கைத் திறன்!

அப்பா எனக்குப் பரிசாகஅன்புடன் வாங்கித் தந்ததிது.செப்புச் சட்டி சாமான்கள்
கைத் திறன்!
Updated on
1 min read

அப்பா எனக்குப் பரிசாக
அன்புடன் வாங்கித் தந்ததிது.
செப்புச் சட்டி சாமான்கள்
சிலிர்க்கும் வண்ணப் பரிசுஇது!

ஓலைப் பெட்டி ஒன்றுக்குள்
உள்ளே இருக்கும் சாமான்கள்
பாலைப் போல பளிச்சென்று
பார்க்க அழகுச் சாமான்கள்!

நீல வண்ணப் பூச்சுகளால்
நெஞ்சைக் கவரும் அவையெல்லாம்!
கோல மயிலின் பச்சையிலும்
கொஞ்சும் வண்ணம் கலந்திருக்கும்!

சமையல் செய்ய உதவுகிற
சகல பொருளும் மரத்தாலே
இமையை மூட முடியாமல்
ஈர்க்கும் அழகுச் சாமான்கள்!
அன்னம் உண்ணும் தட்டுண்டு;
அழகு டம்ளர் சிலவுண்டு;
வண்ண விளக்கு ஒன்றோடு
வடிக்கும் சிப்பில் தட்டுண்டு!

நீரைச் சுமக்கக் குடமிருக்கும்;
நீண்ட உலக்கை ஒன்றிருக்கும்;
பாறை போன்ற அம்மிக்கல்
பார்க்க அழகாய் அதிலிருக்கும்!

மாவு அரைக்க மரத்திருவை
மனதைக் கவரும் மரக்கரண்டி
தூவும் பன்னீர்ச் சொம்புண்டு;
துலக்கும் சட்டி அதிலுண்டு!

ஆட்டுக் கல்லும் அதிலுண்டு
அழகு மத்து ஒன்றுண்டு
போட்டு இடிக்க உரலுண்டு
போணிச் சட்டி ஒன்றுண்டு!
தட்டு முட்டுச் சாமான்கள்
தரையில் போட்டு விளையாட
எட்டுப் பேர்க்கு இடங்கொடுக்கும்
எல்லாம் மரத்தில் செய்திருக்கும்!

தானே இருந்து தனியாயும்
தம்பி தங்கை பலரோடும்
பானைச் சோறைப் பொங்கிடலாம்
பங்கு போட்டுத் தின்றிடலாம்!

கையால் செய்த செப்புகளில்
கைத்திறன் ஒளிந்து கிடக்கிறது!
குழந்தைகளெல்லாம் விளையாட 
கொட்டிக் கிடக்குது வாருங்கள்! 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com