

குழந்தைகளே நலமா?
நான் தான் சின்கோனா மரம் பேசுகிறேன். எனது அறிவியல் பெயர் சின்கோனா ஆஃபிசினலிஸ் என்பதாகும். நான் ரூபியேசீ குடும்பத்தைச் சேர்ந்தவள். குயினா என்பது மருவி கொயினா என்றானது. என் பட்டை பெரும் மருத்துவ குணம் உள்ளதால் என்னை குயினா என்றும் அழைப்பார்கள். "குயினா' என்றால் பட்டைகளின் அரசி என்று பொருள். என் மரப்பட்டையிலிருந்து தான் "குவினைன்' எனும் மலேரியா காய்ச்சலுக்கான அருமருந்து தயாரிக்கப்படுகிறது.
என் தாயகம் தென் அமெரிக்கா. நான் ஐரோப்பா கண்டத்திற்கு ஜெசூயிட் பாதிரியார்கள் மூலம் வந்தேன். அதனால், அங்கு என் பட்டையை ஜெசூயிட் பட்டை என்று அழைப்பாங்க. ஆண்டிஸ் மலைத் தொடரின் கிழக்கு சரிவுகளில் 2500 அடி முதல் 9000 அடி வரை உயரம் கொண்ட மலைக்காடுகளிலும், இந்தியாவில் மேற்கு வங்கத்தில் டார்ஜிலிங் மலைப்பகுதிகளிலும், தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்திலும், கோயம்புத்தூர் மாவட்டம், வால்பாறையிலும் நான் அதிகமாகக் காணப்படறேன்.
என் இலைகள் வெற்றிலை போன்ற வடிவத்திலிருக்கும். பூக்கள் கொத்துக் கொத்தாக கிளைகளின் நுனிகளில் கலந்து மஞ்சரிகளாக உண்டாகும். குழந்தைகளே, மஞ்சரி என்றால், ஒரே அச்சில் ஒன்றுக்கும் மேற்பட்ட பூக்கள் கூட்டமாகக் காணப்படுதல் மஞ்சரி எனப்படும். என் பூக்கள் நறுமணம் கொண்டவை. இவை வெண்மை, வெண் சிவப்பு, நீலம் கலந்த சிவப்பு நிறங்களில் இருக்கும்.
குழந்தைகளே, சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள். கரோனா தீநுண்மி ஆரம்பப் பரவலின் போது அந்நோயின் கொடுமையைத் தடுக்க அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகள் "ஹைட்ராக்சிக்ளோரோக்வின்' எனும் மருந்தை நம் நாட்டிலிருந்து உடனடியாக அனுப்பி வைக்குமாறு கெஞ்சின. ஏனெனில், ஹைட்ராக்சிக்ளோரோக்வின் மூலம் கரோனா தீநுண்மி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த "ஹைட்ராக்சிக்ளோரோக்வின்' மாத்திரைகள் என் மரப்பட்டையிலிருந்தான் தயாரிக்கப்படுகின்றன என்று சொன்னால் நம்புவீர்களா. என் மரப்பட்டையிலிருந்து குவினைன் மருந்தும், அதன் அடுத்தக் கட்டமாக க்ளோரோக்வின் மருந்தும் தயாரிக்கப்படுகிறது. இதை வைத்து மலேரியாவுக்கு பயன்படுத்தப்படும் ஹைட்ராக்சிக்ளோரோக்வின் மாத்திரைகள் தயாரிக்கப்படுகின்றன.
உங்களுக்குத் தெரியாது குழந்தைகளே, ஆனால், எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. இப்போது நினைத்தாலும் என் உள்ளம் பதறுகிறது, உடல் நடுங்குகிறது. 1811-ஆம் ஆண்டு வாக்கில் என நினைக்கிறேன். தமிழகத்தில் ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டம், இராமநாதபுரம், பழனி, மதுரை, திண்டுக்கல்லில் ஒரு பெரும் கொள்ளை நோய் மக்களைத் தாக்கியது. அவர்களுக்கு முதல் நாள் கடுமையான காய்ச்சல் வரும், பின்னர் வலிப்பு வரும், மூன்றாம் நாள் மரணம். ஐயோ, என்னால் நினைக்கவே முடியவில்லை. மரணம் ஏற்படாதவர்களுக்கு 10 நாள் அல்லது ஒரு மாதத்திற்குப் பின் நாள்தோறும் காய்ச்சல், வயிற்றுப்போக்கு, இரத்தவாந்தி ஏற்படும், தினமும் மரண பயம்.
அப்போது தான், இந்தப் பெரும் நோய்க்கு உள்ளான திருநெல்வேலி மாவட்ட மக்களை, அங்கு வாழ்ந்த பெரியவர்கள், தாய்மார்கள் அழைத்து, ஆசுவாசப்படுத்தி, என் பட்டையிலிருந்து கஷாயம் தயாரித்து அருந்துமாறு அவர்களை அறிவுறுத்தினார்கள். என்ன ஆச்சரியம், அந்தக் கஷாயம் அருந்தியர்களைக் கண்டு அந்தக் கொள்ளை நோய் விட்டால் போதும் என்று ஓடியது. அது தான் மலேரியா காய்ச்சல் என்று பின்னர் உணர்ந்தார்கள். இதற்குப் பின்பு தான் டாக்டர் ஐன்ஸ்லீ என்பவர் என் மரப்பட்டைகள் குறித்து திருநெல்வேலியில் ஆய்வுகள் பல செய்து என் பெருமையை ஊரறிய, உலகறிய அறிவித்தார். மரங்கள் நிழலையும், மழையையும் மட்டும் தரவில்லை, ஒவ்வொன்றும் ஒரு மருத்துவ சுரங்கம் என்பதை அறிந்தீர்களா குழந்தைகளே.
(வளருவேன்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.