கருவூலம்: அருணாச்சலப் பிரதேசம் !

அருணாச்சலப் பிரதேசம் 1987 - இல் மாநிலமாக அறிவிக்கப்பட்டது. அதற்கு முன்பு "வடகிழக்கு எல்லைப் புற முகமை' என்ற பெயரில் இயங்கியது. இந்தியா, சீனா ஆகிய இரு நாடுகளும் உரிமை கோரும் இரண்டு முக்கிய பிரதேசங்களில
கருவூலம்: அருணாச்சலப் பிரதேசம் !

அருணாச்சலப் பிரதேசம் 1987 - இல் மாநிலமாக அறிவிக்கப்பட்டது. அதற்கு முன்பு "வடகிழக்கு எல்லைப் புற முகமை' என்ற பெயரில் இயங்கியது. இந்தியா, சீனா ஆகிய இரு நாடுகளும் உரிமை கோரும் இரண்டு முக்கிய பிரதேசங்களில் அருணாச்சலப் பிரதேசமும் ஒன்று. (மற்றது அக்சாய் சின்) 83,743 ச.கி. மீ. பரப்பளவு கொண்ட இம்மாநிலத்தை தெற்கே அஸாம் மாநிலமும், மேற்கில் பூட்டான் நாடும், வடக்கு மற்றும் வடகிழக்கே சீனா மற்றும் கிழக்கே மியான்மர் நாடும் சூழ்ந்துள்ளன. அருணம் என்றால் சூரியன். அசலம் என்றால் மலை. மலைகளினூடே சூரியன் உதயமாவதால் இம்மாநிலம் அருணாச்சலம் எனப் பெயர் பெற்றது.

நிர்வாக வசதிக்காக இம்மாநிலம் 17 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. "இட்டா நகர்' இம்மாநிலத்தின் தலைநகரமாகும். இம்மாநிலம் இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் மலைப்பாங்கான இடத்தில் அமைந்துள்ளது. இதன் நிலப்பரப்பு ஆழமான பள்ளத்தாக்குகள், கிழக்கு இமய மலையின் உயரமான சிகரங்கள் என்று அமைந்துள்ளது. 12 நகரங்களையும், 3649 கிராமங்களையும் கொண்டது.

"சியாங்' என்று அருணாச்சலப் பிரதேசத்தில் அழைக்கப்படும் பிரம்மபுத்திரா ஆறும், அதன் கிளை நதிகளான டிராப், லோஹித், சுபன்சிசி, மற்றும் பரேலி நதிகளும் இம்மாநிலத்தின் முக்கிய ஆறுகளாகும். ஆண்டுக்கு 2000 மி.மீ. முதல் 4000 மி.மீ. மழைப் பொழிவு கொண்ட மாநிலம் இது.

வரலாறு:

அருணாச்சலப் பிரதேசத்தில் கிடைத்த புதிய கற்காலக் கருவிகளைக் கொண்டு பார்க்கும்போது, இப்பகுதியில் மக்கள் 11,000 ஆண்டுகளுக்கு முன்பே வாழ்ந்திருக்கின்றனர் என உறுதியாகத் தெரிய வருகிறது. புராணங்களிலும் இம்மாநிலம் பற்றிய தகவல்கள் உள்ளன. அஸாம் "அஹோம்' வம்ச மன்னர்களால் சில காலம் ஆட்சி செய்யப்பட்டது.

1826-ஆம் ஆண்டில் அஸாம் பிரிட்டிஷ் இந்தியாவின் ஒரு பகுதியாக மாறியது. பின்பு 1880-ஆம் ஆண்டுக்குப் பிறகு அருணாச்சலப் பிரதேசம் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் கொண்டு வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தியா சுதந்திரமடைந்த பிறகு 1987-இல் இந்தியாவின் ஒரு மாநிலமானது.

