மரங்களின் வரங்கள்!: அழகு மரம் - சிறுநாகப்பூ மரம்!

​குழந்தைகளே நலமா?
மரங்களின் வரங்கள்!: அழகு மரம் - சிறுநாகப்பூ மரம்!
Published on
Updated on
2 min read


குழந்தைகளே நலமா?

நான் தான் சிறுநாகப்பூ மரம்  பேசுகிறேன். எனது தாவரவியல் மெசுவா பெர்ரியா என்பதாகும். ஆங்கிலத்தில் என்னை சிலோன் அயன் வுட் ட்ரீ என்று அழைப்பாங்க. நான் குட்டிஃபெரே குடும்பத்தைச் சேர்ந்தவன். நான் ஒரு அலங்கார, அழகான பூ மரமாவேன்.  என்னை உங்கள் வீட்டு முகப்பில் வளர்த்தால், வீட்டிற்கு மேலும் அழகூட்டுவேன்.  நானும் உங்கள் சுற்றுச்சூழலை பெருமளவில் காப்பேன்.  காற்றின் வேகத்தைத் தடுத்து,  மோட்டார் வண்டிகள் மற்றும் தொழிற்சாலைகளிலிருந்து  வெளியேறும் தூசிவையும், மாசுவையும் வடிகட்டி உங்களுக்கு சுத்தமான காற்றை நான் தருவேன். நான் ஓங்கி உயர்ந்து வளர்ந்து, அடர்ந்த தழைகளுடன் கூடிய மரமாவேன்.

என் இலைகள் நீண்ட முட்டை அல்லது ஈட்டி வடிவத்தில் நுனி கூர்மையாக இருக்கும். மேல் புறம் பளப்பளப்பாக மின்னிடும், கீழ்ப்புறம் வெண்மையாக இருக்கும். இலையை தலையில் வைத்துக் கட்டினால் நல்ல குளிர்ச்சித் தரும். இலையை அரைத்து  புண், கொப்புளம் ஆகியவற்றுக்கு பற்றாக போட்டால் உடனே ஆறிவிடும். இலையை அரைத்து நீருடன் சேர்ந்து குடித்தால் விரல், பாதம் ஆகியவற்றில் ஏற்படும் நமச்சல் சட்டென குணமாகும்.  என் இலையை வெந்நீரில் போட்டு ஆவி பிடித்தால் ஜலதோஷம் நீங்கும்.  என் தழை விவசாய நிலங்களுக்கு நல்ல உரம்.  காகிதம் தயாரிக்க என் மரக்கூழ் பெரிதும் பயன்படுது.

ஜனவரி முதல் ஏப்ரல் வரை பூக்கும் என் பூக்கள் பெரிய வெள்ளை நிறத்தில் தனியாகவோ அல்லது இரண்டு மூன்றாகவோ இலைகளினூடே உருவாகும். என் பூக்கள் நல்ல மணம் தரும். உதிர்ந்தாலும் மணம் வீசும். துவர்ப்பு சுவை உடையது. என் பூக்கள் மிகுந்த மருத்துவ குணமுடையது. 

குழந்தைகளே, என் பூவுடன், சீரகமும், மிளகும்  வறுத்து சிறிதளவு நீர்சேர்த்து கஷாயமாக்கிக் குடித்தால் உங்களுக்கு சளி, இருமல், காய்ச்சல் வரவே வராது, செரிமானம் பிரச்னையும் தீரும்.  அதோடு, சிறு நாகப்பூவை வறுத்து வெண்ணெய்யுடன் கலந்து சாப்பிட்டால் இரத்தமூலம் கட்டுப்படும். காய்ச்சல், சொறி, சிரங்கு, வாந்தி,  குஷ்ட நோய், சரும வியாதிகள், இரத்த மூலம், அதிக தாகம், வியர்வை முதலிய சிகிச்சைகளில் என் பூக்கள் பெருமளவில் பயன்
படுத்தறாங்க.

என் பூக்கள் உங்கள் உடலின் பல்வேறு பாகங்களை இயக்கித் தூண்டி செயலாற்ற வைக்க குணம் கொண்டது.   உலர்ந்த பூவை அரைத்து நெய்யுடன் கலந்து காலில் பூசினால் கால் எரிச்சல் போய்விடும்.  பூக்களில் தேன் அதிகமாக இருப்பதால் என்னை  நாடி தேனீக்கள் வருவாங்க. என் பூக்களிலிருந்து மஞ்சள் சாயம் எடுக்கலாம். வாசனை திரவியமும் தயாரிக்கலாம்.  என் பூக்களை வறுத்து தூளாக்கி மருந்துடன் சேர்த்துக் கொடுத்தால் மருந்துகளை உடனே உடலில் ஏற்க செய்து விடும். நரம்பு மண்டலத்தையும் திறனுடன் செயல்பட செய்யும்.

என் பட்டையை ஊற வைத்து குடிநீருடன் அருந்தினால் உடல் வலுவாகும். இப்பட்டையுடன் கிராம்பு, சுக்கு இடித்து நீருடன் கலந்து குடித்தால் இருமலும், இரத்த சோகையும் குணமாகும். என் பட்டை டேனின் நிறைந்தது என்பதால் தோல் பதனிடவும் உதவுது. பாக்டிரியா கிருமிகளையும், பூச்சிகளையும் என் விதைத் சத்துகள் கட்டுப்படுத்தும். என் விதையிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் தழும்புகள், காயங்கள் மூட்டுவலிகளைக் குறைக்க உதவுகிறது.

உங்களுக்குத் தெரியுமா குழந்தைகளே, அக்கால மக்கள் என் உறுதியை நன்கு அறிந்துதான் மரப்பாலங்கள், இரயில்வே ஸ்லீப்பர்கள், கம்பங்கள், உத்திரங்கள், தூண்கள், செக்கு, வண்டி சக்கரத்தின் குடம்  போன்றவை செய்யப் பயன்படுத்தினாங்க. கறையான் என்னைக் கண்டால் மிரண்டு ஓடிடும்.   என் விதையை கூழாக்கி அதிலிருந்து எண்ணெய் எடுத்து சோப்பு தயாரிக்கவும் பயன்படுத்தறாங்க. என் தமிழ் ஆண்டு ஜய. நன்றி குழந்தைகளே, மீண்டும் சந்திப்போம்.

(வளருவேன்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com