அரங்கம்: டாக்டர் மாத்ருபூதம்

அரங்கம்: டாக்டர் மாத்ருபூதம்


காட்சி - 1
இடம்: டாக்டர் மாத்ருபூதம் கிளீனிக்
மாந்தர்கள்: டாக்டர் மாத்ருபூதம், வரவேற்பாளர் 
மற்றும் நோயாளி எண் 1.
(நோயாளி ஒருவர்  நாய்க்குட்டியுடன் உள்ளே நுழைகிறார்.)
நோயாளி-1 : மேடம், டாக்டர் இருக்கிறாரா ?
வரவேற்பாளர்: இருக்காரு. உள்ளே போய்ப்பாருங்க
(அந்த நோயாளி டாக்டர் இருக்கும் அறைக்குள் செல்கிறார்)
டாக்டர்: வாங்க, உட்காருங்க. என்னாச்சு ?. நாயைப் பிடிச்சிகிட்டு நடைபயிற்சிக்கு போயிட்டு, அப்படியே என்னைப் பார்க்க வந்துட்டீங்க போலிருக்கே!
நோயாளி-1: ஆமாம் டாக்டர், ஒரு வாரமாக  வயித்துல எதுவும் சரியா இறங்க மாட்டேங்குது. ஆனால், பசியோ வயித்தை கிள்ளுது. பாலைப்பார்த்தாலே வயிறு குமட்டுது. சோறு  வாசனை மூக்கைத் துளைத்தால் கூட சாப்பிட மனம் போக மாட்டேங்குது.
டாக்டர்: அப்புறம் என்ன செய்யுது ?
நோயாளி-1: எடை கூட கொஞ்சம் கொறஞ்சாப்போல தெரியுது டாக்டர். எலும்புகளெல்லாம் கூட வெளியேத் தெரிய ஆரம்பிச்சுட்டுது.
டாக்டர்: அப்புறம் என்ன கம்ப்ளயிண்ட் ?
நோயாளி-1: டாக்டர்,  ரெண்டே ரெண்டு அடியெடுத்து வெச்சாக்கூட மூச்சு முட்டுறாப் போல எனக்குத் தோணுது
(டாக்டர் ஸ்டெதஸ்கோப்பை நோயாளி- 1 ன் 
மார்பிலும் முதுகிலும் வைத்துப் பார்க்கிறார் அவரது கண்களில் டார்ச் விளக்கு அடித்துப்பார்க்கிறார்.)
டாக்டர்: மூச்சை நல்லா இழுத்து விடுங்க. நாக்கை நல்லா நீட்டுங்க! நீங்க நல்லாத்தானே இருக்கீங்க. உங்க உடம்புக்கு ஒன்னும் இல்லையே!
நோயாளி-1: டாக்டர், நான் நல்லாதான் இருக்கேன். என் நாய்க்குட்டிக்கு தான் உடம்பு சரியில்லை. உங்க கிளீனிக் வாசல்ல வெச்சிருக்கற விளம்பரப் பலகையைப் பார்த்துவிட்டு தான் உள்ளார நுழைஞ்சேன். டாக்டர் எப்படியாவது என் நாய்க்குட்டியைக் குணப்
படுத்துங்க டாக்டர்.
டாக்டர் :என்ன சொல்றீங்க? உங்க நாய்க்குட்டிக்கு நான் வைத்தியம் பார்க்கணுமா ? என்னை யாருன்னு நெனச்சீங்க?  நாயைக் கூப்பிட்டுகிட்டு தயவு செஞ்சு வெளியே போயுடுங்க. மற்ற பேஷன்ட்டுகள் பார்த்தா என்னை தப்பா நெனச்சுப்பாங்க ப்ளீஸ். (வரவேற்பாளரை உரத்த குரலில் கூப்பிட்டு) என்னம்மா வேலை செய்றீங்க?  வர்ற பேஷன்ட் யாருனு தெரிஞ்சிகிட்டு, என்ன ஏதுன்னு கேட்டுக்காம, எல்லோரையும் என் ரூமுக்கு அனுப்புறீங்க ?. இவரோட நாய்க்குட்டிக்கு நான் வைத்தியம் பார்க்கணுமாம். நான் என்ன விலங்குகள் நல மருத்துவரா, அதைப் பற்றி எனக்கு என்ன தெரியும் ?
வரவேற்பாளர்:என்னை மன்னிச்சுடுங்க டாக்டர். இனிமே இப்படி நடக்காம நான் பாத்துக்கறேன்....(வந்திருக்கிற நபரைப் பார்த்து)  என்ன சார் நீங்க,  எங்களோட கிளீனிக்கின் போர்டை பார்த்துட்டு வரலியா?. இப்ப பாருங்க டாக்டர் என்னை கோவிச்சிக்கிறார்.
நோயாளி-1: மேடம்! நான்  இரண்டு முறை விளம்பரப்பலகையைச் சரியாகப் பார்த்து விட்டுதான் உள்ளார வந்திருக்கிறேன்.
வரவேற்பாளர்: சரி,சரி!  உங்க நாயைக் கூப்பிட்டுகிட்டு விலங்குகள் நல மருத்துவரைப் போய்ச் சீக்கிரம் பாருங்கள்.
நோயாளி: தனக்குள் நான் சரியாக விளம்பரப் பலகையைப் பார்த்து விட்டுத்தானே உள்ள நொழஞ்சேன்! டாக்டர் என்னடான்னா இப்ப பாக்க மட்டேங்கறாரே! 

