அரங்கம்: பென்சில்

பாலுவின் பாட்டி கோமளாவை ஒரு மாதம் முன் ஆம்புலன்ஸில் நீல நிற கவச உடை அணிந்தவர்கள் அழைத்துச் சென்றார்கள்.
அரங்கம்: பென்சில்


காட்சி - 1
இடம் - இல்லம்
மாந்தர் - சிறுவன் பாலு, அம்மா மீனாட்சி, அப்பா சுந்தரம்.

(பாலுவின் பாட்டி கோமளாவை ஒரு மாதம் முன் ஆம்புலன்ஸில் நீல நிற கவச உடை அணிந்தவர்கள் அழைத்துச் சென்றார்கள். ஆஸ்பத்திரிக்குப் போன பாட்டி இன்னும் வரவில்லை. சிறுவன் பாலுவுக்குப் பாட்டி என்றால் உயிர்)

பாலு: (பாட்டியின் நிழல் படத்துக்கு முன் நின்றபடி) பாட்டி நீங்க எப்ப வருவீங்க? தினம் என்னை பக்கத்தில் படுக்கவச்சுக்கிட்டு ராமாயணம், மகாபாரதக் கதை எல்லாம் சொல்லி தூங்க வைப்பீங்க.. அம்மாவும் அப்பாவும் எப்போ பாருங்க.. வேலை, வேலை. கதையே சொல்றதில்லே. சாப்பாடு ஊட்டி விடறப்போ பாட்டு எல்லாம் சொல்லித் தருவீங்களே.

அம்மா மீனாட்சி: என்னப்பா பாலு பாட்டிகிட்டே என்ன பேசறே?
பாலு: போங்கம்மா.. பாட்டியைப் போய் அழைச்சுட்டு வாங்க. பள்ளிக்கூடமும் இல்லே. எனக்கு போர் அடிக்குது. நீங்களும் அப்பாவும் எப்போ பாருங்க கையில் ஃபோன் வச்சுக்கிட்டு அதையே பார்க்கறீங்க.
மீனாட்சி: இன்னிக்கு உனக்கு நான் நல்ல கதை சொல்லறேன்.
பாலு: போங்கம்மா... உங்களுக்கு ஆஞ்சநேயர் கதையே சொல்லத் தெரியலே.
அம்மா: இதோ பார்... பாட்டி ஊருக்குப் போயிருக்காங்க. பேசாமல் தூங்கு. சமத்தா இருந்தீன்னா அப்பாவை விட்டு உனக்குப் பெரிய சாக்லேட் வாங்கி வரச் சொல்லுவேன்.
பாலு: மனதுக்குள், "நான் வாய் திறந்து பேசினாத்தானே நீங்க திட்டுவீங்க. நான் மனசுக்குள் பாட்டியையே நினைச்சுப்பேன்.
பாட்டி பாட்டி எப்ப வருவீங்க... வாங்க பாட்டி எனக்குக் கதை சொல்லுங்க. அப்புறம் ஆஞ்சநேயர் மலையைத் தூக்கிக்கிட்டு பறந்தாரே.. என்ன ஆச்சு...
(தூங்கி விடுகிறான்)

காட்சி 2
இடம் - இல்லம்
மாந்தர்: பாலு, மீனாட்சி, சுந்தரம்.
நேரம்: நடு நிசிக்கு மேல்
(பாலு அயர்ந்து தூங்க, பாட்டி அவன் கனவில் வருகிறாள்)

பாலு: ஹை.. பாட்டி வந்துட்டாங்க. எங்கே போனீங்க பாட்டி?
கனவில் பாட்டி: பேரன் முகத்தை கிள்ளி கொஞ்சியபடி, இதோ பார் பாலு.. இனி என்னை நீ தேடக் கூடாது. நீ பெரிய பிள்ளை. வயசு ஏழாவுது. நல்லா படிக்கணும். அம்மா அப்பா சொல்றதைக் கேட்டு நடக்கணும். அம்மா சாப்பிட எது கொடுத்தாலும் அடம் பண்ணாம சாப்பிடணும்... என்ன?
பாலு: போங்க பாட்டி எனக்கு இங்க இருக்கவே பிடிக்கலே. என்னையும் உங்க இடத்துக்குக் கூட்டிக்கிட்டுப் போங்க.
பாட்டி: அப்படி எல்லாம் பேசாதே பாலு. நான் ஒண்ணு செய்யறேன். உன் பென்சில் டப்பாவில் பென்சிலுக்குள் வந்து மறைஞ்சு இருப்பேன். உனக்கு என்ன வேணுமோ அதைப் பேப்பரில் எழுது. பென்சில் தானாக பதில் எழுதும். இதை யாரிடமும் சொல்லக் கூடாது.
பாலு: சரி பாட்டி.


