நினைவுச் சுடர் ! அறிபுனை எழுத்தின் முன்னோடி!

மாபெரும் மேதையான அறிவியலைப் பற்றி ஆங்கிலத்தில் ஐநூறுக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதிய ஐசக் அசிமோவ் தன் வாழ்நாள்
நினைவுச் சுடர் ! அறிபுனை எழுத்தின் முன்னோடி!

''மாபெரும் மேதையான அறிவியலைப் பற்றி ஆங்கிலத்தில் ஐநூறுக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதிய ஐசக் அசிமோவ் தன் வாழ்நாள் முழுவதும் எழுதிக்கொண்டே இருந்தார். அவற்றை வாசித்தால் உங்களுக்கு 'அறிவியல் இவ்வளவு எளிமையானதா' என்று புரிந்து கொள்வீர்கள். ஐசக் அசிமோவ் எண்களைப் பற்றி எழுதியிருக்கிறார். அதை வாசித்தால் 'கணிதம் மிக இனிமையானது' என்பதைத் தெரிந்து கொள்ளலாம்''- இப்படி ஒரு நூலின் அணிந்துரையில் எழுதியுள்ளார் வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ். 

சரி... ஐசக் அசிமோவ் அப்படி என்னதான் செய்திருக்கிறார்?  அமெரிக்க எழுத்தாளரும், பேராசிரியருமான ஐசக் அசிமோவ் நினைவு நாளை (ஏப்ரல்-6) போற்றும் வகையில் அவரைப் பற்றி சில செய்திகளை அறிந்து கொள்ளலாம் வாருங்கள்...

இன்றைக்கு ரோபோக்களை வைத்தும், கால இயந்திரத்தை வைத்தும் (டைம் டிராவல்) தமிழ்த் திரைப்படங்கள் வெளியானால் எல்லோரும் அதை வியப்பாகப் பார்க்கிறோம். இப்படி இவர்கள் திரைப்படங்கள் எடுப்பதற்கு முன்னோடியாக இருந்தவர் ஐசக் அசிமோவ். ஆம், இவர்  ரோபோக்களை வைத்து எழுதிய அறிவியல் புனைக் கதைகளையும், நாவல்களையும் வைத்துதான்  தற்போதைய (ஆங்கில, தமிழ்) திரைப்படங்கள் எடுக்கப்படுகின்றன. அதாவது,  'தி மாஸ்டர் ஆஃப் சைன்ஸ் பிக்ஷன்' என்று போற்றப்பட்டவர் இவர்.

அசிமோவ்,  அறிபுனை (அறிவியல் புனை கதைகள்) எழுத்தின் முன்னோடிகளில் ஒருவராகவும்,  ராபட் ஏ.ஹெய்ன்லைன், ஆர்தர் சி.கிளார்க் ஆகியோருடன் சேர்த்து  'பிக் த்ரீ' எழுத்தாளர்களுள் ஒருவராகவும் கருதப்பட்டவர்.  அறிவியலில் பல அற்புதங்களைச் செய்தவர். இவருடைய அறிவியல் ஃபிக்ஷன் கதைகளும், நாவல்களும் தொலைக்காட்சித் தொடராகவும், திரைப்படங்களாகவும் வெளிவந்துள்ளன. 

பிஎச்.டி. படித்த இவர் ஓர் எழுத்தாளர். பாஸ்டன் பல்கலைக்கழகத்தின் உயிர் வேதியியல் (பையோ கெமிஸ்ட்ரி) பேராசிரியர். இவர் எழுதிய 'மேலும்' (மோர்) என்கிற நாவல் சிறந்த நாவலுக்கான 'ஹ்யூகோ விருது' பெற்றிருக்கிறது. இவரது குறிப்பிடத்தக்க படைப்புகள் என்று சொன்னால்... ஃபவுண்டேஷன் வரிசை, ரோபோ வரிசை, தி பைசென்டின்னல் மேன்,  ஐ, ரோபோ போன்றவை.  
புதினங்கள் தவிர குறுநாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள் போன்ற வடிவங்களிலும்  அறிபுனை நூல்களைத் தவிர வெகுஜன அறிவியல் நூல்களையும் எழுதியுள்ளார்.