காட்சி - 2
இடம்: டாக்டர் மாத்ருபூதம் கிளீனிக்
மாந்தர்கள்: டாக்டர் மாத்ருபூதம், வரவேற்பாளர் 
மற்றும் நோயாளி எண் 2.
(இரண்டாம் நோயாளி கிளீனிக்கினுள் நுழைகிறார்)

வரவேற்பாளர்: என்ன சார் உங்க உடம்புக்கு ?
நோயாளி-2: ஊசி போடுவாரானு டாக்டர் கிட்ட கேக்கணும்.
வரவேற்பாளர்: டாக்டர் ஊசி போடுவாருங்க!..உள்ளாரப்போய் அவரைப் பாருங்க.
நோயாளி-2: ரொம்ப நன்றிங்க ! (டாக்டர் இருக்கும் அறைக்குச் செல்கிறார் நோயாளி-2)
டாக்டர்: வாங்க உட்காருங்க
நோயாளி-2:  வணக்கம் டாக்டர்!. ஒரு ஊசி போடுவீங்களா ?
டாக்டர்: ஓ பேஷா போடறேனே ! இங்க வந்து உட்காருங்க.
நோயாளி-2: ரொம்ப நன்றி சார்.  அஞ்சு நிமிஷத்துல என் டாமியைக் கூப்பிட்டுகிட்டு வந்துடறேன். கொஞ்சம் இருங்க சார்)
டாக்டர்:  அப்ப ஊசி உங்களுக்கு இல்லையா? நீங்க "டாமி' னு பேர் சொல்லப்பவே நெனச்சேன், அது ஒரு நாயோடப் பேராக இருக்குமுனு
நோயாளி-2: டாக்டர்!.. "டாமி' என்னோட பிள்ளை  தான்! எங்க வீட்டுல வளர்ற  செல்லப்பிள்ளைதான் அவன். அவனுக்குதான் ஊசி போடணும் டாக்டர்
டாக்டர்: (பற்களை நறநறவென கடித்தபடியே) ஏங்க, வரச்ச எந்த டாக்டரைப் பார்க்க வர்றோம்னு தெரிஞ்சிக்கிட்டு வர மாட்டீங்களா?
நோயாளி2: கோவிச்சுக்காதீங்க டாக்டர்!. வாசல்ல வெச்சிருக்கற விளம்பரப் பலகையைப் பார்த்து விட்டுத்தான் உள்ளே வந்தேன்
டாக்டர் மறுபடியும் வரவேற்பாளரை நோக்கி உரக்கக்குரல் கொடுக்கிறார். . ஏம்மா, வர்றவங்களை ஏன், எதுக்கு வந்திருக்காங்கனு கேட்டுட்டு எங்கிட்ட அனுப்பக்கூடாதா? இவரும் அவரோட நாய்க்குட்டிக்கு வைத்தியம் பார்க்கணும்னு  உள்ள வந்து நிக்கிறாரு.
வரவேற்பாளர்: சாரி சார்!  இந்த முறையும் என்னை மன்னிச்சுடுங்க. இனிமே இந்த தப்பு நடக்காம நான் பாத்துக்கறேன்.

