செய்திச் சிட்டு!: சகாரிகா ஸ்ரீராம்

ஜம்மென்று வந்து அமர்ந்தது சிட்டு! பிள்ளைகளின் கரகோஷம்! 
செய்திச் சிட்டு!: சகாரிகா ஸ்ரீராம்


ஜம்மென்று வந்து அமர்ந்தது சிட்டு! பிள்ளைகளின் கரகோஷம்! 

""2016 - ஆண்டு. துபாய் கடற்கரையில் ஒரு நாள் சகாரிகா ஸ்ரீராம் என்ற சின்னப் பெண் நடந்து போகும்போது இறந்து போன ஒரு திமிங்கிலத்தைப் பார்த்தாள். விசாரித்ததில் அது கடலில் ஏற்பட்ட எண்ணெய்க் கசிவினால் ஏற்பட்ட விபத்து என்பதை அறிந்தாள். மற்றொரு நாள்  இறந்த கடல் ஆமையைப் பார்த்தாள். அதன் வயிற்றில் பிளாஸ்டிக் பைகள் இருந்ததுதான் காரணம் என்பதை அறிந்த அந்தப் பெண் அதிர்ந்து போனாள். இதற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் அந்தப் பத்து வயதுச் சிறுமிக்குத் தோன்றியது.''என்றது சிட்டு.

""சின்னப் பொண்ணு.... பாவம் அதாலே என்ன செய்ய முடியும்?'' என்றாள் மாலா.
""சில நாள்கள், அரேபிய பாலைவனங்களிலும், கடற்கரைகளிலும் கிடக்கும் பிளாஸ்டிக் குப்பைகளைப் பொறுக்கி மறு சுழற்சி செய்ய ஏற்பாடுகள் செய்தாள். அவளோடு சில நண்பர்களும் சேர்ந்தனர். சகாரிகா சாதாரணமாகவே தலைமைப் பண்பு இருக்கிற பொண்ணு! 7 - ஆவது, மற்றும் 9-ஆவது வயசிலேயே பள்ளியில் "ஹெட் ஆஃப்  தி இயர்' விருதை இருமுறை வாங்கியிருக்கிறாள். சுற்றுச்சூழல் பற்றிய அக்கறை தீவிரமாகவே அவள் ஒரு திட்டம் வகுத்தாள். "கிட்ஸ் ஃபார் பெட்டர் வேர்ல்டு' என்று ஒரு இணைய தளத்தை ஆரம்பித்தாள்....''

""அதனாலே ஏதாவது  பலன் கிடைச்சுதா?....'' என்று கேட்டான் பாலா.

""கிடைச்சுது! இணைய தளம் ஆரம்பிச்ச சில நாள்களிலேயே 10,000-த்திற்கும் மேலான சிறுவர் சிறுமியர் அதில் பங்கேத்துக்கிட்டாங்க... காரணம், சுற்றுச் சூழல் ஆர்வலர்களிடம் பல யோசனைகளைக் கேட்டு குப்பைகளைச் சேகரித்து எப்படியெல்லாம் மறு சுழற்சி செய்வது... போன்ற பயிற்சிகளும், மரங்கள், காய்கறிச் செடிகளை வளர்க்கும் முறைகள், வீணாகும் பொருள்களிலிருந்து உரம் தயாரித்தல், போன்ற பயிற்சிகளையும் இந்த இணைய தளத்தில் காணலாம். இதைத் தவிர செய்முறைப் பயிற்சிகளையும் நேரடியாகத் தருகிறாள் சகாரிகா ஸ்ரீராம். வாரத்திற்கு 1000 கிலோ பிளாஸ்டிக்குகளை சேகரிக்க உறுதியேற்று அதை நடைமுறைப்படுத்தியும் இருக்கிறாள்! தெருக்களிலும், வீடுவீடாகவும், 

மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும்  குப்பைகளைச் சேகரிக்கிறது சகாரிகாவின் குழு! ''

""சபாஷ்.... சூப்பர்!'' என்றாள் லீலா.

""காய்கறிச் செடிகள், மரங்கள் ஆகியவற்றையும் சகாரிகாவின் நண்பர்கள் குழு நட்டு வளர்க்கிறார்கள். அரபு நாட்டின் பிரபலமான "அஸார்க் கடல் பாதுகாப்பு' என்னும் தொண்டு நிறுவனம் சகாரிகாவை தங்களுடன் இணைத்துக் கொண்டது!.  "பெரியவர்கள் எங்களது குரலுக்கு செவி சாய்க்க வேண்டும்.... ஒத்துழைக்க வேண்டும்... பிறகென்ன இந்த உலகம் தென்றல் வீசும் பூங்காவாகிவிடும்! 

என்கிறார் சகாரிகா. தற்போது சகாரிகாவுக்கு 16 வயதாகிறது.'' என்று கூறிவிட்டுப் பறந்தது சிட்டு.

பிள்ளைகள் சகாரிகாவின் இந்த சாதனையைப் பற்றிப் பேசிக்கொண்டே பூங்காவில் நடந்து சென்றனர். அப்போது உருளைக்கிழங்கு வறுவலைத் தின்று தீர்த்து விட்டு காலியான பையை ஒரு சிறுவன் புல்தரையில் வீசினான். பொறுப்புடன் அதை எடுத்து குப்பைத் தொட்டியில் போட்டான் பாலா.

""சிட்டு டீச்சர் சொல்லித் தந்த பாடமா?'' என்று கேட்டான் ராமு.

""அதிலென்ன சந்தேகம்?'' என்று கோரஸாகக் குரல் கொடுத்தனர் சிறுவர்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com