கருவூலம்: அஸ்ஸாம்    மாநிலம்!

அஸ்ஸாம் மாநிலம் இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் திஸ்பூர். இந்நகரம் குவஹாத்தி நகரத்தின் புறநகர் பகுதியில் அமைந்துள்ளது.
கருவூலம்: அஸ்ஸாம்    மாநிலம்!
Updated on
4 min read

அஸ்ஸாம் மாநிலம் இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் திஸ்பூர். இந்நகரம் குவஹாத்தி நகரத்தின் புறநகர் பகுதியில் அமைந்துள்ளது. அஸ்ஸாம் மாநிலத்தின் பெரிய மற்றும் முக்கிய நகரம் குவஹாத்திதான். 78438 ச.கி.மீ. பரப்பளவு கொண்ட இம்மாநிலம், 33 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

அஸ்ஸாம் மாநிலத்தின் வடக்குப் பகுதியில் பூடான் நாடும், அருணாச்சல பிரதேசம் மாநிலமும், கிழக்குப் பகுதியில் நாகலாந்து மற்றும் மணிப்பூர் மாநிலங்களும், தெற்குப் பகுதியில் மேகாலயா, திரிபுரா, மிசோரம் மாநிலங்களும், பங்களாதேஷ் நாடும் மற்றும் மேற்குப் பகுதியில் மேற்கு வங்காள மாநிலமும் சூழ்ந்துள்ளது.

அஸ்ஸாம் மாநிலத்தை ஒட்டியுள்ள ஆறு மாநிலங்களையும், அஸ்ஸாம் மாநிலத்தையும் சேர்த்து ஏழு சகோதரிகள் என்று அழைப்பர். இவ்வேழு மாநிலங்களும் மற்ற இந்திய மாநிலங்களோடு, மேற்கு வங்காளம் மாநிலத்தின் சிலிகுரி என்றழைக்கப்படும் 22 கி.மீ. நீளமுள்ள ஒரு சிறிய குறுகிய நிலப்பகுதியின் மூலம் நிலவழியாக இணைக்கப்பட்டுள்ளன. போடோ மற்றும் வங்காள மொழி இம்மாநிலத்தின் ஆட்சி மொழிகளாகும்.

அஸ்ஸாம் 1826 - ஆம் ஆண்டு ஆங்கிலேயரின் யாண்டபோ உடன்படிக்கையால் இந்தியாவின் ஒரு பகுதியானது. அஸ்ஸாம் மாநிலம் தெற்கு இமயமலையின் கிழக்குப் பகுதியில் பிரம்ம புத்திரா மற்றும் பார்க் ஆகிய ஆறுகள் பாயும் பள்ளத்தாக்கையும் அதனை ஒட்டி அமைந்துள்ள மலைகளையும் கொண்டுள்ளது.

உலகின் அதிக மழை பெய்யும் இடங்களில் ஒன்றான அஸ்ஸாம் மாநிலம் மாபெரும் ஆறான பிரம்மபுத்திரா ஆற்றினால் வளம் பெறுகிறது. அருணாச்சலப் பிரதேசத்தில் மிக வேகமாகப் பாயும் பிரம்மபுத்திரா ஆறானது, அஸ்ஸாம் பகுதியில் வேகம் குறைந்து, பல கிளை ஆறுகளாகப் பிரிந்து, சுமார் 80 முதல் 100 கி.மீ. அகலமும், 1000 கி.மீ நீளமும் கொண்ட பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கை வளம் பெறச் செய்கிறது.

தேயிலை உற்பத்தியில் சிறந்து விளங்கும் அஸ்ஸாம் மாநிலம் பெட்ரோலியம், பட்டு ஆகியவற்றின் உற்பத்தியிலும் சிறந்து விளங்குகிறது. உலகில் வேறெங்கிலும் காணக்கிடைக்காத பல அரிய விலங்குகளும், தாவர வகைகளும் அஸ்ஸாம் காடுகளில் உள்ளன. மேலும் அஸ்ஸாம், பெட்ரோலியம், நிலக்கரி, சுண்ணாம்புக்கல் மற்றும் இயற்கை எரிவாயு போன்ற வளங்களை ஏராளமாகப் பெற்றுள்ளது.

இயற்கை எழில் நிறைந்த புல்வெளிகள், வளமான சமவெளிகள், கம்பீரமான மலைகள், அழகான தேயிலைத் தோட்டங்கள், ஏராளமான தாவர வகைகள், விலங்குகள் அடங்கிய காடுகள் உள்ளடங்கியது அஸ்ஸாம் மாநிலம், இயற்கை அன்னையின் அருள் நிறைந்த இடம் அஸ்ஸாம்!

அஸ்ஸாம் வரலாறு!

மகாபாரதம், காளிகா புராணம் போன்ற நூல்களில் அஸ்ஸாம் மாநிலம் குறிப்பிடப்பட்டுள்ளது.

காமரூபப் பேரரசு!