காட்சி-3
இடம்: இல்லம், காலை நேரம்.
மாந்தர்: பாலு, அப்பா, அம்மா.
பாலு: அப்பா.. என்னப்பா பேப்பரில் ரொம்ப நாழியா பார்த்துக் கிட்டு இருக்கீங்க?

அப்பா: ஒண்ணுமில்லே கண்ணா. பேப்பரில் ஒரு குழந்தை கோயில் வாசலில் காணாமல் போச்சுன்னு போட்டோவுடன் விளம்பரம் கொடுத்திருக்காங்க.. அது என் நண்பர் போலீஸ் அதிகாரி திலீபன் டி. எஸ். பி. விளம்பரம் தந்திருக்கார். கண்டு பிடித்துத் தருபவர்களுக்கு பரிசு வழங்கப்படுமாம்.
அம்மா: என்னங்க இது ஒரு போலீஸ் அதிகாரியே விளம்பரம் தந்திருக்கார். அவங்களால் கண்டு பிடிக்க முடியலையாமா..?
அப்பா: அவர் என்னிடம்கூட பேசினார். எல்லா முயற்சிகளும் எடுத்துக்கிட்டுதான் இருக்காங்க. நான்தான் பேப்பரில் ஒரு விளம்பரம் தந்து வையேன்னு சொன்னேன். பாவம் ரொம்ப நாள் குழந்தை இல்லாமல் இருந்து பிறந்த குழந்தை அது.
பாலு: அப்பா என் கிட்டே பேப்பரைக் குடுங்க நான் அந்தப் பாப்பா எப்படி இருக்குன்னு பார்க்கிறேன்.
(பேப்பரை அப்பா காட்ட, எழுத்துக் கூட்டிப் படிக்கிறான் பாலு)
"காணவில்லை. பெயர் - காயத்ரி, வயது நான்கு. காணாமல் போன அன்று சந்தன நிற கவுன் அணிந்திருந்தாள்' (அன்று இரவு பாலு பென்சில் டப்பாவில் இருந்து பென்சிலை எடுத்து.. ஒரு பேப்பரில் குழந்தை எங்கே இருக்கு பாட்டி என எழுதிவிட்டு தூங்கிவிட்டான். காலையில் எழுந்து டப்பாவில் மூடி வைத்த பேப்பரைப் பிரிக்க அதில், "குழந்தை காயத்ரி யானைப் பாகன் வீட்டில் இருக்காள்' என்றிருந்தது.
இதை பாலு யாரிடமும் சொல்லாமல் அம்மாவின் போனை எடுத்து யாருக்கும் தெரியாமல் பேப்பரில் இருக்கும் நம்பருக்குப் போன் அடிக்கிறான்.)
(ஃபோன் மறுமுனையில்) போலீஸ் அதிகாரி திலீபன்: சொல்லுங்க யார் நீங்க?
பாலு: சார்... காணாமல் போன உங்க குழந்தை காயத்ரி கோயில் யானைப்பாகன் வீட்டில் இருக்காள்.
அதிகாரி: ஹலோ... யார் நீங்க? சொல்லுங்க யார் நீங்க?
(பாலு அம்மா வருவதைப் பார்த்துவிட்டு வைத்து விடுகிறான்)
அம்மா: பாலு போனை எடுக்காதேன்னு எத்தனை தரம் சொல்லி இருக்கேன். போய் பிரஷ் பண்ணு...
 

காட்சி- 4
இடம்: போலீஸ் அதிகாரி இல்லம்
மாந்தர்: அதிகாரி திலீபன், அவர் மனைவி ஜெயந்தி.

அதிகாரி திலீபன்: கொஞ்ச நாழிக்கு முன் ஒரு போன் வந்திச்சு. அதில் ஒரு குழந்தை குரல் நம் காயத்ரி யானைப் பாகன் வீட்டில் இருக்காளாம்.
ஜெயந்தி : அந்த முருகன்தான் குழந்தை வடிவில் செய்தி சொல்லி இருக்கார். சீக்கிரம் போங்க.. குழந்தை இருக்காளான்னு பாருங்க... அப்புறம் யார் சொன்னாங்கன்னு ஆராயலாம். கடவுளே, சாமி கும்பிடப் போன இடத்தில் குழந்தையைத் தொலைச்சிட்டேனே..!
(திலீபன் ஜீப்பில் தன் சகாக்களுடன் யானைப் பாகன் இல்லத்தை விசாரித்து அடைய, உள்ளே பாகன் மனைவி காயத்ரிக்கு இட்லி ஊட்டுகிறாள்)
பாகன்: ஐயா வணக்கமுங்க. இந்தக் குழந்தை யானையை வேடிக்கை பார்த்தபடி பின்னாலேயே எங்க வீட்டுக்கு வந்திடுச்சி. பெயர் விவரம் சொல்லத் தெரியவில்லை. போலீஸ் ஸ்டேஷனுக்கு இன்னிக்குப் போகலாம்ன்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன். என் மனைவிக்கு திடீர்னு உடம்பு முடியலே. என் தாயார்தான் பார்த்துக் கிட்டார் குழந்தையை.
திலீபன்: (கண்ணில் நீர் தளும்ப) காயத்ரி வாம்மா அப்பாகிட்டே..
காயத்ரி: அப்பா... யானை பாருங்கப்பா யானை. ரொம்ப பெரிசா இருக்குப்பா..
(குழந்தையை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வரும்போது) இன்ஸ்பெக்டர் திலீபனிடம் - சார் உங்க போனுக்கு வந்த காலை டிரேஸ் பண்ணிட்டோம். அது அட்வகேட் சுந்தரம் வீடு, இதுதான் அந்த விலாசம்.
அதிகாரி: அடடே... அவர் என் லாயர் நண்பராச்சே. அவர் கண்ணில் குழந்தை பட்டு அவர்தான் போன் பண்ணி இருக்கணும். நான் சாயந்திரம் அவரைப் பார்க்கறேன்... வர்றியா ஜெயந்தி?
ஜெயந்தி: கண்டிப்பா போய் நன்றி சொல்லணும்.