பொருளாதாரம்:

இம்மாநிலத்தின் முக்கிய தொழில் விவசாயம். நெல், கோதுமை, சோளம், கம்பு முதலான தானிய வகைகளும், பழவகைகளும், எண்ணை வித்துக்கள், காய்கறிகள் முதலானவையும் இங்கு சாகுபடி செய்யப்படுகின்றன. அருணாச்சலப் பிரதேசம் காடுகள் சூழ்ந்த பகுதியாதலால் வனப் பொருள்களும் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. கைத்தறி நெசவும் இங்கு முக்கிய தொழிலாகும். கனிம வளங்களும், வன வளங்களும், நீர் மின்சக்தியும் பெற்றுள்ள மாநிலம் இது.

இட்டா நகர்

அருணாச்சலப் பிரதேசத்தின் தலைநகரமான இட்டா நகர் இமயமலை அடிவாரத்தில் உள்ளது. நிஷி என அழைக்கப்படும் பழங்குடிகள் இங்கு பெரும்பான்மையாக வசிக்கின்றனர். இட்டாக் என அழைக்கப்படும் கோட்டையும், கங்கை ஏரியும், புனிதமான புத்தர் கோயிலும் இங்குள்ளது.

ஜவாஹர்லால் நேரு மியூசியம்!

1980 - ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த அருங்காட்சியகத்தில் பழங்குடி மக்களின் கைவினைப் பொருள்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. மற்றும் பாரம்பரியத் துணி வகைகள், ஆயுதங்கள், ஆபரணங்கள், இசைக்கருவிகள், வீட்டு உபயோகப் பொருள்கள் ஆகியவை பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

அரிய நூல்கள் அடங்கிய நூலகமும், கைவினை தயாரிப்புப் பயிற்சிப் பட்டறையும் இங்குள்ளன.

இட்டா கோட்டை!

நகரின் மையப் பகுதியில் காணப்படும் இக்கோட்டை 14-15ஆம் நூற்றாண்டில் மாயப்பூரை ஆண்ட ஜிதாரி வம்சத்தைச் சேர்ந்த ராமச்சந்திரா என்ற மன்னரின் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டதாகக் கருதப்படுகிறது. 80 லட்சத்திற்கும் அதிகமான செங்கற்களால் இக்கோட்டை கட்டப்பட்டுள்ளது. இட்டா என்றால் "செங்கல்' எனப் பொருள். இன்றும் கம்பீரமாக இக்கோட்டை உள்ளது.

கங்கா ஏரி! - இட்டா நகர்:

பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலம் இது. இட்டா நகரிலிருந்து 6 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. பசுமையான வனப்பகுதியுடன் காணப்படுகிறது.

வனவிலங்கு சரணாலயம் - இட்டா நகர்:

இச்சரணாலயம் 140 ச.கி.மீ. பரப்பளவு கொண்டது. இங்கு ஏராளமான தாவர வகைகளும், பறவையினங்களும், விலங்கினங்களும் உள்ளன. அழகிய ஆர்க்கிட் மலர்களும், மூங்கில் வனங்களும் நிறைந்த பகுதி இது. மேலும் இட்டா நகரில் இந்திரா காந்தி பூங்கா, போலோ பூங்கா முதலான பூங்காக்களும் உள்ளன.

போம்டிலா மடாலயம்:

இம்மடாலயம் மேற்கு காமெங்மாவட்டத்தில் அமைந்துள்ளது. புத்த பிக்குகளும், லாமாக்களும் தங்கும் இடம் இது. மிக அழகிய மடம். 1965-ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது. ஒரு பிரார்த்தனை மண்டபமும், புத்தர் கோயில் ஒன்றும் இம்மடத்தில் உள்ளன. அப்பர் கோம்பா, மிடில் கோம்பா மற்றும் லோயர் கோம்பா என மூன்று பகுதிகள் இங்குள்ளன.

போம்டிலா காட்சி முனை:

இக்காட்சி முனையிலிருந்து தரையைத் தொடும் மேகங்கள், இமயமலைகள், கெமேங் பள்ளத்தாக்கு ஆகிய அற்புதக் காட்சிகளைக் கண்டு ரசிக்கலாம்.

