செய்திச் சிட்டு! ஆத்ம திருப்திக்கு அன்புடன் உணவு

'ஃபிர்ர்'ரென்று சிறகடித்தவாறு வந்து கிளையில் அமர்ந்தது சிட்டு. பிள்ளைகளின் பலத்த கை தட்டல்! அமர்ந்த சிட்டுக்குக் கிண்ணத்தில்
செய்திச் சிட்டு! ஆத்ம திருப்திக்கு அன்புடன் உணவு

'ஃபிர்ர்'ரென்று சிறகடித்தவாறு வந்து கிளையில் அமர்ந்தது சிட்டு. பிள்ளைகளின் பலத்த கை தட்டல்! அமர்ந்த சிட்டுக்குக் கிண்ணத்தில் தண்ணீர் தந்தாள் மாலா. குட்டி அலகால் உறிஞ்சிக் குடித்துவிட்டு தொண்டையை செறுமிக்கொண்டது சிட்டு.

"2015-ஆம் ஆண்டு இத்தாலியில் உலகளாவிய ஒரு கண்காட்சி நடந்தது. அதில் முக்கிய விருந்தினருக்குச் சமைப்பதற்காக 'மஸ்ஸிமோ பொட்டுரா' என்ற சமையற்கலை நிபுணர் வந்திருந்தார். இவர் உலகின் மிகச் சிறந்த சமையற் கலைஞருக்கான விருதை இருமுறை பெற்றவர்! கண்காட்சி விழாவிற்குப் போப் ஃபிரான்ஸிஸும் வந்திருந்தார். 

மஸ்ஸிமோ பொட்டுரா,  போப்பிடம், "இங்கே பாருங்க, இங்கே வர்றவங்க எல்லாம் பணக்காரர்கள். எப்போதும் வயிறு நிரம்பியே இருப்பாங்க. பசியில்லாதவங்க, சாப்பாடு நிறைய வீண் ஆகும். ஆனா பசியாலே வாடறவங்க உலகத்திலே ஏராளமா இருக்காங்க. அவங்களுக்கு இந்தத் தரத்தில் உணவை அளிக்க ஏதாவது ஏற்பாடு செய்தா நன்றாக இருக்கும்'' என்றார்.

போப் நெகிழ்ந்துபோய், "உங்களுக்குத் தேவையான உதவியாளர்களை வெச்சுக்கோங்க. நீங்க நினைத்ததை செயல்படுத்துங்க. என்னால் முடித்த உதவிகளைச் செய்யறேன்... மேலும், இதை எப்போதும் நிரந்தரமாகச் செய்ய ஏதாவது வழியிருக்கான்னு  பாருங்க...'' என்றார்.

பொட்டுராவின் (இனிமே இப்படியே அழைப்போம்) மனம்  இதைச் செயல்படுத்த வழியைத் தேடிக்கொண்டிருந்தது. இத்தாலியில் "மிலன்' நகரில் ஒரு பழைய தியேட்டர் இருந்தது. அதன் உரிமையாளர் அந்தத் தியேட்டரை இந்த நற்செயலுக்கு உதவ அளித்துவிட்டார். தியேட்டர் புதுப் பொலிவு பெற்றது. மிக அழகாக வடிவமைக்கப்பட்ட உணவு விடுதியாக ஆயிற்று. அது ஒரு சமூக உணவு விடுதி! அகதிகள், வீடற்றோர், ஆதரவற்றோர், பசியில் வாடுவோர் ஆகியோர் இந்த உணவு விடுதிக்கு வந்து வயிறார சாப்பிடலாம், இலவசமாக! 

"அப்படியா?'' என்றான் பாலா.

"ஆமாம்! இந்த உணவு விடுதி ஆரம்பித்து மூன்று ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி சிறப்பாகக்  கொண்டாடினாங்க... "இது அழகான இடம்,. உங்களுக்கான இடம், உங்கள் வரவு நல்வரவாகுக' என்று அன்புடன் வரவேற்று உபசரிக்கின்றனர். ஆதரவற்றோருக்கு இந்த வார்த்தைகளே நிம்மதியை அளிக்கும் இல்லையா? இலவசம் மட்டுமில்லே, உணவை அழகாகப் பரிமாறுவதற்கு சர்வர்கள் உள்ளனர். அனைத்து வேலைகளும் தன்னார்வலர்களால் செய்யப்படுகின்றன. சமையற்கலை நிபுணர்கள்கூட தன்னார்வளர்களே!''

"பலே பலே!'' என்றான் ராமு.

"பொட்டுராவிடம் சிலர் இது பற்றிக் கேட்டபோது  அவர், "உலகின் மக்கள்தொகை சுமார் 800 கோடி! ஒவ்வொரு நாளும் நாம் 1200 கோடி பேருக்குச் சமைக்கிறோம். சுமார் 130 கோடி டன் உணவுப் பொருள்கள் குப்பையில் கொட்டப்படுகின்றன. ஆனால், ஒவ்வொரு நாளும் 10 லட்சத்துக்கும் மேலானோர் உணவு இன்றித் தவிக்கின்றனர்! இது எவ்வளவு அநியாயம்!  மேலும் விற்காத உணவுப் பொருள்கள், கெட்டுப் போகும் பால் பொருள்கள் ஆகியவையும் தினமும் வீணாகின்றன. உணவு தயாரிக்கும் மளிகைப் பொருள்கள், காய்கறிகள் ஆகிய எல்லாவற்றையும் முழுதாக நாம் உபயோகப்படுத்துவதில்லை. அவற்றை எப்படி முழுமையாக வீணாகாமல் பயன்படுத்துவது பற்றி செயல் முறை  விளக்கங்கள் அளித்துள்ளேன்' என்று கூறுகிறார். தினமும் இவ்வளவு உணவுப் பொருள்கள் வீணாகும் தகவல் கேட்ட எனக்கே அதிர்ச்சியாகிவிட்டது...'' என்றது சிட்டு.

"இனிமே சாப்பாட்டை நாங்க நிச்சயமா வீணாக்க மாட்டோம்...'' என்று ஒருமித்த குரலுடன் பிள்ளைகள் கூறினர்.

"சந்தோஷம்! அளவுக்கு அதிகமாகப் போட்டுக்கொண்டு, சாப்பிட முடியாமல் திணறி, பிறகு கொட்டுவது,  தேவைக்கு அதிகமாக உணவுப் பொருள்களை வாங்குவது,  கெட்டுப் போகும் வரை அதை உபயோகப்படுத்தாமல் இருப்பது ஆகிய எல்லாமே சரியில்லைதான். உலகின் நல்லெண்ணத் தூதுவராக ஐ.நா. சபையால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் பொட்டுரோ. மேலும், 27 புத்தகங்கள் வெவ்வேறு தலைப்பில் எழுதியுள்ளார் இவர்! இது ஒரு முக்கிய விழிப்புணர்வுச் செய்தி'' என்று கூறிவிட்டுப் பறந்து சென்றது சிட்டு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com