அரங்கம்: விவசாயியும் பச்சைக்கிளிகளும்

ஐயா... உங்களது நிலம் பச்சைப் பசேலென்று  மனத்தைக் கொள்ளை கொள்ளும்படி இருக்கிறது.
அரங்கம்: விவசாயியும் பச்சைக்கிளிகளும்


காட்சி  1
இடம்:  விவசாயி இராமனின் விளை நிலம்
மாந்தர்கள்:  ராமனும், பச்சைக்கிளியும்
(பச்சைப் பசேலென்று வளர்ந்திருந்த நாற்றுக்களுக்கிடையே வேண்டாதப் பதர்களை வெட்டி எடுத்துக் கொண்டிருந்தார் விவசாயி ராமன். அந்த வயல் மேல் பறந்து சென்று கொண்டிருந்த ஒரு பச்சைக்கிளி, பறப்பதை நிறுத்திவிட்டு, ராமனுடன் பேச ஆரம்பித்தது.)

பச்சைக்கிளி:  ஐயா... உங்களது நிலம் பச்சைப் பசேலென்று  மனத்தைக் கொள்ளை கொள்ளும்படி இருக்கிறது.
(ராமன், அந்தக் குரல் எங்கிருந்து வருகிறது என்று தெரியாமல் சுற்றும் முற்றும் பார்க்கிறார்)
பச்சைக்கிளி:  ஐயா... நான்தான் பச்சைக்கிளி பேசுகிறேன். உங்களது அழகான இந்த நிலத்தில் விளைந்துள்ள நெல் நாற்றுக்களை, புழு பூச்சிகள் தாக்காதபடி நான் பாதுகாப்பாகப் பார்த்துக் கொள்வேன்.
(விவசாயி ராமன் பச்சைக்கிளி தன்னுடன் பேசுவதை ஆச்சர்யத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்)
பச்சைக்கிளி: ஆம் ஐயா... புழு பூச்சிகள், வெட்டுக்கிளிகள் உங்கள் நிலத்தில் விளைந்துள்ள நாற்றுக்களைக் கடித்து ஒடித்துவிடும். அதனால் உங்களுக்கு மகசூல் குறைந்து, நஷ்டம் ஏற்பட்டுவிடும்.  எங்களை நம்பினால், நாங்கள் புழு பூச்சிகள் வெட்டுக்கிளிகள் அனைத்தையும் அழித்து விடுவோம். 
விவசாயி: (வியப்புடன்) அப்படியா?
பச்சைக்கிளி: பறவைகளின் மீது வைத்திருக்கும்  அதீத அன்பினால் உங்களது ஊரில் தீபாவளித் திருவிழாவை வெடி வைத்து, பட்டாசு கொளுத்திக் கொண்டாட மாட்டீர்களாமே!
விவசாயி:  அது உனக்கு எப்படித் தெரியும்?
பச்சைக்கிளி:  நாங்கள்தான் ஊர் ஊராகப் பறந்துகொண்டேயிருக்கிறோமே! அன்று உங்கள் கிராமம் மட்டும்தான் அமைதியாக இருக்கும். அதனால்தான் அன்று நாங்கள் அனைவரும் உங்களுடைய இந்தக் கிராமத்தை நோக்கிப் படையெடுத்து வருவோம்.
விவசாயி: ஆமாம்... உங்களை எங்கள் கிராமத்தில் உள்ள அனைவருக்கும் பிடிக்கும்!
பச்சைக்கிளி: எங்களது ஒரு சின்னக் கோரிக்கையை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா?
விவசாயி:  தயங்காது கூறு. கண்டிப்பாக  நிறைவேற்றி வைக்கிறேன்.
பச்சைக்கிளி: எங்களுக்கு வேறு எந்த ஊரிலும் இதுபோன்ற பாதுகாப்பு கிடைக்காது. தினம் தினம் பல ஊர்களில் சிறுவர்கள், பெரியவர்கள், வேட்டையாடும் கொடியவர்கள் என்று பலரிடமும் நாங்கள் மாட்டிக்கொண்டு அவதிப்பட்டுக் கொண்டு வருகிறோம்...
விவசாயி: நான் என்ன செய்ய வேண்டும்?
பச்சைக்கிளி:  இரவு நேரங்களில் உங்களது தோட்டத்தில் உள்ள மரங்களில் நாங்கள் உறங்குவதற்கு அனுமதி வேண்டும். அதுவே எங்களுக்குப் பாதுகாப்பாக இருக்கும்.
விவசாயி: இவ்வளவு தானா உன்னுடைய கோரிக்கை!  அப்படியே ஆகட்டும். இன்று முதல் நீங்கள் எனது தோட்டத்தில் உள்ள மரத்தில்  தாராளமாகத் தங்கிக் கொள்ளலாம்.
பச்சைக்கிளி: ரொம்ப நன்றி ஐயா...
விவசாயி:  ஆனால் ஒரு நிபந்தனை... மரத்தில் காய்க்கும் காய் கனிகளுக்கு நீங்கள் எந்தப் பாதகமும் விளைவிக்கக் கூடாது.
பச்சைக்கிளி:  அதற்கு நாங்கள் உறுதி தருகிறோம் ஐயா... 
விவசாயி: ரொம்ப மகிழ்ச்சி.. 
  