காட்சி - 3
இடம்: டாக்டர் மாத்ருபூதம் கிளீனிக்
மாந்தர்கள்: டாக்டர் மாத்ருபூதம், வரவேற்பாளர் 
மற்றும் நோயாளி எண் 3.

(கிளீனிக் வாசலில் சிறிது சலசலப்பு ஏற்படுகிறது. 
ஒரு பெண் நோயாளி டாக்டரைப் பார்க்க வேகமாக 
நுழைகிறாள்.)

நோயாளி-3: டாக்டரை உடனே பார்க்கணும் மேடம்.
வரவேற்பாளர்: யாருக்குமா உடம்பு சரியில்லை ?
நோயாளி-3.: என்னோட லட்சுமிக்கு தான்  மேடம்!
வரவேற்பாளர்: பேஷன்ட்டை கூப்பிட்டுகிட்டு வந்திருக்கீங்களா?
நோயாளி-3: என்னோட லட்சுமி வாசல்ல தான் 
நின்னுக்கிட்டுருக்கா 
வரவேற்பாளர்: அப்ப அவங்களையும் உள்ளே 
கூப்பிட்டுகிட்டு போங்க. டாக்டர்  ஃப்ரீயாத்தான் 
இருக்காரு
நோயாளி-3: லட்சுமியை உள்ளே கூட்டிட்டுப் போக முடியாது மேடம். டாக்டர் தான் அவளை வெளியே வந்து பாக்கணும்!

(வரவேற்பாளர் ஒன்றும் புரியாமல் விழித்துக் கொண்டிருக்கிறாள்)

(அதே நேரம் தன்னுடைய முதலாளியம்மா தன்னுடன் இல்லாததைக்கண்டு வாசலில் இருந்த லட்சுமி ம்மா!.ம்மா என்று கத்த ஆரம்பித்தது. கிளீனிக்கின் வாசலில் ஒரு மாடு ம்மா..ம்மா என்று கத்துவதைக் கேட்டு டாக்டர் மாத்ருபூதம் பயந்து கொண்டே 
வாசலுக்கு வேகமாக ஒடி வருகிறார். ஏற்கெனவே காலையிலிருந்து இரண்டு கால்நடை நோயாளிகள் தன்னை வந்து பார்த்துவிட்டுப் போயிருக்கிறார்கள் என்ற  கூடுதல் பயம் வேறு அவருக்கு --டாக்டரே வெளியில் வருவதைப் பார்த்துவிட்டு 
மகிழ்ச்சியடைகிறாள் அவள் )

நோயாளி-3: டாக்டர் என்னோட லட்சுமிதான் வாசல்ல நிக்குது. பாவம் என்ன வலியோ, தெரியல! கத்திகிட்டு நிக்குது! அதுனால நடக்க முடியல டாக்டர். அதனோட கால் குளம்புகள் ஒரே ரணமாய் இருக்குது. அதால நிக்ககூட முடியல. உட்கார முடியல. ரொம்ப கஷ்டப்படுது டாக்டர்.
(டாக்டருக்கு என்ன சொல்வது என்று புரியவில்லை. காலை முதற்கொண்டு நாய்கள், மாடுகள் என்று விதம் விதமான நோயாளிகள் வந்த வண்ணம் இருக்கின்றனர். அவருக்கு ஒன்றும் விளங்கவில்லை. ஒருவழியாக அந்த பெண்ணை சமாதானம் செய்து விட்டு, அவளது மாட்டுடன் அவர்களை வெளியே அனுப்பி வைத்தார் டாக்டர். கோபம் சிறிது அடங்கிய பின் தன்னுடைய நாற்காலிக்குச் சென்று அமர்ந்தார்.)

