மரங்களின் வரங்கள்!: குளிர்ச்சியை அருளும் - வேங்கை மரம்!

குழந்தைகளே நலமா, நான் தான் வேங்கை  மரம் பேசுகிறேன்.   எனது தாவரவியல் ப்டீபரோகார்ப்பஸ் மார்ஸூபியம். நான் பபேசியே குடும்பத்தைச் சேர்ந்தவன். நான் 30 மீட்டர் உயரம் வரை வளருவேன்.
மரங்களின் வரங்கள்!: குளிர்ச்சியை அருளும் - வேங்கை மரம்!
Published on
Updated on
2 min read

குழந்தைகளே நலமா, நான் தான் வேங்கை  மரம் பேசுகிறேன்.   எனது தாவரவியல் ப்டீபரோகார்ப்பஸ் மார்ஸூபியம். நான் பபேசியே குடும்பத்தைச் சேர்ந்தவன். நான் 30 மீட்டர் உயரம் வரை வளருவேன். என் தாயகம் இந்தியா, எனினும்  நேபாளம், இலங்கையும் எனக்கு நட்பு நாடுகள். இந்தியாவில் கேரளா கர்நாடக எல்லையிலும், மேற்குத் தொடர்ச்சி மலைகளிலும், இலங்கையின் மத்திய மலைநாட்டிலும் நான் அதிகமா காணப்படறேன்.  எனக்கு சருவசாதகம், சறுதாகம், திமிசு, பீதகாரகம் என்ற வேறு பெயர்களும் உண்டு.

வேங்கை எனும் சொல், சுவாமி ஐயப்பனின் வாகனமாக இருக்கும் புலியைக் குறிப்பதால், என் பெருமைகளை நீங்கள் அறிந்து கொள்ளலாம். அக்கால முனிவர்கள், என் மரத்தில், அமரும் மனையை செய்து அதில் அமர்ந்து தான் தியானம் செய்வார்களாம். அதனால், பல சக்தியைப் பெற்றுள்ளார்களாம்.

குழந்தைகளே, என்கிட்ட இருக்க அதிசய சக்தி என்ன தெரியுமா, கோடைக்காலத்தில் உங்களை வாட்டி எடுக்கும் வெப்பத்தை நான் உள்வாங்கிக் கொண்டு உங்களுக்கு என்றும் குளிர்ச்சியைத் தருவேன். அதனால், சுற்றுச்சூழலில் வெப்பத்தைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்கு உங்களுக்கு நான் பேருதவி செய்கிறேன்.

என் இலைகள், பூக்கள், பட்டைகள் நெடுங்காலமாக ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.  கணையத்திலிருந்து இன்சுலினை மீண்டும் சுரக்கச் செய்வதற்காகப் பயன்படுத்தப்படும் ஒரேயொரு மரப்பொருள் என் மரப்பிசின் தான்  என்பதை நீங்கள் பேசுவதை கேட்கும் போது எனக்குப் பெருமையாயிருக்கு.

என் பட்டைக்கு பெரும் மகத்துவம் இருக்கு குழந்தைகளே. இதில் டிரோசிலிபின் எனும் வேதிப்பொருளும், இரும்புச் சத்தும், கால்சியமும் நிரம்பவே உள்ளது. வேங்கை மரத்தில் குவளை செய்து, அதில் நீர் ஊற்றி அருந்தினால் சர்க்கரை நோய் உங்களை அண்டாது. அதனால் என் மரப்பட்டையை சுடுநீரிலிட்டு காய்ச்சி குடித்து வந்தால், சர்க்கரை நோய் டாடா காட்டிவிட்டு பறந்துடும். அது மட்டுமா, தொடர்ந்து எந்தப் பாதிப்புமின்றி செயல்பட என் பட்டையை பொடி செய்தும் சாப்பிடலாம்.  இது  சிறுநீரகம், கண், இதயம், நரம்பு போன்ற உறுப்புகளை எந்தப் பாதிப்பும் வராமல் பாதுகாத்து, உங்களின் சோர்வைப் போக்கி, உடலுக்கு நல்ல பலத்தையும் கொடுக்கும். ஏன்னா, இது தோல் சுருக்கம் அடைதல், மூட்டுத் தேய்மானம், அஜீரணம் போன்ற பிரச்னைகளும் நல்லா தீர்வா அமையும்.

உங்களில் யாருக்காவது, தேமல், கருந்தேமல், படை, சொறி, படர்தாமரை, கட்டி போன்ற சரும நோய்கள் ஏதாவது இருக்கா? கவலையை விடுங்க. என் பட்டையுடன் சீரகம், சோம்பு, மஞ்சள் கலந்து கொதித்து வைத்து அருந்தி வந்தால் இவை விரைவில் மறைந்து விடும்.  நானும் ஒரு ரகசியம் சொல்லட்டுமா, இது தொற்றுநோய்க்கும் அருமருந்து. என் பட்டையிலிருந்தும், வேரிலிருந்தும் மூலிகை எண்ணெய் தயாரிக்கிறாங்க.   இது முடி உதிர்வதைத் தடுப்பதோடு, பேன் பிரச்னையும் நீக்கிடும்.   திருக்கோவில்களில் கொடி மரம் செய்ய என்னை தான் தேடுவாங்க.

நான் கட்டில், நாற்காலி, மேசை போன்ற  வீட்டு உபயோக மரச்சாமான்கள் செய்யவும் உதவுவேன். குழந்தைகளே, உங்களுக்குத் தெரியுமல்லவா,  மரங்கள் அடர்ந்த பகுதிகளில் மழை பெய்யும் போது கிடைக்கின்ற மழைநீர், நிலத்தடிக்குச் சென்று, நிலத்தடி நீராக மாறுவதற்கு நாங்கள்  தான் உதவுகிறோமுன்னு.   தாவரங்கள் தலைமுறைகளை வாழவைக்கு வரங்கள் என்பதை மறந்துடாதீங்க.

நான் கடலூர் மாவட்டம், கணிசப்பாக்கம், அருள்மிகு கணீஸ்வரர், திட்டக்குடி, அருள்மிகு வைத்தியநாதசுவாமி ஆகிய திருக்கோவில்களில் தலவிருட்சமாக இருக்கேன். நன்றி, குழந்தைகளே, மீண்டும் சந்திப்போம்.

(வளருவேன்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com