இவர் எழுதிய ஃபவுண்டேஷன் வரிசை (பவுண்டேஷன் சீரிஸ்) புதினங்களும், ரோபோ வரிசை  (ரோபோ சீரிஸ்) வரிசைப் புதினங்களும் அறிபுனை இலக்கியத்தின் அற்புத, செம்மையான படைப்புகளாகும். தன் வாழ்நாளில் 500-க்கும் மேற்பட்ட நூல்களையும், 90,000 கடிதங்களையும் எழுதிய அசிமோவ், (தூவி, தசம முறையிலுள்ள) நூலகப் பகுப்பு முறை - பத்து துறை பகுப்புகளில் ஒன்பது துறைகளில் நூல்களையும் எழுதியுள்ளார். அவர் எழுதாத துறை... மெய்யியல், உளவியல் துறைகள்தாம். 

வாழ்க்கை வரலாறு:

தற்போதைய பெலாரஸின் எல்லையிலுள்ள சோவியத் ரஷிய ஃபெடரேட்டிவ் சோஷலிஸ குடியரசில் அன்னா ராசேல் (பெர்மன்) அசிமோவுக்கும், ஜுடாஹ் அசிமோவுக்கும் பிறந்தவர் ஐசக் அசிமோவ். 

அசிமோவின் உண்மையான பிறந்த நாள் தெரியவில்லையாதலால்,  அசிமோவே தன் பிறந்த நாளை ஜனவரி 2-ஆம் தேதி கொண்டாடியதால்,  அந்த நாளையே பலரும் அவர் பிறந்த நாளாகக் கொண்டாடத் தொடங்கினர். அசிமோவுடன் பிறந்தவர்கள் மார்ஷியா என்ற சகோதரியும்,  ஸ்டான்லி என்ற 
சகோதரனும்.    

ஸ்டான்லி 'நியூயார்க் நியூஸ் டே' எனும் நாளிதழின் துணை அதிபராகவும் அசிமோவ் இருந்தார். இவருக்கு மூன்று வயதாக இருந்தபோது இவர்கள் குடும்பம் அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்தது. இவருடைய பெற்றோர் மிட்டாய் கடை ஒன்றை நடத்தி வந்தனர். அதில் குடும்ப உறுப்பினர்களே வேலை செய்தனர். 1928-இல் அசிமோவ் (எட்டு வயதில்) அமெரிக்கக் குடிமகன் தகுதியைப் பெற்றார்.


கல்வியும், பணியும்

அசிமோவ் நியுயார்க் சிட்டி பப்ளிக் பள்ளியிலும், ப்ரூக்ளின் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் படித்தார். சிறு வயதிலேயே அறிவியல் புனை கதைகளைப் படிக்கத் தொடங்கினார். ஆனால், அவருடைய தந்தையோ அவற்றைப் படிப்பது வீண் வேலை என்று கூறினார். அதற்கு அசிமோவ், 'அது அறிவியல் எனும் தலைப்பைக் கொண்டுள்ளது. எனவே அது கல்வி சார்ந்தது' எனக் கூறியிருக்கிறார். 

அசிமோவ், 11 வயதிலேயே கதை எழுதத் தொடங்கிவிட்டார். 19 வயதில் அவருடைய அறிவியல் புனைகதைகள் பல நாளிதழ்களில் வெளியாகி, அவருக்குப் பல ரசிகர்களையும் உருவாக்கித் தந்தது. 15 வயதில் 'சேத் லோ ஜூனியர் கல்லூரி'யில் விலங்கியல் படிப்பில் சேர்ந்தார். அங்கு,  சோதனைக்காக பூனைகளை வெட்டுவதை ஏற்றுகொள்ள முடியாமல், இரண்டாம் பருவத்தின்போது (செகண்ட் செமஸ்டர்) வேதியலில் சேர்ந்துவிட்டார்.

