கருவூலம்!: நாகாலாந்து மாநிலம் பற்றி அறிவோமா?

கருவூலம்!: நாகாலாந்து மாநிலம் பற்றி அறிவோமா?

இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஏழு சகோதரி மாநிலங்களில் நாகாலாந்தும் ஒன்று. அஸ்ஸாம், அருணாச்சலப் பிரதேசம், மணிப்பூர், மற்றும் அண்டை  நாடான மியான்மார் ஆகியவை நாகாலாந்து மாநிலத்தைச் சூழ்ந்துள்ளன. நாகாலாந்து டிசம்பர் 1, 1963 - இல் ஒரு  மாநிலமாக ஆக்கப்பட்டது. இதன் தலைநகரம் கோஹிமா ஆகும். 16, 579 ச.கி.மீ. பரப்பளவு கொண்ட நாகாலாந்து மாநிலம் சிறப்பான நிர்வாகத்திற்காக 12 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இங்கு கோஹிமா, திம்மாபூர், மோகோக்சுங் என்று மூன்று நகராட்சிகள்தான் உள்ளன. 

இம்மாநிலம் முழுவதும் ஒரே மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது. 

இம்மாநிலத்தில் பட்டியல் பழங்குடி மக்கள் பெரும்பான்மையினராக உள்ளனர். இதனால், "பெருமை மிக்க பூர்வகுடிகளின் மாநிலம் நாகாலாந்து' எனப் புகழப்படுகிறது. இம்மாநிலத்தின் ஆட்சி மொழி ஆங்கிலம் ஆகும். ஆங்கிலத்துடன் பழங்குடி இன மொழியான நாகா மொழியும் மற்றும் 89 வகையான வட்டார மொழிகளும் பேசப்படுகின்றன. 2012 - இல் நாகா இன மக்கள் பேசும் 17 நாகா இன மொழிகளுக்கு நாகாலாந்து அரசு அங்கீகாரம் அளித்துள்ளது. 

நாகா மக்கள் மொழிகளினால் பிரிந்தாலும், பண்பாடு மற்றும் நாகரிகத்தால் ஒன்றாக உள்ளனர். பெரும்பாலான நாகா மக்கள் உடை, உணவு, பழக்கவழக்கங்கள், மரபுவழிச் சட்டங்கள் முதலியவற்றில் ஒரே உணர்வுடன் உள்ளனர். நாகா மக்கள் போர்க்குணம் படைத்தவர்கள்.

இம்மாநிலத்தில் ரயில் போக்குவரத்து மிக மிகக் குறைவு. 12 . 34 கி.மீ. நீளத்திற்கே இருப்புப் பாதை உள்ளது. நாகாலாந்தில் உள்ள ஒரே ஒரு விமானநிலையமும், ஒரே ஒரு ரயில் நிலையமும் திமாபூரில் அமைந்துள்ளது. தேசிய மற்றும் மாநில சாலைகள் 15,000 கி.மீ. நீளத்திற்குத்தான் உள்ளன. போக்குவரத்து வசதி பெரிய அளவில் இல்லாததால் சுற்றுலாப் பயணிகள் வருகையும் குறைவாக உள்ளது.

நாகாலாந்து மாநில வரலாறு!

நாகாலாந்து மாநிலத்தின் பண்டைய வரலாறு தெளிவாக இல்லை. வெவ்வேறு காலகட்டங்களில் இந்நிலப்பகுதியில் குடியேறிய பழங்குடிகள் தங்களுடைய மலைநாடுகளையும், கிராமங்களையும் நிறுவியுள்ளனர். இப்பழங்குடி மக்கள் எங்கிருந்து இங்கு குடியேறினர் என்பதற்கான வரலாற்றுப் பிரிவுகள் எதுவும் இல்லை. 

