கருவூலம்: அழிவின் விளிம்பிலிருந்து மீண்ட "ஸ்லோத்' என்னும் விலங்கு!

பார்ப்பதற்கு நம் ஊர் தேவாங்கு போல் தெரியும் "ஸ்லோத்' என்ற விலங்கு மத்திய அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்காவில் உள்ள காடுகளில் காணப்படுகிறது.
கருவூலம்: அழிவின் விளிம்பிலிருந்து மீண்ட "ஸ்லோத்' என்னும் விலங்கு!
Published on
Updated on
1 min read

பார்ப்பதற்கு நம் ஊர் தேவாங்கு போல் தெரியும் "ஸ்லோத்' என்ற விலங்கு மத்திய அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்காவில் உள்ள காடுகளில் காணப்படுகிறது. இது ஒரு மந்தமான விலங்கு. இதன் பெயருக்கு ஏற்றாற்போல் எல்லா வேலைகளையும் மெதுவாகத்தான் செய்யும். பல லட்சம் வருடங்கள் எப்படியோ தப்பிப் பிழைத்த அந்த அரிய விலங்கினம் இப்போது அழியும் நிலையில் இருக்கிறது.

இந்த அழிவுக்குக் காரணம் மனிதனின் பேராசையும், சுயநலமும்தான். நகரமயமாக்கல், காடுகளை அழித்தல், சாலைகள் அமைத்தல் முதலிய காரணங்களால் இந்த விலங்கினம் தற்போது அருகி வருகிறது.

இது மரங்களின் மேலேயே வசிக்கிறது. மிகவும் சாதுவான விலங்கு. செக்ரோபியா என்ற ஒரு குறிப்பிட்ட வகை மரங்களின் இலைகளையே தன் உணவாகக் கொண்டுள்ளது. இந்த இலைகள் ஜீரணமாவது கடினம். இலைகளை வயிராற சாப்பிட்ட பின்பு ஒரு வாரத்திற்கு வேறு எதையும் சாப்பிடுவதில்லை. இதனுடைய செரிமான அமைப்பு அப்படி! இது மரத்திற்கு மரம் தாவுவதில்லை. மரத்தின் கீழும், மேலுமே இயங்கும். கால்களில் விரல் அமைப்புகள் இல்லை. நீண்ட நகம் போன்ற அமைப்பு உள்ளது.

இலைகள் நிறைந்த மரங்களை வெட்டி அழிக்கும்போது மேலேயிருந்து கீழே விழுந்து பல ஸ்லோத்துகள் இறந்து போயின.

இதனுடைய சோம்பேறித்தனமான தோற்றம் மற்றும் மந்தமான நடவடிக்கை மனிதனைப் பெரிதாகக் கவரவில்லை. இல்லையென்றால் இதனை வளர்ப்புப் பிராணியாக வளர்த்திருப்பார்கள். ஒரு கட்டத்தில் இந்த இனம் அழிவின் விளிம்பிற்குச் சென்று விட்டது.

1992 - ஆம் ஆண்டு ஒரு நாள் நோய்வாய்ப்பட்ட ஒரு ஸ்லோத் பெண்குட்டி எதேச்சையாக குழந்தைகளால் காப்பாற்றப்பட்டது. பிறகு அந்த ஸ்லோத் பெண் குட்டியை "ஜூடி ஏவி எரோயோ' என்ற பெண்ணிடம் ஒப்படைத்தார்கள். அதற்கு முதல் உதவி மருத்துவம் செய்து காப்பாற்றினார்.

அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்த விலங்கிற்காக கோஸ்டாரிக்கா என்ற இடத்தில் 300 ஏக்கர் பரப்பளவில் ஒரு சரணாலயம் அமைத்தார் ஜூடி. அதற்கு ஸ்லோத் பாதுகாப்பு மற்றும் வளர்ப்பு மையம் எனப் பெயரும் இட்டார். இந்த விலங்குகள் செல்லப்பிராணிகளாக குழந்தைகள் போல தேவையான கவனிப்புடன் இங்கு வளர்க்கப்படுகின்றன. தேவையான உணவு மற்றும் மருத்துவப் பராமரிப்பும் ஸ்லோத்துகளுக்கு இங்கு உண்டு. அடிபட்ட ஸ்லோத்துகளையும் இங்கு பராமரிக்கிறார்கள்.

நன்றாக வளர்ந்த ஸ்லோத்துகள் இயற்கையான காடுகளில் விடப்படுகின்றன. தற்போது இந்த மையத்தில் சுமார் 150 ஸ்லோத் விலங்குகள் இருக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com