நாற்காலியில் பேய்!

ஒரு வீட்டில் ஒரு அப்பா, ஒரு அம்மா, இரு பிள்ளைகள் இருந்தனர்.
நாற்காலியில் பேய்!


ஒரு வீட்டில் ஒரு அப்பா, ஒரு அம்மா, இரு பிள்ளைகள் இருந்தனர். மூத்தவன் அண்ணன். அவனுக்கு 9 வயது . அவனுக்கு இரண்டு வயது இளையவள் தங்கை. அவர்கள் இருவருக்கும் ஒரு பழக்கம். எடுத்த பொருளை எடுத்த இடத்தில் வைக்க மாட்டார்கள். மாற்றி மாற்றி வைத்து விடுவர்!

அப்பாவும், அம்மாவும் அவர்களை இதற்காக எத்தனையோ முறை திட்டியுள்ளனர். ஆயினும் அவர்கள் பழக்கம் மாறவில்லை.

ஒருநாள் அவர்கள் வீட்டிற்குச் சில விருந்தினர் வர இருந்தனர். அந்த வீட்டின் வரவேற்பறையில் ஒரு சோபாவும், இரு நாற்காலிகளும் மட்டுமே இருந்ததால், அப்பா, மகனை அழைத்து உள் அறைகளில் இருந்த நாற்காலிகளையும் வரவேற்பறையில் கொண்டு வந்து போடச் சொன்னார். அண்ணனும், தங்கையும் உள் அறைகளில் இருந்த நாற்காலிகளையும் கொண்டுவந்து வரவேற்பறையில் இருந்த பிளாஸ்டிக் நாற்காலிகளோடு அருகருகே போட்டனர். அதில் ஒரு நாற்காலி இருந்த அறை ஏ.சி. அறை. அந்த நாற்காலியின் கை, வரவேற்பறை நாற்காலியின் கைமீது பட்டதும், வரவேற்பறை ப்ளாஸ்டிக் நாற்காலி, ""ஏன் உன் கை இவ்வளவு ஜில்லென்றிருக்கிறது?'' என்று கேட்டது.

""நான் எப்பொழுதும் ஏ.சி. அறையிலேயே இருக்கிறேன். அதனால்தான் எப்பொழுதும் ஜில்லென்றிருக்கிறேன்'' என்று அந்த நாற்காலி பதில் சொன்னது.
""அப்படியா... நீ கொடுத்து வைத்தவள்தான்'' என்று இலேசாக ஆடிக்கொண்டே சொன்னதாம் வரவேற்பறை நாற்காலி. (அது கொஞ்சம் லேசான நாற்காலி. கொஞ்சம் காற்றடித்தால் ஆடும்).

விருந்தினர்கள் வந்தனர். ஆளுக்கொரு நாற்காலி, சோபா எனப் பரவி அமர்ந்தனர்.

சிற்றுண்டி, காபி எனச் சாப்பிட்டுவிட்டு ஏதோதோ பேசிச் சிரித்தனர். சிறிது நேரம் கழித்து அனைவரும் புறப்பட்டுச் சென்று விட்டனர்.

அவர்கள் வைத்துச் சென்ற தட்டுகளையும், டம்ளர்களையும் எடுத்துக் கொண்டு அம்மா அடுக்களைக்குள் சென்று விட்டார்.

""பிள்ளைகளா... நாற்காலிகளை அறைக்குள் கொண்டு போடுங்கள்'' என்றார் அப்பா. எல்லா நாற்காலிகளும் கலந்து கிடந்ததால் பையன் தன் வழக்கப்படி, வரவேற்பறை நாற்காலியை ஏ.சி. அறையிலும், அந்த அறை நாற்காலியை வேறு அறையிலும் மாற்றிப்போட்டு விட்டான். இரவானதும் குளிர்சாதனத்தைப் போட்டுவிட்டு, கூடவே மின்விசிறியையும் போட்டுக்கொண்டு அனைவரும் உறங்க ஆரம்பித்தனர். புதிதாக ஏ.சி. அறைக்கு வந்த நாற்காலிக்குக் குளிரத் தொடங்கியது. அது குளிரில் நடுங்கத் தொடங்கி, டக... டக... வென ஆட ஆரம்பித்தது. சத்தம் கேட்டு பிள்ளைகள் இருவரும் விழித்துக் கொண்டனர்.

""அண்ணா... அந்தச் சேர், தானா ஆடுது...'' என்று தங்கை சொன்னாள்.

""ஆமா...அதில் பேய் உட்கார்ந்திருக்கும்னு நினைக்கிறேன்...'' என்றான் அண்ணன்.

(அதிகமாகப் பேய் படங்கள் பார்த்த விளைவு அது)

""வீல்'' ன்று கத்தியபடி தங்கை அம்மாவையும், அண்ணன் அப்பாவையும் கட்டிப் பிடித்துக் கொண்டனர்.

சட்டென்று விழித்த அப்பாவும் அம்மாவும் பதறிப்போய் ""என்ன... என்னவாயிற்று'' ? என்று குழந்தைகளைக் கேட்டனர்.

இருவரும் கண்களை மூடியபடி அந்த நாற்காலியைச் சுட்டிக் காட்டி, ""அதோ... அந்தச் சேர்ல பேய் உட்கார்ந்துகிட்டு டக... டக... னு ஆட்டுது அந்தச் சேரை'' என்று கோரசாகக் கூறினர்.

அப்போதுதான் அப்பா நாற்காலி மாறியிருப்பதைப் புரிந்து கொண்டு கடகடவெனச் சிரித்தார்.

அடப் பிள்ளைகளா... இது வரவேற்பறை நாற்காலி. இலேசானது. வேகமாகக் காற்றடித்ததால் ஆடுகிறது. எடுத்த பொருளை எடுத்த இடத்தில் வைக்கணும்னு எத்தனை முறை சொல்லியிருக்கேன் ? நீங்க இதை மாத்திப் போட்டுட்டீங்க !'' என்று கூறியவாறு எழுந்து அந்த நாற்காலியை எடுத்துக்கொண்டு போய் ஹாலில் போட்டு வந்தார். பயம் நீங்கிய குழந்தைகளைப் பார்த்து இனிமேல் இந்த மாதிரி குழப்பம் பண்ணக் கூடாது, எடுத்த பொருளை மீண்டும் அதே இடத்தில் வைக்கணும் என்று அம்மா கூறிய அறிவுரையைக் கேட்டுத் தலையை ஆட்டியபடி புன்னகையோடு மீண்டும் தூங்க ஆரம்பி த்தனர் பிள்ளைகள்.

வரவேற்பறைக்கு வந்ததும் அதன் கதகதப்பில் நாற்காலியின் குளிர் அடங்கியது.

"" என்னவாயிற்று? ஏ.சி. ரூம் நாற்காலியைப் பார்த்துக் "கொடுத்து வைத்தவள்' எனப் பொறாமைப்பட்டாயே ? எப்படி இருந்தது உள்ளே ? '' என்று கேட்டது மற்றொரு நாற்காலி.

""ஐயையோ ... நடுங்கிப் போய் விட்டேன். இந்தக் கதகதப்பு தான் நமக்குச் சரிப்பட்டு வரும்'' என்றவாறு அமைதியாகத் தூங்க ஆரம்பித்தது இந்த நாற்காலி.

மற்றொரு நாற்காலியும், சோபாவும் சிரித்துக் கொண்டே உறங்க ஆரம்பித்தன.

 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com