நாகா மக்கள் எந்த மன்னராட்சிக்குக் கீழும் இல்லாமல் பல தலைமுறைகளாக பல தனித்தனிக் குழுக்களாக இருந்து வந்தனர். 

பிரிட்டிஷாரின் ஆட்சி!

1832 - இல் பிரிட்டிஷார் நாகாலாந்திற்குள் நுழைந்தபோது அவர்களை அனைத்து நாகா கிராமங்களும் எதிர்த்தன. பிரிட்டிஷாரால் அத்தனை எளிதாக நாகாலாந்தை தங்கள் ஆளுமையின் கீழ் கொண்டுவர இயலவில்லை. 

1879 - இல் நடந்த போரில் பிரிட்டிஷார் நாகா மக்களை முறியடித்தனர். பின்னர் 1880 - இல் அமைதிப் பேச்சுவார்த்தை மூலம் நாகாலாந்து பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் கொண்டுவரப்பட்டது. இதனால் தனித்தனி கிராமங்களாக இருந்த நாகா மக்களெல்லாம் நாகா என்ற ஒற்றை அடையாளத்திற்குள் கொண்டுவரப் பட்டனர். இது நாகா மக்களிடையே ஒற்றுமையை வலுப்படுத்தியது. 

1929 - ஆம் ஆண்டில் பிரிட்டிஷாரால் அமைக்கப்பட்ட "சைமன் குழு' விடம் "நாகா கிளப்' என்ற அமைப்பு நாகா மக்களின் கோரிக்கையை சமர்ப்பித்தது. அதில், பிரிட்டிஷ் இந்தியா தங்களுக்கு விடுதலை அளிக்க வேண்டும் என்று எண்ணினால், தயவு கூர்ந்து தங்களை யாரின் ஆட்சிக்குக் கீழும் விட்டுவிடாமல், நாகாலாந்து பழைய காலங்களில் எப்படி இருந்ததோ அப்படியே விட்டுவிடும்படி கேட்டுக்கொள்கிறோம் எனக் கோரினர். 

1946 - க்குப் பிறகு நாகர்கள் தங்களை தனித்தன்மை வாய்ந்த ஒரு தனி நாடாகவும், சுயாதீனமாக வாழ தங்களுக்குள்ள முழு உரிமைக்காகவும் வலியுறுத்தினர்.

1947 - ஆம் ஆண்டு இந்திய விடுதலைக்கு முன்னர் நாகா தேசிய அமைப்பின் பிரதிநிதிகள், தில்லியில் காந்தியைச் சந்தித்தனர். அவர்களுடன் நீண்ட கலந்துரையாடல் நடத்திய காந்தி, ""இந்தியாவுடன் இணைய விரும்பவில்லையென்றால் சுதந்திரமாக இருப்பதற்கு நாகாலாந்திற்கு அனைத்து உரிமையும் உண்டு'' என்று உறுதி அளித்தார்.

அதன்படி நாகாலாந்து 1947 - ஆண்டு ஆகஸ்டு 14 - இல் தன் சுதந்திரத்தை அறிவித்தது. இதை இந்திய அரசு எதிர்த்தது.  

1947-இல் இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு நாகாலாந்து அஸ்ஸாம் மாகாணத்தின் பகுதியாக ஆக்கப்பட்டிருந்தது. இதனை நாகர்களின் ஒரு பிரிவினர் எதிர்த்தனர். பல கட்டங்களாக வன்முறைகளும், போராட்டங்களும் நடந்தன. 

1960 - ஆம் ஆண்டில் நாகா தலைவர்களுக்கும், இந்திய அரசாங்கத்திற்கும் இடையில் ஒரு உடன்பாடு ஏற்பட்டது. அதன்படி நாகாலாந்தை இந்திய அரசுக்கு உட்பட்ட முழுமையான மாநிலமாக இந்திய அரசு அங்கீகரித்தது. அதன்பின் 1963 - ஆம் ஆண்டு நாகாலாந்து மாநிலமானது முறையாக உருவாக்கப்பட்டது.