கி.பி. 350 முதல் 1140 முடிய மூன்று அரச குடும்பத்தினர் அடுத்தடுத்து ஆட்சி செய்துள்ளனர். இவர்கள் தற்கால குவஹாத்தி, திஸ்பூர் மற்றும் துர்ஜெயா ஆகிய நகரங்களைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்துள்ளனர். இப்பேரரசில் அஸ்ஸாமின் பிரம்மபுத்திரா சமவெளி, பூடான், வங்காளம், மற்றும் பீகாரின் சில பகுதிகள் இருந்தன.

அகோம் பேரரசு!

தற்கால அஸ்ஸாம் பகுதி, சுகப்பா என்பவரால் நிறுவப்பட்ட அகோம் பேரரசால் கி.பி. 1228 முதல் 1826 வரை (600 வருடங்கள்) ஆட்சி செய்யப்பட்டது. 1826 - இல் கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சியுடன் இணைக்கப்பட்டது. 1947 - இல் நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் இந்தியாவின் ஒரு மாநிலமாகத் திகழ்கிறது.
சுற்றுலாத் தலங்கள்!

காசிரங்கா தேசியப் பூங்கா!

இந்த வனப்பகுதி கோலாகட் மற்றும் நகோவோன் மாவட்டங்களில் அமைந்துள்ளது. ஆங்கிலேய ஆட்சியில் கவர்னராக இருந்த கர்சன் பிரபுவின் மனைவி மேரி விக்டோரியாவின் ஆர்வத்தின் பேரில் இந்தப் பூங்கா 1905 - ஆம் ஆண்டு 232 ச.கி.மீ. பரப்பில் நிறுவப்பட்டது! ஒற்றைக்கொம்பு காண்டாமிருகத்திற்குப் புகழ் பெற்றது! தற்போது சுமார் 430 ச.கி.மீ. பரப்பளவு கொண்ட காசிரங்கா தேசியப் பூங்கா பிரம்மபுத்திரா நதிப்படுகையில் அமைந்துள்ளது. இது அஸ்ஸாம் மாநிலத்தின் முதன்மையான சுற்றுலாத் தலமாகும்.

யானைகள், காட்டெருமைகள், மான்கள், எறும்புத் தின்னிகள், நரிகள், கிட்டன்ஸ் சீவெட்ஸ், கரடிகள், சிறுத்தைகள், பறக்கும் அணில்கள் முதலிய மிருகங்கள் இங்கு காணப்படுகின்றன. அரிய பறவை இனங்களையும் இங்கு பார்க்கலாம். இவ்வனப்பகுதி ஒரு புலிகள் காப்பகமாகவும் இருக்கிறது. இந்த தேசியப் பூங்கா யுனெஸ்கோ அமைப்பால் உலக பாரம்பரியத் தளமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

காசிரங்கா யானைத் திருவிழா!

இங்கு ஆண்டுதோறும் நடக்கும் யானைத் திருவிழா புகழ் பெற்றது. அலங்கரிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான ஆசிய யானைகள் இவ்விழாவில் பங்கேற்கின்றன.

மனஸ் தேசியப் பூங்கா!

இப்பூங்கா கர்ரங் மாவட்டத்தில் உள்ளது. குவஹாத்தியிலிருந்து 167 கி.மீ. தொலைவில் பூடான் நாட்டு எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. இங்கு மானஸ் நதி பாய்கிறது. இப்பூங்காவும் யுனெஸ்கோவின் பாரம்பரியத் தலங்களில் ஒன்றாகும். இதுவும் ஒரு புலிகள் காப்பகமே! அதோடு இங்கு யானைகள் காப்பகமும் உள்ளது. பாண்டாக் கரடிகள், லாங்கூர் வகைக் குரங்குகள் இங்கு காணப்படுகின்றன. பல்வேறு உயிரினங்களும், தாவர வகைகளும், அடர்வனங்களும், பறவையினங்களும், இங்கு இருக்கின்றன.

காமாக்யா கோயில்

குவஹாத்தி நகரிலிருந்து 12 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. 51 சக்தி பீடங்களில் இதுவும் ஒன்றாகும். இக்கோயிலில் பிரதான தெய்வம் சிவன். இக்கோயில் பற்றிய தகவல்கள் மகாபாரதத்தில் குறிப்பிடப்
பட்டுள்ளது.

மஜீலி தீவு!

இது உலகின் மிகப் பெரிய நதி சூழ்ந்த தீவு! 352 ச.கி.மீ பரப்பளவு கொண்டது. அஸ்ஸாம் அரசு மஜீலி பகுதியை மாவட்டமாகத் தரம் உயர்த்தியுள்ளது. அஸ்ஸாம் தலைநகரான திஸ்பூரிலிருந்து 350 கி.மீ. தூரத்தில் உள்ளது. சுமார் 144 கிராமங்கள் இத்தீவில் உள்ளன. 1,50,000 மக்கள் இங்கு வாழ்கின்றனர். அரிய வகைப் பறவைகள் சூழ்ந்த வனப்பகுதிகளோடு கூடிய இயற்கை எழில் கொண்ட தீவு இது. பழங்குடிகளின் கைவினைப்பொருட்கள் இங்கு கிடைக்கும்.

உமானந்த் தீவு!

