செய்திச் சிட்டு! செயின்ட் பாட்ரிக்ஸ் தினம்!

பறந்து வந்த சிட்டின் அலகில் கொத்தாய் சில இலைகள் இருந்தன. சில மூன்று இதழ்களுடனும், சில நான்கு இதழ்களுடனும் இருந்தன! 
செய்திச் சிட்டு! செயின்ட் பாட்ரிக்ஸ் தினம்!

பறந்து வந்த சிட்டின் அலகில் கொத்தாய் சில இலைகள் இருந்தன. சில மூன்று இதழ்களுடனும், சில நான்கு இதழ்களுடனும் இருந்தன! 

"பழம், விதைகள் சாப்பிடறதோட இப்போ இலைகளையும் சாப்பிட ஆரம்பிச்சுட்டியா? அதென்ன மூலிகை இலையா? ஏதாவது உடம்பு சரியில்லையா? அப்படித் தெரியலையே... முகமெல்லாம் சந்தோஷமாகத்தானே இருக்கு'' என்றான் பாலா. 

"கொஞ்சம் சிட்டக்காவைப் பேசவிடு'' என்று அதட்டினாள் லீலா.

"அலகிலிருந்த இலைகளை பிள்ளைகளின் கைகளில் ஆசையாய் வழங்கிய சிட்டு, "போன மாசம் 'செயின்ட் பாட்ரிக்ஸ் டே'  கொண்டாட்டத்திற்குப் போயிருந்தேன். உலகமே அதை ரொம்ப அழகா கொண்டாடியது.''  என்றது.

"அதென்ன செயின்ட் பாட்ரிக் தினம்? விவரமாத்தான் சொல்லேன்'' என்றான் பாலா.

"இங்கிலாந்தில், கி.பி. 387-ஆம் ஆண்டு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. 'மாவின் சக்காட்' என்று அதற்குப் பெயர் வைத்தனர். பதினாறு வயதானபோது அவனை  சிலர் கடத்திச் சென்று, ஆடுகள் மேய்க்கும் வேலையைக் கொடுத்தனர். அவன் சில ஆண்டுகளுக்குப் பிறகு அங்கிருந்து அயர்லாந்துக்குத் தப்பித்துப் போனான்.

பிறகு அயர்லாந்தில் ஒரு மடாலயத்தில் சேர்ந்து, அங்கு மதம் சார்ந்த படிப்பைக் கற்றுத் தேர்ந்தார். பிறகு அயர்லாந்தின் பிஷப் ஆக ஆனார் (இனி மரியாதையாகவே அழைப்போம்). அங்குதான் அவருக்கு 'செயின்ட் பாட்ரிக்ஸ்' என்று பெயர் வைத்தனர். 'பாட்ரிக்ஸ்' என்ற வார்த்தைக்குக் "குடிமக்களின் தந்தை' என்று பொருள். அயர்லாந்தில் உள்ள மக்களைக் கவர்ந்தார். அங்குள்ள ஏராளமானோருக்கு கிறித்தவ மத நம்பிக்கையை ஊட்டினார். 

அயர்லாந்து பசுமை நிறைந்த பகுதி. அங்குள்ள 'ஷாம்ராக்ஸ்'  என்ற வகை இலையை ஒரு சின்னமாக உபயோகித்தார். அந்த இலையில் மூன்று இதழ்கள் இருக்கும். அவை ஒவ்வொன்றும் இதய வடிவத்தில் இருக்கும். இறை நம்பிக்கை, தன்னம்பிக்கை, அன்பு இவை மூன்றையும் குறிப்பதாக நம்பப்படுகிறது. இந்த இலை அதிர்ஷ்டத்தின் சின்னமாக உள்ளதாம். கி.பி. 461-ஆம் ஆண்டு மார்ச், 17 அன்று செயின்ட் பாட்ரிக்ஸ் காலமானார். அயர்லாந்திலிருந்த விஷப் பாம்புகளை எல்லாம் அவர் விரட்டிவிட்டதாகக் கூறப்படுகிறது. அவரது நினைவாக இந்த 'செயின்ட் பாட்ரிக்ஸ் தினம்' கொண்டாடப்படுகிறது''.

"அந்த நாளில் என்ன செய்வாங்க?'' என்று கேட்டான் ராமு.

"அயர்லாந்து மிகச் செழுமையான பகுதி. எங்கும் பச்சைப் பசேல் என்று இருக்கும். ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 17 - ஆம் தேதி எல்லோரும் பச்சை வண்ண ஆடைகளையே அணிவார்களாம். அப்படி அணியாதவரை செல்லமாகக் கிள்ளுவார்களாம்.

அங்குள்ள பழைய கலாசார முறைப்படி, அங்கு மிகமிகக் குள்ளமான 'லெப்ரஷான்ஸ்' என்ற வகை மனிதர்கள் இருப்பார்களாம். அவர்களைப் பிடிக்கவே முடியாதாம்... அப்படி அவர்களைப் பிடித்துவிட்டால் நாம் வரும்பும் மூன்று வரத்தைக் கேட்டு வாங்கிக்கொள்ளலாமாம். லெப்ரஷான்கள் காலணிகள் தைப்பவர்கள். வானவில்லின் முடிவில் தங்கக் காசுகள் நிறைந்த பானை இருக்கும் ரகசியத்தைச் சொல்வார்கள். லெப்ரஷான்களின் நினைவாக செயின்ட் பாட்ரிக்ஸ் தினத்தன்று மிகப் பிரம்மாண்டமான ஊர்வலம் நடைபெறும். தற்போது இந்தக் கொண்டாட்டத்தை உலகமே கொண்டாடுகிறது. 

அமெரிக்காவின் சான்பிராஸிஸ்கோ சிடி ஹால், பிரான்ஸின் ஈஃபிள் கோபுரம், துபாயின் பர்ஜ் அல் அரப் ஹோட்டல் அனைத்தும் பச்சை வண்ண ஒளியுடன் மிளிர்வது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். அன்று ஷாம்ராக்ஸ் இலைகளைக் கிரீடமாக அணிந்துகொண்டு பச்சை வண்ண உடைகளுடன் லெப்ரஷான்கள் கிறிஸ்துமஸ் தாத்தா போல் வேடமணிந்து செல்லும் ஊர்வலம் அனைவரையும் கவரும்.  தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு உங்களுக்கு இந்த இலையை என்னோட நல்வாழ்த்துகளோட பரிசாக அளிக்கிறேன்!'' என்று கூறிவிட்டு வானில் சிறகடித்தது சிட்டு.

 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com