1938-இல் சேத் லோ ஜூனியர் கல்லூரி மூடப்பட்டது. அதன் பின்பு கொலம்பியா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து 1939-இல் வேதியலில் இளநிலை பட்டமும், அதே பல்கலைக்கழகத்தில் 1938-இல் வேதியலில் முதுநிலைப் பட்டமும் பெற்று, 1948-இல் உயிர் வேதியலில் டாக்டர் பட்டத்தையும் பெற்றார். இடையில் மூன்று ஆண்டுகள் 'பிலடெல்பியா கடற்படை விமான நிலைய'த்தில் பணியாற்றினார். 

டாக்டர் பட்டம் பெற்ற பின் 'பாஸ்டன் மருத்துவவியல் பல்கலைக்கழகத்தில்' பேராசிரியரானார். 1958-இல் இருந்து முழு நேர எழுத்தாளராகிவிட்டார். பின்னர் 1979-இல் பாஸ்டன் பல்கலைக்கழகம் அவர் எழுத்தை கெளரவப்படுத்தும் விதமாக உயிர் வேதியலில் அவரைப் பேராசிரியராகப் பணியமர்த்தி அவரைப் பெருமைப்படுத்தியது.

அசிமோவ் சிறந்த பேச்சாளரும்கூட. அறிவியல் புனைகதை மாநாட்டின் முக்கிய அங்கமாகவே இவர் கருதப்பட்டார். ரசிகர்களின் ஆயிரக்கணக்கான கடிதங்களுக்குப் பொறுமையாக பதில் எழுதி அனுப்புவார். இதைக் கண்டு ரசிகர்கள் வியப்படைந்தார்கள். இப்படி தன் ரசிகர்களுக்கு 90,000 கடிதங்களை இவர் எழுதியிருக்கிறார் என்றார் பார்த்துக் கொள்ளுங்கள்! 

விருதுகள்

1984-இல் அமெரிக்க மனிதநேய சங்கம் இவரை அந்த ஆண்டின் 'மனித நேயமிக்க மனிதராக' தேர்வு செய்து கெளரவித்தது. 1985-இல் இருந்து 1992 வரை அமெரிக்க மனிதநேய சங்கத்தின் கெளரவ முதல்வராகப் பதவி வகித்தார்.

ஐசக் அசிமோவ் 'கமிட்டி ஃபார் தி சயின்டிஃபிக் இன்வெஸ்டிகேஷன் ஆஃப் க்ளெயிம்ஸ் ஆஃப் தி பாராநார்மல்' -அதாவது  இப்போது, 'கமிட்டி ஃபார் ஸ்கெப்டிகல் என்கொயரி' என அழைக்கப்படும் குழுவை ஆரம்பித்தவர்களுள் இவரும் ஒருவர். 

அசிமோவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு,  மூன்று மாற்று வழி இணைப்பு அறுவை (பை பாஸ் சர்ஜரி) செய்யப்பட்டது. ஏப்ரல் 6, 1992-இல் அசிமோவ் 72 வயதில் இவ்வுலக வாழ்வை நீத்து, அறிவியலுக்கு அப்பால் சென்றுவிட்டார்.

ரோபோக்களையும், ரோபோ தொடர்பான திரைப்படங்களையும், அறிவியல், அறிவியல் புனைகதைகள் மற்றும் அறிவியல் நாவல்களையும் நேசிப்பவர்கள் ஐசக் அசிமோவை நினைக்காமலும், போற்றாமலும் இருக்க மாட்டார்கள். 

(பிறப்பு: 02.01.1920 - மறைவு:  6.4.1992).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com