கதைப் பாடல்: இறக்கை முளைத்த குருவி

மஞ்சள் குருவி ஒன்றுமேமன்னங் காட்டில் இருந்ததாம்கொன்றை மரத்தின் கிளையிலேகூடு கட்டி வாழ்ந்ததாம்!
கதைப் பாடல்: இறக்கை முளைத்த குருவி

மஞ்சள் குருவி ஒன்றுமே
மன்னங் காட்டில் இருந்ததாம்
கொன்றை மரத்தின் கிளையிலே
கூடு கட்டி வாழ்ந்ததாம்!

கட்டி வைத்த கூட்டிலே
முட்டை இட்டு வைத்ததாம் 
குட்டி மூக்கு கொண்டதாய் 
குஞ்சு ஒன்று பொரித்ததாம்

குஞ்சை விட்டு கூட்டிலே 
குருவி பறந்து போகுமாம்
குஞ்சுக் காக உணவினைக் 
கொண்டு வந்தே கொடுக்குமாம்!

குருவி அம்மா கொடுப்பதை 
குட்டிக் குஞ்சு தின்னுமாம்! 
அருமைக் குஞ்சு வளர்ந்ததாம் 
அழகுச் சிறகு முளைத்ததாம்! 

சிறகு முளைத்த குஞ்சுமே 
சோம்பி இருக்க வில்லையாம்
இருக்கும் கூட்டை விட்டுமே
எழுந்து பறக்க நினைத்ததாம்!

அம்மா... அம்மா... எனக்குமே 
அன்று சிறகு முளைக்கலே!
உன்னை வருத்தி உழைத்துமே 
உணவைக் கொடுத்தாய் எனக்கு நீ!

இன்று சிறகு இருப்பதால்
இருக்க மாட்டேன் முடங்கியே
உன்னைப் போல நானுமே
உயரே பறந்து செல்லுவேன்!

என்று சொல்லி குஞ்சுமே
எழுந்து வானில் பறந்ததாம்
மண்ணும் விண்ணும் பார்த்ததாம்
மலையும் கடலும் பார்த்ததாம்!

பச்சைப் புல்லை மேய்ந்திடும்
பசுவின் கன்றைப் பார்த்ததாம்
குப்பை சீய்த்தே பொறுக்கிடும்
கோழிக் குஞ்சைப் பார்த்ததாம்!

எனக்கு வேண்டிய உணவினை
இனிமேல் நானே தேடுவேன்
மனத்தில் உறுதி கொண்டுமே
மகிழ்ச்சி யோடு பறந்ததாம்!

இறக்கை முளைத்த குருவிபோல்
ஏற்ற வயதில் நீங்களும்
உரிய வழியில் பொருளினை
உழைத்தே தேட வேண்டுமே!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com