காட்சி  2
இடம்: விவசாயி இராமனின் தோட்டம்;
மாந்தர்கள்:  விவசாயி இராமன் மற்றும் 
பச்சைக்கிளி.
(விவசாயி ராமனின் தோட்டத்திலுள்ள மரங்களில் நூற்றுக்கணக்கான பச்சைக்கிளிகள் வசிக்க ஆரம்பித்தன)

பச்சைக்கிளி: ஐயா... உங்களது வயலில் உள்ள நாற்றுக்கள் இனி மிகவும் பாதுகாப்பாக இருக்கும். 
விவசாயி: ஆம்,  என்னருமை பச்சைக்கிளியே, நானும் பார்த்துக் கொண்டுதானிருக்கிறேன். புழு பூச்சிகள், வெட்டுக்கிளிகள் அதிக அளவில் குறைந்துவிட்டன.
பச்சைக்கிளி: கவலைப்படாதீர்கள். அவற்றை நாங்கள் முற்றிலும் அழித்து விடுவோம்.
விவசாயி:  ரொம்ப நன்றி பறவைகளே...
பச்சைக்கிளி: உங்களது தோட்டங்களில் ரசாயண உரங்கள் போடுவதை நீங்கள் இனி படிப்படியாகக் குறைத்துக் கொள்ளலாம்...
விவசாயி:  எப்படிச் சொல்கிறாய் கிளியே?
பச்சைக்கிளி: ரசாயணம் தூவினால், புழு பூச்சிகள் அண்டாது என்பது உண்மைதான். ஆனால், இப்போது நாங்கள்தான் வந்து விட்டோமே.. அந்தப் புழு பூச்சிகள்தான் எங்களது பிரதான உணவு. அவற்றை நாங்கள் தின்றுவிட்டால், எப்படி அவை உங்கள் பயிரைத் தாக்கும்?
விவசாயி: உண்மைதான் பச்சைக்கிளியே...
பச்சைக்கிளி: மேலும் இயற்கை உரங்களாக நாங்கள் இடும் எச்சங்கள் உங்களது வயல்களையும், தோட்டங்களையும் ஊட்டப்படுத்துகின்றன. அதனால் உங்களது மகசூல் அதிகரிக்கப்படும்.
விவசாயி: கிளியே, நீ சொல்வது முற்றிலும் உண்மை!
பச்சைக்கிளி: செயற்கை ரசாயண உரங்கள் உடல் நலத்திற்குக் கேடு விளைவிக்கும். அதிகமாக உட்கொண்டால் கேன்சர் முதலியக் கொடுமையான நோய்கள் உருவாகுமாம்.
விவசாயி: நீ சொல்வது உண்மைதான்... இப்பொழுது என்னுடைய  வயல்கள் செழிப்பாக இருப்பதைப் பார்க்க மிகவும்  மகிழ்ச்சியாக இருக்கிறது.
    
காட்சி  3                   
இடம்: விவசாயி ராமனின் விளைநிலம்.
மாந்தர்கள்: விவசாயி ராமனும் 
பச்சைக்கிளிகளும். 
(விவசாயி ராமனின் விளை நிலத்திலுள்ள நெற்பயிர்கள் நன்கு வளர்ந்து, நெல் 
மணிகள் அறுவடையும் செய்து முடிக்கப்படுகிறது.


பச்சைக்கிளி: ஐயா, நீங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பது போலத் தெரிகிறதே!
விவசாயி: ஆம்... என்னுடைய நிலத்தில் ஒரு போக சாகுபடிக்கு சாதாரணமாக அறுபது மூட்டைகள் நெல் கிடைக்கும். நீங்கள் அனைவரும் இங்கு வந்த பிறகு இந்த ஆண்டு 
எழுபது மூட்டை நெல் மகசூல் கிடைத்திருக்கிறது. அதற்குக் காரணம் நீங்கள்தான். விவசாயிகளின் சிறந்த நண்பன் பறவைகள்தான் என்பதை மீண்டும் உணர்த்தியிருக்கிறீர்கள்.
பச்சைக்கிளி:  ஐயா, நாங்கள் பாதுகாப்புடன் தங்குவதற்கு உங்களுடைய தோட்டத்தில் இடம் கொடுத்தீர்கள். அதற்கு நன்றிக் கடனாக நாங்கள் உங்களது தோட்டத்தையும் விளை நிலங்களையும் பாதுகாக்கிறோம், அவ்வளவுதான்.
விவசாயி:  இன்று முதல் நீங்கள் அனைவரும் என்னுடைய சிறப்பு விருந்தாளிகள். எனது தோட்டத்தில் விளையும் அனைத்து விளை பொருள்களிலும் பத்து சதவிகிதம் உங்கள் உணவுக்காக இனி கொடுக்கப் போகிறேன். நீங்கள் எக்காரணத்தைக் கொண்டும் என் தோட்டதைவிட்டு வேறு எங்கேயும் தங்கக்கூடாது.
(விவசாயி கூறியதைக் கேட்டு அனைத்து பறவைகளும் மகிச்சியடைந்தன. ஆனந்தக் கூச்சலிட்டு,  தங்களுடைய சிறகுகளை படபட வென்று சிறகடித்து விவசாயியைச் சுற்றி சுற்றி வந்து தங்களது நன்றியினைத் தெரிவித்தன.)

(திரை)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com