கரடி மேகம்!

ஒரு மழைக்கால மாலை நேரம். சூரியன் இன்னும் மறையவில்லை. அப்போது வானில் ஒரு பெரிய மேகம் உருவானது.
கரடி மேகம்!


ஒரு மழைக்கால மாலை நேரம். சூரியன் இன்னும் மறையவில்லை. அப்போது வானில் ஒரு பெரிய மேகம் உருவானது. பார்ப்பதற்கு அது ஒரு பெரிய கரடியைப் போன்ற தோற்றத்தைக் கொண்டிருந்தது. அது காற்றில் வானில் மெல்ல நகர்ந்தது. அருகிலிருந்த இரு குட்டி மேகங்களை நெருங்கி அவற்றைத் தன் கால்களாக ஒட்டிக்கொண்டது. இப்போது அது நிஜக் கரடி போலவே இருந்தது! 

கொஞ்சம் கொஞ்சமாக அது வான் முழுக்க நகர்ந்து நகர்ந்து பற்பல குட்டி மேகங்களை விழுங்கி, விழுங்கி மிகப் பெரிய கரடி மேகமாக உருவெடுத்தது! "அடுத்து என்ன செய்யலாம்' என யோசித்த அது வானிலிருந்து சூரியனைப் பார்த்தது. பளபளவென்று ஒளி வீசிக்கொண்டிருந்த அதையும் விழுங்கலாம் என்று வாயை "ஆ' வெனத் திறந்தபடி அதனை நெருங்கிவிட்டது! சூரியனை விழுங்கியே விட்டது! எங்கும் இருள் சூழ்ந்தது! 

இதை மரங்களின் கீழ் அமர்ந்தபடி பார்த்துக் கொண்டிருந்த காற்று, மேல் நோக்கிக் கிளம்பியது! மேகத்தை நெருங்கி அதைத் தாக்கத் தொடங்கியது! அதன் ஒவ்வொரு காலையும் பிய்த்துப் போட்டது! மேகம் வலி தாங்க முடியாமல் கண்ணீர் விட்டு அழ ஆரம்பித்தது. அழ, அழ அதன் பெரிய கரடி போன்ற உருவம் குறைந்துகொண்டே வந்தது. அதன் வயிற்றுக்குள் இருந்த சூரியன் வெளியே வந்துவிட்டது! 

மேகத்தின் கண்ணீர் மழையாகப் பெய்ததும், பூமியில் இருந்த செடி, கொடி, மரங்களெல்லாம் நனைந்து மகிழ்ச்சியில் ஆடின. அவை மேகத்தைப் பார்த்து, ""நன்றி!.... நன்றி!'' என்று தலையசைத்துக் கூறின. காட்டிலிருந்த வண்ணமயில் தன் தோகையை விரித்து அழகாக ஆடி நன்றி சொன்னது! ஜிலு... ஜிலுவென  அது தோகையை ஆட்டவும், மரம், செடி, கொடிகள் அசைவதையும் பார்த்தது. இப்போது மேகத்துக்கு மகிழ்ச்சியாகிவிட்டது! ஆனால் அது இப்போது ரொம்பக் குட்டியாகிவிட்டது! இருந்தாலும் குட்டிக் கரடி மேகத்துக்கு சிரிப்பு வந்துவிட்டது! 

அதன் சிரிப்பு வானில் ஏழு வண்ணங்களாக வளைந்து அழகாகக் காணப்பட்டது!

""அதோ! வானவில்!'' என்று அதைப் பார்த்து குழந்தைகள் மகிழ்ச்சியுடன் கூச்சலிட்டனர்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com