சுற்றுலாத் தலங்கள்! 

இண்டாங்கி தேசியப் பூங்கா

இப்பூங்கா பெரன் மாவட்டத்தில் உள்ளது. சுமார் 20202 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட இக்காட்டுயிர் பூங்காவில் ஹீலக், கிப்பன், தங்க நிற மந்தி, இருவாய்ச்சி, புலி, வெண்கொண்டை மீன் கொத்தி, உடும்பு, தேன்கரடி உள்ளிட்ட அரியவகை உயிரினங்கள் வசிக்கின்றன.

கச்சாரி இடிபாடுகள்!

கச்சாரி இடிபாடுகள் திமாப்பூரில் உள்ளது. இவை 10 - ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கச்சாரி நாகரிகத்தின் போது தோன்றியது. இந்தக் குவி மாடத்தூண்களின் தொடர் இங்கு ஆட்சி செய்த கச்சாரி ராஜ்ஜியத்தால் உருவாக்கப்பட்டது. இவை எதற்காக அமைக்கப்பட்டது என்பது குறித்த தெளிவான காரணம் தெரியவில்லை. இப்பொழுது இங்குள்ள தூண்களில் சில முழுமையாக உள்ளன. பல தூண்கள் சிதிலமடைந்துள்ளன. இது ஒரு பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னமாகும்.

நாகாலாந்து அறிவியல் மையம் - திமாப்பூர்

ஒரு அற்புதமான இடம் இது. அறிவியல் சார்ந்த பல்வேறு உண்மைகளை சுவாரசியமாக மக்களுக்கு இது அறிமுகப் படுத்துகிறது. 

நாகாலாந்து விலங்கியல் பூங்கா!

திமாப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. 176 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்த இப்பூங்கா 2008 - ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இப்பூங்காவில் பல்வேறு தாவர வகைகளும், விலங்கினங்களும் உள்ளன. 

டிரிபிள் ஃபால்ஸ் - திமாப்பூர்

280 அடி உயரத்தில் இருந்து மூன்று அழகான மற்றும் பளபளப்பான அருவியாக கீழிறங்குகிறது. இந்த இடம் மலையேற்றத்திற்கும் ஏற்றது.

கோஹிமா போர்க் கல்லறை!

கோஹிமா நகரத்தின் மையத்தில் கேரிசன் மலைச்சரிவில் அமைந்துள்ளது. 1939 முதல் 1945 வரை நடந்த இரண்டாம் உலகப் போரின்போது கோஹிமாவிலும் போர் நடந்தது. 

ஜப்பானியத் ராணுவம் பர்மா மீதான தாக்குதலைத் தடுக்கும் நோக்கத்துடன் வடகிழக்கு இந்தியாவில் கோஹிமா மற்றும் இம்பாலில் நிறுத்தப்பட்டிருந்த பிரிட்டிஷ் துருப்புகளைத் தாக்கியது.  இந்தத் தாக்குதலின்போது உயிர்த்தியாகம் செய்த 10,000 நேச நாட்டு வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக இந்த போர்க் கல்லறை அமைக்கப்பட்டது. இந்த இடத்தை காமன்வெல்த் போர் கல்லறை ஆணையம் பராமரிக்கிறது. 

குளோரி சிகரம்!

இது பெக் மாவட்டத்தில் உள்ளது. நாகாலாந்தின் மிக உயர்ந்த மலைகளில் இதுவும் ஒன்றாகும். கடல் மட்டத்திலிருந்து சுமார் 2600 மீட்டர் உயரம் கொண்டது! இந்த சிகரத்தின் உச்சி ஒரு தட்டையான பீடபூமி போன்று இருக்கும். 