காட்சி - 4
இடம்: டாக்டர் மாத்ருபூதம் கிளீனிக்
மாந்தர்கள்: டாக்டர் மாத்ருபூதம், வரவேற்பாளர் 
மற்றும் நோயாளி எண் 4.

(நான்காவது நோயாளி கிளீனிக்கினுள் நுழைகிறார்.)

வரவேற்பாளர்: என்னம்மா! யாரைப்பார்க்கணும்? உங்களுக்கு என்ன பிரச்சினை ?
நோயாளி-4: வயத்தாலப் போகுது மேடம்.
வரவேற்பாளர்: சரிம்மா, டாக்டர் ஃப்ரீயா தான் இருக்காரு. அவரைப் போய்ப்பாருங்க....

(4வது நோயாளி டாக்டரின் அறைக்குள் செல்கிறார்.)

டாக்டர்: வாங்கம்மா உட்காருங்க!.  உடம்புக்கு என்ன செய்யுது?
நோயாளி4:  டாக்டர்  மணி க்கு ரெண்டு நாளா உடம்பு சரியில்ல. எதை சாப்பிட்டான்னு தெரியல! வயித்தாலப் போய்க்கிட்டிருக்கு.
டாக்டர்: மணியைக் கூப்பிட்டுக்கிட்டு வந்திருக்கீங்களா? 
நோயாளி-4. இல்லீங்க! வீட்டுல.கிழிஞ்ச நார் மாதிரி கெடக்கறார் டாக்டர். அவரால நிக்க கூட முடியல. நீங்க தான் கொஞ்சம் தயவு பண்ணி,  எங்க வீட்டுக்கு வந்து அவருக்கு மருத்துவம் பார்க்கணும்.
டாக்டர்: சரிம்மா, எல்லா பேஷன்ட்டுகளையும் பார்த்த பிறகு, கடைசியாக உங்க வீட்டுக்கு வந்து, உங்க மணி யைக் கண்டிப்பாக பார்க்கிறேன். உங்க வீட்டு விலாசத்தையும், கைப்பேசி எண்ணையும் கொடுத்து விட்டுப் போங்க.
நோயாளி-4: டாக்டர் சார்!. ரொம்ப முடியாம இருக்கார் சார் அவர். இரவு வந்துட்டா வீட்டைத் தாண்டி ஒருத்தரையும் போக விட மாட்டார். ரெண்டு நாளா, பகல்லயும் ராத்திரியும் சுருண்டு படுத்துகிட்டேயிருக்காரு. அவரைப் பார்த்தா ரொம்ப பாவமாயிருக்குது டாக்டர்.
டாக்டர்: (குழப்பத்துடன்) மணி ங்கறது உங்க குடியிருப்பு காவலாளி யாம்மா?
நோயாளி-4: இல்லை டாக்டர். எங்க வீட்டுக்காரர் ஆசையாக நிறையக்காசு கொடுத்து வீட்டுக்கு கூட்டிட்டு வந்த ராஜபாளையம் ஜாதி நாய்ங்க!.
டாக்டர் மாத்ருபூதத்திற்கு வந்த கோபத்தில் வரவேற்பாளரைக் கூப்பிட்டு சத்தம் போடுகிறார்.)
நோயாளி-4: டாக்டர்! அவங்களைக் கோவிச்சுக்காதீங்க. உங்க கிளீனிக் வாசலில் வைத்திருக்கும் விளம்பரப்பலகையைப் பார்த்து விட்டுதான் உள்ள வந்தேன்.
(டாக்டர் மாத்ருபூதத்திற்கு  காலையிலிருந்து வந்திருக்கும் நான்கு நபர்களும் வாசலில் வைக்கப்பட்டிருக்கும் விளம்பரப் பலகையைப்பற்றியே கூறிவருவதைக் கேட்டு குழப்பம் அடைகிறார்.
அப்படியென்ன அந்த விளம்பரப் பலகையில் 
எழுதியிருக்கிறதென்ற ஆவல் அவருக்கு ஏற்பட்டது. அந்த ஆவலைத் தாங்க முடியாமல், வரவேற்பாளரை அழைத்துக்கொண்டு வாசலுக்குச் சென்று பார்க்கிறார்.
வாசலில் வைக்கப்பட்டிருந்த  விளம்பரப்பலகை அவரை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாகியது  -- டாக்டர் சிங்கமுத்து.  விலங்குகள் நல மருத்துவர். முத்து பெட் கிளீனிக் என்று ஆங்கிலத்திலும் தமிழிலும் 
அழகான ஒரு நாய்க்குட்டியுடன் வரையப்பட்டிருந்தது அந்த விளம்பரப் பலகை..---சரியாகத் தன்னுடைய கிளீனிக்கின் முன் வைக்கப்பட்டிருக்கும் விளம்பரப்பலகையைப் பார்த்துவிட்டு மிகவும் 
அதிர்ச்சியடைகிறார் டாக்டர் மாத்ருபூதம்---
அருகிலுள்ள "டீ'க்கடையில் "டீ' குடித்துக்
கொண்டிருந்த இருவர் சாவகாசமாக வந்து அந்த விளம்பரப்பலகையை எடுத்துக் கொண்டு அங்கிருந்து நகர்கின்றனர்.)

