மரங்களின் வரங்கள்!: ஏழைகளின் ஆப்பிள் - பேரிக்காய் மரம்

நான்தான் பேரிக்காய் மரம் பேசுகிறேன். எனது அறிவியல் பெயர் பைரஸ் பைரிபோலியா, தாவரவியல் பெயர் பைரஸ் கம்யூனிஸ் என்பதாகும்.
மரங்களின் வரங்கள்!: ஏழைகளின் ஆப்பிள் - பேரிக்காய் மரம்
Updated on
2 min read


குழந்தைகளே நலமா, 

நான்தான் பேரிக்காய் மரம் பேசுகிறேன். எனது அறிவியல் பெயர் பைரஸ் பைரிபோலியா, தாவரவியல் பெயர் பைரஸ் கம்யூனிஸ் என்பதாகும். நான் ரோசாசியேயி குடும்பத்தைச் சேர்ந்தவன். என்னை நாட்டு ஆப்பிள், ஏழைகளின் ஆப்பிள் என்றும் அன்பாக அழைப்பார்கள். நான் சுமாரான வறட்சியையும் தாங்கி வளருவேன். என்னை "ஷெல்டர் பெல்ட்' எனப்படும் காற்றுத் தடுப்பு பணிகளில் சிறந்த மாசு அகற்றும் மரமாக பயன்படுத்தலாம்.

அதாவது, நான் மாசுகளையும், தூசுகளையும் தடுத்து, உங்களுக்கு சுத்தமான காற்றைத் தருவேன். என்னிடமிருந்து நீங்கள் பெறும் பேரிக்காய் வெளித் தோற்றத்திற்கு பச்சை காயைப்போல இருந்தாலும், இது பழம்தான். அக்கால மக்கள் என் பலன்களை நன்கு அறிந்து, என் பழங்களைத் துவர்ப்பியாக, குடற்புழு நீக்கியாக, வயிற்றுப்போக்கை குணப்படுத்தவும் பயன்படுத்தி வந்துள்ளார்கள். என் இலைகளிலிருந்து மஞ்சள் நிற சாயம் எடுக்கலாம். இது துணிகளுக்கு சிறந்த நிறமேற்றியாகும். 

குழந்தைகளே, உங்களுக்கு சுண்ணாம்புச் சத்தும், இரும்புச் சத்தும் அதிகம் தேவைப்படும். இந்தச் சத்து பேரிக்காயில் நிறைய உள்ளன. அதோட ஏ, பி, பி2 என வைட்டமின்களும் நிறைய உள்ளன. நீங்கள் தினமும் ஒரு பேரிக்காய் சாப்பிட்டு வந்தால் உங்களுக்கு வாய்ப்புண் வரவே வராது, அதோட வயிற்றுப் புண்ணும் உடனே குணமாகும். 

இதயம் படப்படப்பாக இருந்தால் பயப்படாதீங்க. என் காயை தினமும் இரு வேளை சாப்பிடுங்க, அந்தப் படபடப்பு பறந்தோடிவிடும். நான் இன்னொன்றையும் சொல்லட்டுமா? என் காயில் நார்ச்சத்து மிகுந்து இருப்பதால், அது குடல் புற்றுநோய்க்கு சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியாகச் செயல்படுகிறது. 

குழந்தைகளே, என் பழத்தில்  நார்ச்சத்துக்களோடு சேர்த்து கேட்டிசின்ஸ் மற்றும் ப்ளாவனாய்டுகள் எனப்படும் குறிப்பிட்ட இரு வகையான உயிர் வளியேற்ற எதிர்ப் பொருள்கள், ஆன்டி ஆக்ஸிடெண்ட்டுகள் உள்ளன.  இது உங்கள் உடலில் அதிக அளவில் கொழுப்பு சேராமல் தடுக்கிறது, அதோடு உடல் எடையும் குறையும். ரத்தத்திலிருந்து பிரிந்த தாது உப்புகள்தான் சிறுநீரகத்தில் படிந்து அவை கல்லாக மாறுகின்றன. இவற்றை உடைத்து வெளியேற்றும் சக்தி என் பழத்திற்கு உள்ளது.

அதோடு, உங்கள் உடல் சூட்டைத் தணிக்கும், கண்கள் ஒளி பெறும், நரம்புகள் புத்துணர்வு அடையும், சருமத்தில் ஏற்படும் நோய்கள் குணமாகும், குடல், இரைப்பை இவற்றுக்கு நல்ல பலத்தைக் கொடுத்து, உடலையும் வலுவாக்கும். 

நான் மிகவும் உறுதியானவன். நான் என் அண்ணன் எபோனி மரத்திற்கு எந்தவிதத்திலும் குறைந்தவனில்லை. என் மரத்தின் மூலம் செய்யப்படும் மரச் சாமான்கள் மீது கருப்பு வண்ண வார்னீஷ் அடித்துவிட்டால் போதும், அண்ணன் எபோனி போலவே இருப்பேன். கனமானப் பொருள்களைத் தாங்கும் பெட்டிகள், நீங்கள் விரும்பும் பொம்மைகள், வேளாண் கருவிகள் மேஜைகள், நாற்காலிகள் ஜன்னல்கள், வீட்டிற்குத் தேவையான தட்டு, முட்டு சாமான்கள் செய்ய நான் பெரிதும் உதவுவேன். 

நீங்கள் உங்கள் எலும்புகள் மற்றும் பற்கள் பலவீனமாக இருப்பதாக நினைத்து வருந்துகிறீர்களா? கவலையை விடுங்க. தொடர்ந்து பேரிக்காயைச் சாப்பிடுங்க, என் பலத்தை உணருவீங்க.  குழந்தைகளே, தாய்மைப் பேறு அடைந்தவர்கள் தினசரி உணவில் என் காயை சேர்த்து சாப்பிட்டு வந்தால், பிறக்கும் குழந்தைக்கு எலும்பு வலிமை பெறுவதோடு உடல் வலுவாகவும் இருக்கும். அதோடு பாலூட்டும் தாய்மார்களுக்குப் போரிக்காய் அருமருந்து. நான் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே பழம் தரும் மரம் என்பதால், அக்காலங்களில் பேரிக்காயை வாங்கிச் சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தியை நீங்கள் அதிகம் பெறலாம். 

மரம் தரும் வரம், மறக்காமல் வளர்ப்பது தவம்.  நன்றி குழந்தைகளே, மீண்டும் சந்திப்போம். 

(வளருவேன்)
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com