மரங்களின் வரங்கள்!: சண்டித்தனங்களைப் போக்கும்  - சண்டிக் கீரை மரம்

நான் தான் சண்டிக்கீரை மரம் பேசுகிறேன்.  எனது அறிவியல் பெயர் பிசானிய கிராண்டிஸ் என்பதாகும். நான் நிக்டாஜினேசி குடும்பத்தைச் சேர்ந்தவன்.
மரங்களின் வரங்கள்!: சண்டித்தனங்களைப் போக்கும்  - சண்டிக் கீரை மரம்
Published on
Updated on
2 min read

குழந்தைகளே நலமா?

நான் தான் சண்டிக்கீரை மரம் பேசுகிறேன்.  எனது அறிவியல் பெயர் பிசானிய கிராண்டிஸ் என்பதாகும். நான் நிக்டாஜினேசி குடும்பத்தைச் சேர்ந்தவன்.  நானும் ஒரு அரிய வகை மரமாவேன்.  நான் அந்தமான், நிக்கோபார் மற்றும் இலட்சத்தீவுக் கடற்கரையோரக் காடுகளில் அதிகமாகக் காணப்படுகிறேன். என்னை தமிழ்நாட்டில் இலச்சை கெட்ட, நச்சுக்கொட்டை கீரை மரம், லஜ்ஜை கெட்ட கீரை மரமுன்னு அழைக்கிறாங்க.   நான் அதிக உயரமாக வளர மாட்டேன். என் இலைகள் அகலமாக இருக்கும். என் மரத்தின் பட்டைகள் வெண்மை நிறத்தில் இருக்கும்.  உங்களுக்குத் தேவையான மருத்துவப் பலன்கள் அனைத்தையும் என் இலைகளே தருகின்றன.  

என் இலைகளில் நிறைய வைட்டமின் சத்துகளும், தையாமின், ரிபோபிளவின் போன்ற தாதுகளும் நிறைந்துள்ளன.  சில இடங்களில் சீறுநீர் கழிக்க சரியான வசதிகள் இருக்காது. எனக்குத் தெரியும் குழந்தைகளே,  புது இடங்களில், நண்பர்களின் வீடுகளில் கூச்சம் காரணமாகவும் நீங்கள் சொல்ல மாட்டீர்கள்.   அப்போது நீங்கள் சிரமப்படுவீர்கள்.  அதனால், சிறுநீரை அடக்கும் நிலை ஏற்படலாம். அவ்வாறு இருக்காதீர்கள். அவ்வாறு அடக்கும் சிறுநீர் அசுத்த நீராகி, உங்கள் உடம்பை வீங்கச் செய்யும். மேலும், இது உடலில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி, வேறுபல நோய்களுக்கு வழிவகுக்கும்.   சிலருக்கு கால்களில், முகத்தில் வீக்கம் ஏற்படும். ஏன், சிறுநீர்ப் பையில் கற்களும் உண்டாகும்.  இது தொடர்ந்தால் நீங்கள் விரைவில் பருமன் அடைவீர்கள், நடப்பதற்கும், அமரவும் சிரமம் ஏற்படும். பயப்படாதீங்க குழந்தைகளே!  இந்தப் பாதிப்புகளுக்கு எல்லாம் சர்வரோக நிவாரணியாக என் மர இலைகள் உங்களுக்கு உதவ காத்திட்டிருக்காங்க. 

சண்டிக் கீரை இலைகள் உங்கள் உடலில் தேங்கும் அசுத்த நீரை வெளியேற்றும் ஆற்றலைக் கொண்டிருக்கு. ரத்தத்தில் உள்ள உப்பின் அளவை சமன்படுத்தி, உடலை சீராக்கி, சிறுநீரகத்தை தூய்மை செய்து, வலுவாக்கும் திறன் என் இலைகளிடம் இருக்கு. என் மர இலைகளை நன்கு சுத்தம் செய்து, பாசிப் பருப்புடன் சேர்த்து  பொறியல் செய்து சாப்பிட்டால் அவ்வளவு சுவையாக இருக்கும்.  இந்தப் பொறியலை நீங்கள் காலை சிற்றுண்டியுடனும், மதியம் சாதத்துடன் கலந்து சாப்பிட்டு வந்தால்  உங்கள் உடலில் உள்ள கெட்ட நீர் சீக்கிரம் வெளியேறி, நீங்கள் பருமன் குறைந்ததை உணருவீர்கள். அது மட்டுமா, சிறுநீர் நன்கு பிரிவதுடன், உங்கள் உடம்பில் தோன்றிய வீக்கங்கள் எல்லாம் குறைந்து, உடலும் நலமாகி, முகமும் பொலிவுறும். என் இலைகளில் இரும்பு சத்தும் இருப்பதால் மூட்டுவலி உள்ளவர்களுக்கு இது அருமருந்தாகும். சுத்தமான நீரில் வெந்தயத் தூளுடன், என் இலைகளை நன்கு பொடியாக்கி கலந்து பின் வடிகட்டி பருகி வந்தால் உங்களுக்கு சிறுநீர் தொடர்பான பிரச்னையே இருக்காது. 

குழந்தைகளை, உங்களுக்கு  நுரையீரல் தொற்று, சளி பிரச்னை,  இருமல் இருக்கா, இப்பவே அதை மறந்துடுங்க.  என் இலைகள் மசியலை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் அவை விட்டால் போதும் என்று ஓடி விடும்.  என்னை நீங்கள் முருங்கை மரம் போன்று வீட்டில் வளர்ந்து வந்தால் உங்களுக்கு நான் பலன்கள் பல கொடுப்பேன். 

குழந்தைகளே உங்களுக்குத் தெரியுமல்லவா, பூமிக்கு மண்ணும், மண்ணுக்கு மரமும் மகிமையைத்  தரும் என்று. மண்ணும், மரமும் உங்களுக்கு முன் தோன்றியவை, மண் இல்லையேல் மரங்கள் இல்லை.  மரங்கள் இல்லையேல் மனிதனும் இல்லை என்பதை மறந்திடாதீங்க. நன்றி குழந்தைகளே, மீண்டும் சந்திப்போம்.

(வளருவேன்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com