அந்த நபர்கள்: சார், எங்கள மன்னிச்சுடுங்க சார்... ஒங்க கிளீனிக் முன்னாடி, தொந்தரவு கொடுக்கறாப்போல,  இந்த விளம்பரப்பலகையைத் தெரியாம வச்சுட்டோம்.  நாலு வீடுகளைத் தாண்டிதான் இந்த டாக்டரும் அவரது கிளீனிக்கை இன்னிக்கி தொறக்கப் போறாரு. கொஞ்ச நேரத்துல வர்றேன்னு சொன்னாரு. ஆனால். இன்னும் வந்து சேரல. அதனால "டீ' குடிச்சுட்டுப் போகலாமுனு இங்க வந்தோம். எங்கள மன்னிச்சுடுங்க சார்.
டாக்டர்: ஓ! இந்த விளம்பரப் பலகையைப்பார்த்து விட்டுதான் மக்கள் காலையிலிருந்து நம்ம கிளீனிக்கிற்கு எல்லா ஜீவராசிகளையும்  கூட்டிட்டு வர்ற ஆரம்பிச்சாங்களா?       
(டாக்டர் மாத்ருபூதத்திற்கு ஒரு புறம் மிகுந்த கோபம். மறுபுறம் ஆனந்தம் .இருந்தாலும் மகிழ்ச்சியுடன் தன்னுடைய அறைக்குச்சென்று தன்னுடைய நாற்காலியில் பயமின்றி அமர்ந்து கொண்டார்--  (அவர் தன் மனதிற்குள்) இனி  யாரும் நம்மைத் தேடி வரமாட்டார்கள். இனி தன்னுடைய மகன்  பாலாஜி வளர்க்கும் இரு நாய்க்குட்டிகள், மற்றும் இரு பூனைக்குட்டிகளுக்கும் கவலையில்லை. அவர்களை கவனித்துக்கொள்ள பக்கத்துலேயே ஒரு  நல்ல விலங்குகள் நல மருத்துவர் ஒருவரும் வந்து விட்டார். இந்த பகுதியில் விலங்குகள் நல மருத்துவர் இல்லையென்ற குறை இன்றோடு தீர்ந்து விட்டது.

- திரை-
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com