மரம், செடி, கொடிகளின் பசுமையால் மூடப்பட்டிருக்கும். இம்மலையிலிருந்து உலகின் மிக உயர்ந்த மலையான எவரெஸ்ட் சிகரத்தைப் பார்த்து ரசிக்கலாம். மேலும் இமயமலைத் தொடரினை சுற்றியுள்ள இரண்டு பள்ளத்தாக்குகளின் அருமையான காட்சியையும் கண்டு களிக்கலாம். அத்துடன் நாகாலாந்தின் மிக உயரமான சரமதி மலையையும் பார்க்கலாம். பார்ப்பவர்களை வியக்க வைக்கும் அழகிய இயற்கை எழில் நிறைந்த இடம் இது. 

இமசூக்கோ பள்ளத்தாக்கு!

நாகாலாந்து, மணிப்பூர் மாநிலங்களின் எல்லையில் உள்ளது. இந்தப் பள்ளத்தாக்கில் குறிப்பிட்ட காலங்களில் பூக்கும் அரிய வகைப் பூக்களைக் கொண்ட தாவரங்கள் உள்ளன. இந்தப் பள்ளத்தாக்கு அதன் இயற்கைச் சூழல், தாவர இனங்களுக்குப் புகழ் பெற்றது. 

டிஜாகோ பள்ளத்தாக்கு

நாகாலாந்து மற்றும் மணிப்பூர் மாநிலங்களுக்கு இடையே எல்லையில் அமைந்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 2452 மீட்டர் உயரத்தில் இருக்கிறது.  இங்கு பூக்கும் எண்ணற்ற மலர் வகைகள் புகழ் பெற்றவை. நதிகளும், அழகிய  இயற்கைச் சூழலும் நிறைந்த இடம் இது.

ஷில்லோய் ஏரி

நாகாலாந்தின் மிகப் பெரிய ஏரி இது. பெக் மாவட்டத்தில் உள்ளது. 30 கி.மீ. பரப்பளவு கொண்டது. மேலும் ஷில்லோய் ஏரி பைன் காடுகளுடன், வலசை வரும் பறவைகளும் நிறைந்த ஏரி. அமைதியான சூழலும், இயற்கை எழிலும் கொண்டது.

நாகா குன்றுகள்!

நாகா குன்றுகள் அரக்கான் மலைத்தொடரின் ஒரு பகுதியாகும். இவை நாகாலாந்து மற்றும் மியான்மர் நாட்டின் எல்லைப் பகுதியில் பரவியுள்ளது. நாகா குன்றுகளின் உயரமான சிகரம் 3826 மீட்டர் உயரம் கொண்ட சரமதி மலை ஆகும். தென்கிழக்கு ஆசியாவின் மிக உயர்ந்த மலைகளில் இதுவும் ஒன்று. இந்த சிகரம் குளிர்காலம் முழுவதும் பனி மூடியிருக்கும். மரம், செடி, கொடிகளால் சூழப்பட்ட இம்மலைப் பகுதி நாகாலாந்தின் அழகிய வனங்களில் ஒன்று. மேலும் மலையேற்றத்திற்கும் புகழ் பெற்றது. 

நாகா பஜார்!

இந்த பழமையான சந்தை கோஹிமா நகரில் உள்ளது. இச்சந்தை பல்வேறு வகையான கால்நடைகளை விற்பனை செய்வதில் பிரபலமானது. மேலும் கலைப்பொருள்களும் இங்கு விற்பனை செய்யப்படுகின்றன.

ஹார்ன்பில் திருவிழா!

நாகாலாந்தின் இத்திருவிழா புகழ் பெற்றது. பழங்குடி இனத்தவரின் ஒற்றுமையைப் பேணிக் காக்கவும், பண்பாட்டைப் போற்றவும் நாகாலாந்து அரசால் இத்திருவிழா டிசம்பர் முதல் வாரத்தில் நடத்தப்படுகின்றது. இத்திருவிழாவின்போது பாரம்பரிய நடனங்களும், விளையாட்டும், பாடல் நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com