கழுகு வனவிலங்கு சரணாலயம்:

இந்த இடம் செஸ்மா ஆர்க்கிட் மலர்கள் நிறைந்த பகுதிக்கு அருகே உள்ளது. ஏராளமான பறவையினங்களை ரசித்துப் பார்ப்பதற்கு இது ஒரு சிறந்த இடம். காடைகள், புறாக்கள், கிளிகள், குருவியினங்கள், மரங்கொத்திகள், பருந்துகள், கழுகுகள், முதலிய 450-க்கும் மேற்பட்ட பறவையினங்களை இங்கு காணலாம். மேலும் 150-க்கும் மேற்பட்ட வண்ணத்துப் பூச்சி இனங்களும் காணப்படுகின்றன. யானைகள், சிவப்பு ஃபாண்டா, ஆசிய கருப்புக் கரடி உள்ளிட்ட விலங்குகளும், ஊர்வனவும் இச்சரணாலயத்தில் உள்ளன.

டிப்பி ஆர்க்கிட் ரிசர்வ் - போம்டிலா:

ஆர்க்கிட் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் என்றும் இப்பகுதி அழைக்கப்படுகிறது. பல்வேறு வகையான மல்லிகை மலர்கள் இங்கு காணக்கிடைக்கின்றன. இங்கு ஆர்க்கிட் கிளாஸ் ஹவுஸ் என்னும் இடம் உள்ளது. சுற்றுலாப் பயணிகளை மிகவும் கவரும் இடம் இது. மற்றொரு ஆர்க்கிடோரியமும் அருகில் உள்ளது. இங்கு 50,000-க்கும் மேற்பட்ட பூவகைகள் உள்ளன.

அப்பர் கோம்பா:

இது செங்குத்தான மலையின் மேல் அமைந்துள்ளது. இந்த வளாகத்தில் துறவிகளுக்கான பள்ளி, பிரார்த்தனை மண்டபம் ஆகியவை உள்ளன.

நம்தாபா தேசியப் பூங்கா:

சங்லங் மாவட்டத்தில் இந்த தேசியப் பூங்கா அமைந்துள்ளது. 200 மீ. உயரத்திலிருந்து 4500 மீ. உயரம் வரை மலைச்சரிவுகளில் பரவியுள்ளது. அரிய வனவிலங்குகள், பறவையினங்கள் தாவர வகைகள், அடர்ந்த மரங்களை உள்ளடக்கியது. பூங்காவைப் பார்வையிட யானைச் சவாரி வசதியும் உள்ளது. இத்தேசியப் பூங்காவில் அருங்காட்சியகம் ஒன்றும் உள்ளது.

தவாங் மலை வாசஸ்தலம்:

தூய இயற்கைச் சூழலும், பிரமிப்பூட்டும் மலை எழிற்காட்சிகளும், நிறைந்த சொர்க்க பூமி போன்றே இந்தத் தவாங் நகரம் காட்சியளிக்கிறது. சூரிய உதயத்தின் கதிர்கள் இப்பகுதிகளில் உள்ள சிகரங்களில் பட்டுத் தெறிக்கின்றன. சூரிய அஸ்தமனத்தின் வெளிச்சம் தொடுவானம் எங்கும் சூழ்ந்திருப்பது வேறெங்கும் காணக்கிடைக்காத காட்சிகளாகும்.

இம்மலை நகரத்தில் உள்ள மடாலயங்கள், சிகரங்கள், அருவிகள், ஏரிகள், எழில் மிகு வனப்பகுதிகள் ஆகியவை சுற்றுலாப் பயணிகளை மிகவும் கவரும். மார்ச், அக்டோபர் மாதங்களுக்கு இடைப்பட்ட காலம் சுற்றுலாவுக்கு ஏற்ற இனிமையான சூழல் கொண்டதாக இருக்கும்.

தொடரும்...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com