குவஹாத்தி நகரத்தில் பாயும் பிரம்மபுத்திரா ஆற்றின் நடுவே அமைந்துள்ள சிறிய தீவுதான் உமானந்த் தீவு! ஆங்கிலேயர்களால் மயில் தீவு என்றும் அழைக்கப்பட்டது. தீவில் சிவன்கோயில் ஒன்று உள்ளது.

ஜோர்ஹாட்!

வரலாறு, கலாச்சாரம் மற்றும் இயற்கை அழகு ஆகியவற்றின் சரியான கலவைதான் ஜோர்ஹாட் நகரம். இங்கு பல சிறப்புமிக்க சுற்றுலா இடங்கள் உள்ளன. கிப்பன் வனவிலங்கு சரணாலயம், ஜோர்ஹாட் ஜிம்கானா கிளப், ககோச்சங் நீர்வீழ்ச்சி, சுகபா சமன்னே úக்ஷத்ரா, பங்கல் புகாரி, சின்ன மோரா, தேயிலைத் தோட்டங்கள், லச்சிட் டோர்பு கன்னமதம், தெங்கல் பவன் என பல இடங்கள் காண்பதற்கு உரியவை!

திப்ருகார்!

திப்ருகார் இந்தியாவின் தேயிலை நகரம் என அழைக்கப்படுகிறது.
தின் சுகியா - ரயில்வே பாரம்பரிய பூங்கா மற்றும் அருங்காட்சியகம்!
ஒரு பூங்கா போன்று வடிவமைக்கப்பட்ட ரயில்வேயின் வளமான பாரம்பரியத்தை விளக்கும் அருங்காட்சியகம் இது! ஒரு பொம்மை ரயில் ஒரு மினி ஸ்டேஷனுடன் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியாகப் பயணிக்கும் வகையில் தின்சுகியா மாவட்டத்தில் உள்ளது.

திப்ரு - சைகோவா தேசியப் பூங்கா!

இந்த தேசியப் பூங்கா திப்ருகார் மற்றும் தின்சுகியா மாவட்டங்களில் அமைந்துள்ளது. 765 ச.கி.மீ பரப்பளவு கொண்டது. வடக்கே பிரம்மபுத்திரா, லோஹித் ஆறுகள் தெற்கில் திப்தி ஆறு ஆகியவற்றால் சூழப்பட்டுள்ளது. அடர்ந்த வனப்பகுதியுடன், மிருகங்கள், பறவையினங்கள், உள்ளடங்கியது! பல்லுயிர் பெருக்கம் கொண்ட மிக அழகிய பூங்கா!

ஹாஃப்லாங்!

குவஹாத்திக்கு அருகிலுள்ள மிகச் சிறந்த மற்றும் மிகவும் பிரபலமான மலைவாசஸ்தலம். மலையேற்றம், பாராக்ளைடிங் ஆகிவற்றுக்கு பெயர் பெற்றது.

திபு!

குவஹாத்தியிலிருந்து 270 கி.மீ. தொலைவில் உள்ள திபு, அஸ்ஸாமின் மிகவும் பிரபலமான மலைவாசஸ்தலங்களில் ஒன்று. இங்கிருந்து பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கின் பிரமிப்பூட்டும் காட்சியினை பார்த்து ரசிக்கலாம். இங்கு துர்கா மந்திர், சிவா மந்திர் முதலிய அழகிய கோயில்கள் உள்ளன. ஒரு தாவரவியல் பூங்கா, மாவட்ட அருங்காட்சியகம், மராட்லாங்ரி தேசியப் பூங்கா ஆகியவை இங்குள்ளன.

ஹோலோங்காபர் கிப்பன் வனவிலங்கு சரணாலயம்!

ஜோர்ஹாட் நகரத்தில் இருந்து 20 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. ஒரு புறம் பிரம்மபுத்திரா நதி. தேயிலைத் தோட்டங்கள் சூழ்ந்து உள்ள சரணாலயம் இது. இங்கு 40 - க்கும் மேற்பட்ட ஹூலாக் கிப்பன் வகை வாலில்லாக் குரங்குகள் உள்ளன. மேலும் லாங்கூர் குரங்குகள், ரீசஸ் மக்காக் குரங்குகள், நீளவால் குரங்குகள், பெரிய தேவாங்குகள், யானைகள் மற்றும் பல்வேறு விலங்கினங்கள் இங்குள்ளன. இச்சரணாலயம் அஸ்ஸாம் மாநிலத்தின் பிரபலமான சுற்றுலாத்தலமாகும்.

ககோசாங் நீர்வீழ்ச்சி!

ஜோர்ஹாட்டின் ரப்பர் மற்றும் காபி தோட்டங்களுக்கு இடையில் ஆவேசமாகக் கீழிறங்கும் ககோச்சாங் நீர்வீழ்ச்சி அற்புதமான அழகு கொண்டது! காசிரங்கா தேசியப் பூங்காவிற்கு அருகில் அமைந்துள்ளது. பருவமழைக்குப் பிந்தைய காலம் இங்கு செல்ல ஏற்ற காலமாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com