

குழந்தைகளே நலமா,
நான் தான் பேசுகிறேன். எனது அறிவியல் பெயர் புக்கனானியா லான்சான் என்பதாகும். நான் அனகார்டியேசி குடும்பத்தைச் சேர்ந்தவன். இந்தியாவில் வாழ்ந்த பழம்பெரும் தாவரவியல் அறிஞர் புக்கானன் ஹமில்டன் என்பவரின் நினைவாக எனக்கு புக்கனானியா எனும் அறிவியல் பெயரை சூட்டியிருக்காங்க. நான் இந்தியாவில் வடமேற்கு பகுதி இலையுதிர் காடுகளில் அதிகமா காணப்படறேன். நம் தமிழ்நாட்டில் சேலம், தருமபுரி மாவட்டங்களிலும், சென்னையில் வண்டலூரிலும் நான் ஒரு காலத்தில் அதிகமா வளர்ந்து அங்கு வாழ்ந்த மக்களுக்கு நல்ல பலன்களைக் கொடுத்து வந்தேன். என்னை யாருன்னு தெரியுதா? அம்மா பாயசம் செய்து தரும் போது ஒரு பருப்பை ருசித்து உண்பீர்களே, அந்த சாரப் பருப்பை தரும் மரம் நான் தான்.
இப்போ, சொல்லவே நா கூசுது. நான் ஒரு அரிய மரமாகி விட்டேன். என் மரத்தின் கருமை நிறப்பட்டை தடிப்பாக, வெடிப்புகளுடன் பார்ப்பதற்கு முதலை தோல் மாதிரி இருக்கும். பயப்படாதீங்க. என் இலைகள் மாவிலையைப் போலிருக்கும். ஆனால், நீளமும், அகலமும் சற்று கூடுதலாக இருக்கும்.
இதில் டானின், சில ட்ரை டெர்பினாய்டுகள், சப்பானின்கள், ப்ளேவனாய்டுகள் உள்ளன. என் இலைகள் கால்நடைகளுக்கு நல்ல தீவனமாகும். என் இலையைப் அரைத்து புண்கள் மேல் வைத்து கட்டினால், அந்தப் புண்கள் உடனே குணமாகி விடும்.
என் பூக்கள் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் பூக்கும். கோபுரம் போன்ற பூக்களில் உருவாகும் பழங்கள் ஒரு செ.மீ. அளவே இருக்கும். இப்பழத்தினுள் கொட்டையிருக்கும். கொட்டையினுள் இருக்கும் பருப்பே, நீங்கள் விரும்பி உண்ணும் சாரப் பருப்பு ஆகும். இது வாதுமை பருப்பிற்கு இணையானதாகும்.
இந்த சாரப்பருப்பில் அனைத்து வகையான சத்துகளும் உள்ளன. குறிப்பா, நீர், புரதம், கொழுப்பு, நார்ப் பொருள், மாவுப் பொருள், உலோக உப்புகள் ஆகிய சத்துகள் அடங்கியுள்ளன. இத்தனை சத்துகள் அடங்கிய என் பருப்பை நீங்கள் அப்படியே சாப்பிடலாம். வறுத்து உண்டால் சுவை கொஞ்சம் கூட இருக்கும். இந்தப் பருப்பினை சுவையான இனிப்புகள் தயாரிக்கவும், நீங்கள் விரும்பும் மிட்டாய்கள் தயாரிக்கவும் பயன்படுத்தறாங்க. என் பருப்பில் பாயசம் செய்தால் அவ்வளவு சுவையாக இருக்கும் குழந்தைகளே.
என் பருப்பிலிருந்து எண்ணெய்யும் எடுக்கறாங்க. இது சிறிது நறுமணதுடன், மஞ்சள் நிறத்துடன் இருக்கும். உங்களுக்கு கட்டியிருக்கா, அப்போ என் எண்ணெய்யை தடவுங்கள், அந்தக் கட்டி இருந்த இடம் தெரியாமல் ஓடிடும். இந்த எண்ணெய் மருத்துவத்தில் பெருமளவு பயன்படுது. ஆலிவ் எண்ணெய், வாதுமை எண்ணெய் ஆகியவற்றுக்கு மாற்றாகவும் பயன்படுத்தலாம். பால்மிடிக் மற்றும் ஒலியிக் அமிலங்கள் தயாரிக்கவும் இது பயன்படுது.
என் பட்டையில் டானின் அதிகமா உள்ளதால் தோல் பதனிட பெரிதும் உதவுது. பாம்பு கடிக்கும் என் பட்டை அருமருந்தாகும். அக்கால மக்கள், என் பிஞ்சு பட்டையையும், மண்ணையும் சேர்த்து சிறிது நீர் விட்டு அரைத்து கடிபட்ட இடத்தில் மேலிருந்து தடவி விடுவார்கள், பாம்பு கடி குணமாகி விடும். என் கனிகளை மலைவாழ் மக்கள் உண்கின்றனர். என் பழத்திற்கு உடலெரிச்சல், காய்ச்சல் தாகத்தைத் தணிக்கும் குணமிருக்கு. சிறந்த மலமிலக்கியாகும். என் மர பிசினில் பென்சாயின் சத்து உள்ளது. இந்தப் பிசினை துணிகளில் அச்சிடுவதற்கும், சாயமேற்றுவதற்கும் பயன்படுத்தலாம்.
குழந்தைகளே. நிலத்தடியில் நீர் ஊறவும், நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிக்கவும் அதிக அளவில் மரக்கன்றுகளை நடவேண்டும். நன்றி குழந்தைகளே, மீண்டும் சந்திப்போம்.
(வளருவேன்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.