றவற்றையும் என் மரத்திலிருந்து தயாரிக்கிறாங்க.  என் மரத்திலிருந்து வடியும் பிசினுக்கு மகரங்கா என்று பெயர்.  இந்த பிசினுக்கு சந்தை மதிப்பு அதிகம். ஏன் தெரியுமா குழந்தைகளே, மிட்டாய் தயாரிக்கும் நிறுவனங்கள், மருந்து செய்யும் நிறுவனங்கள், ஒட்டுப்பசை தயாரிக்கும் நிறுவனங்கள், வார்னீஷ் மற்றும் பெயிண்ட் தயாரிக்கும்  நிறுவனங்களுக்கு என் பிசின் மூலப்பொருளாயிருக்கு.  அதனால அவர்களுக்கு நான் பெருமளவில் லாபமீட்டித் தரேன். 

என்னிடம் ஸ்டீல்பென்ஸ், ஃப்ளேவனாய்ட்ஸ், கவுமரின், தேர்ஃபைட்ஸ் போன்ற தாவர ரசாயனங்கள் அதிகமாயிருக்கு.   அவை பல நோய்களைப் போக்கும் தன்மைக் கொண்டவை.   அதனால, அக்கால பழங்குடி மக்கள் வயிற்று வலி, வயிற்றுக் கடுப்பு, இருமல், காய்ச்சல், குடல் புண் மற்றும் கட்டிகள் ஆகியவற்றை குணப்படுத்த என் இலைச்சாறை சிறந்த மருந்தா பயன்படுத்தியிருக்காங்க.  

புருனே நாட்டு மக்கள் என் இலைகள் ஊற வைத்த நீரில் குளித்தால் புத்துணச்சிக் கிடைக்குமுன்னு நம்பறாங்க.  மலேசியாவில் சாபா பகுதியில் வசிக்கும் மக்கள் என் இலைகளை வாழை இலைகள் போல பயன்படுத்தறாங்களாம்.  அப்படி மணக்குமாம் புன்னாகம் இலையில் கட்டிக் கொடுத்த சாப்பாடு.   அதனால், அந்த இலையில் சாப்பிடுபவர்கள் சற்று அதிகமாவே சாப்பிடுவாங்களாம்.  

குழந்தைகளே உங்களுக்குத் தெரியுமா, மரங்களின் இலைகளில் உள்ள துவாரங்கள் காற்றை சுத்தம் செய்யக் கூடிய இயல்பு படைத்தவை.  தூசு, புகை, நச்சுப் பொருட்கள் நிரம்பிய காற்று, மரங்களின் வழியாக செல்லும் போது, மர இலைகள் காற்றிலுள்ள அசுத்தங்களை வடிகட்டி சுத்தமான காற்றை உங்களுக்காக வெளியிடுகின்றன. 

நான் விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரம் வட்டம், ஜம்பை அருகே உள்ள அருள்மிகு ஆதிதிருவரங்கம் திருக்கோவிலில் தலவிருட்சமாக இருக்கேன். நன்றி குழந்தைகளே, மீண்டும் சந்திப்போம். 

(வளருவேன்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com