காட்சி 5
இடம்: சுந்தரம் இல்லம்
மாந்தர்: அதிகாரி திலீபன், ஜெயந்தி, சுந்தரம், மீனாட்சி, பாலு.

(குழந்தை காயத்ரியுடன் வரும் திலீபன், ஜெயந்தியை வரவேற்கிறார்கள் சுந்தரமும், மீனாட்சியும்)
சுந்தரம்: வாப்பா திலீப்.. இப்பதான் நிம்மதியா இருக்கு. குழந்தை எங்கே இருந்தாள்?
திலீபன்:- என்னப்பா சுந்தரம் தெரியாதமாதிரி கேட்கறே... நீதானே இருக்கும் இடத்தையே சொன்னே...
சுந்தரம்: என்னது... நான் சொன்னேனா?
திலீபன்: இதோ பார் மீனாட்சிசுந்தரம் நம்பர் கால் பண்ணிய விவரம் போனைக் காட்ட..
மீனாட்சி: (தன் போனை ஆராய்ந்து) ஆமாங்க காலை எட்டு மணிக்கு என் போனில் இருந்துதான் சார் நம்பருக்குக் கால் போயிருக்கு. யார் பண்ணியிருப்பா?
திலீபன்: பேசியது ஒரு குழந்தைக் குரலா இருந்தது.. சுந்தரம்!
சுந்தரம்: அப்படியா? பாலுவா பேசியிருப்பான்?
சுந்தரம்: அந்தக் கால் வாய்ûஸ ரெகார்டு பண்ணி இருக்கேன். இதோ போட்டுக் காட்டறேன்.
(திலீபன் தன் போனிலிருந்து அதை ஒலிக்க வைக்க - எந்தக் குரலும் கேட்கவில்லை. திலீபன் அதிர்ச்சியடைகிறார்.
சுந்தரம்: என்னப்பா திலீபன் ஒண்ணும் வாய்ஸ் கேட்கலியே...
ஜெயந்தி: அந்தக் கடவுளா ஏதோ யார் மூலமோ சொல்லியிருக்கார். குழந்தை கிடைச்சாச்சு. விடுங்க... யாரா இருந்தால் என்ன?
திலீபன்: யாரா இருக்கும்? தகவல் தந்தால் பத்தாயிரம் ரொக்கம் தரலாம்ன்னு எடுத்து வந்தேன். யாரிடம் தர்றது?
பாலு: அங்கிள் அந்த யானைப் பாகன் பாவம். அவர் மனைவி உடம்பு முடியலைன்னு பேசிக்கிட்டீங்களே... அவருக்குத் தாங்க. அவர்தானே பாப்பாவை பத்திரமா பார்த்துக்கிட்டது.
திலீபன்: நல்ல வார்த்தை சொன்னேடா கண்ணா. இப்பவே தந்திட்டுப் போறோம்.

காட்சி - 6
மாந்தர்: பாகன், அவர் மனைவி.
(பாகன் இல்லத்தில் திலீபன் பாகனிடம்
பணம் தர)

பாகன்: ஐயா குழந்தை வேடிக்கை பார்த்தபடி வந்திட்டாள். காப்பாற்ற வேண்டியது என் கடமை. அதுக்கு ஏன் பணம்?
(மறுத்துவிட, காயத்ரி பணத்தை வாங்கி பாகன் மனைவி கையில் வைத்து "இந்தாங்க ஆன்ட்டி வச்சுக்குங்க. யானைக்கு வாழைப் பழம் வாங்கித் தாங்க)
குழந்தை காயத்ரியைக் கொஞ்சி முத்தமிடுகிறான் பாகன், மனைவி கண்ணில் நீர் துளிர்க்கிறது. காயத்ரி டாட்டா காட்ட பாகனும், அவன் மனைவியும் கை
அசைக்கின்றனர்.

-திரை-

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com