கோபுவும்  அவனது கிரிக்கெட் குழுவும்!

கோபுவும்  அவனது கிரிக்கெட் குழுவும்!

காட்சி -1
இடம்:  பள்ளி
மாந்தர்: கோபு, பாபு.
(அந்த வருடத்து படிப்பின் கடைசி நாளன்று வகுப்புத் தோழர்கள் அனைவரும் பிரியா விடை பெறுகின்றனர்)
கோபு: பாபு, இன்று பள்ளியின்  கடைசி நாள். இனி நமக்கு ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்தான்! 
பாபு: ஆமாண்டா கோபு... இந்த வருடத்து படிப்புதான் எவ்வளவு  வேகமாக முடிந்து விட்டது?
கோபு: ஹைய்யா... அடுத்த வருடம் நாம் எட்டாவது வகுப்பிற்குப் போகப் போகிறோம்!
பாபு: இந்த இரண்டு மாத விடுமுறையை நாம  எப்படிடா பயனுள்ளதாக் கழிக்கப் போகிறோம்?
கோபு: நாம இரண்டு பேரும் தனித்தனியாக இரண்டு கிரிக்கெட் குழுவை ஆரம்பித்து, பல போட்டிகள் வைத்து விளையாடி மகிழலாமே!
பாபு: பலே... நல்ல யோசனைடா!
கோபு: உன்னுடைய குழுவுக்கு நீதான் கேப்டன். என் குழுவுக்கு நான்தான் கேப்டன், சரியா?
பாபு: ஓகே டா! அப்ப நம்ம  கிரிக்கெட் அணிக்கு என்ன பேர் வைக்கலாம்? 
கோபு: (யோசனைக்குப் பிறகு) பாபு உங்க டீம் வீரர்கள் மயிலாப்பூர்லயிருந்து வர்றதால உங்களோட அணிக்கு "மயிலாப்பூர் மாவீரர்கள்'னு பெயர் வைக்கலாமே!
பாபு:  சரிடா நீ மாம்பலத்திலிருந்து வர்றதுனால  உன்னோட அணிக்கு "மாம்பலம் மகாராஜாக்கள்' என்று பெயர் வைக்கலாமே!
கோபு:  நம்ம இரு அணிக்கும் நல்ல  பெயர்கள் கிடைச்சுடுத்து! சரி,  எப்ப முதல் போட்டியை வெச்சுக்கலாம்?
பாபு: அடுத்த ஞாயிறு... 
கோபு:  ஓகே டா...

காட்சி - 2
இடம்: விளையாட்டு மைதானம்
மாந்தர்: கோபு,  பாபு.

பாபு: என்னுடைய டீம் விளையாடத் தயாரா இருக்குடா..
கோபு: பாபு, எங்கிட்ட இப்ப ஒன்பது வீரர்கள்தான் இருக்காங்க.   இரண்டு பிளேயர்ஸ்  லீவுக்கு ஊருக்குப் போயிட்டாங்க!
பாபு: அப்ப உன்னோட டீம் இப்ப விளையாடத் தயாராக இல்லைன்னு சொல்லு!
கோபு: அப்படியில்லை... அவங்களும் இருந்தா பீல்டிங்ஸ் கொஞ்சம் பலப்படும் அவ்வளவுதான்.
பாபு: அப்ப வெற்றி எங்களுக்குதான்னு சொல்லு! உனக்கு பயம்னா பேசாம இந்தப் போட்டியைக் கான்சல் பண்ணிடலாமா? 
கோபு: வேணாம்டா, நாம முடிவு பண்ணியப்படியே வர்ற ஞாயிற்றுக்கிழமையே வெச்சுக்குவோம். ஆனா ஒன்னு, என்னோட இரண்டு வீரர்களுக்குப் பதில், என்னுடைய இரண்டு நாய்க் குட்டிகளையும் வெச்சிக்கிட்டு விளையாட  அனுமதி வேண்டும். 
பாபு: என்னடா சொல்ற நீ...? நாய்க்குட்டிகளோட கிரிக்கெட் விளையாடணுமா? உனக்குக் கிறுக்கு பிடிச்சிடிச்சா? நாய்களுக்கு எப்படிடா விளையாட வரும்?  நாங்க யாராவது ஓடினா, எங்களைத் துரத்தி கடிச்சிடப் போகுதுடா... அப்புறம் விளையாட்டு வினையாயிடும்... 
கோபு: இல்லடா பாபு, இப்ப எங்கிட்ட பிளேயர்ஸ் இல்லை.  அது ரெண்டும் எங்க வீட்டு நாய்க்குட்டிகள்தான். ரொம்ப பிரண்ட்லியா இருக்கும்டா...
பாபு: நீ சொன்னா சரி.  மனுஷங்களை வெச்சு ஆடிலானே, தோத்துடறோம்! நீயோ நாய்க்குட்டிகளை வெச்சு விளையாடணும்னு சொல்ற... நாங்க வெற்றி பெறுவதை யாராலும் தடுக்க முடியாது போலிருக்கே!
கோபு: வெற்றியோ, தோல்வியோ அதை அப்புறம் பார்த்துக்கலாம். என் நாய்க்குட்டிகளை வெச்சு விளையாட அனுமதி கொடுத்தயே, எனக்கு அதுவே போதும்...

காட்சி- 3
இடம்: விளையாட்டு மைதானம். 
நேரம்: ஞாயிறு, காலை ஒன்பது மணி.
மாந்தர்:  மாம்பலம் மகாராஜாக்கள், மயிலாப்பூர் மாவீரர்கள் கிரிக்கெட் அணிகள்.
(கோபுவின் வளர்ப்பு நாய்க்குட்டிகளுடன் மாம்பலம் மகா ராஜாக்கள் குழுவில் ஒன்பது வீரர்கள் மட்டுமே ஆஜராயிருந்தனர்.       பாபு அணியைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் கோபுவின் அணியைச் சேர்ந்த வீரர்களைப் பார்த்து ஏளனமாகச் சிரித்து, கேலி செய்து கொண்டிருந்தனர்)    

வீரர்களில் ஒருவன்: ஏண்டா கோபு, விளையாட்டில் தோற்பதற்கென்றே நீ கிரிக்கெட் குழுவை ஆரம்பிச்சியா?
மற்றொரு வீரர்: பதினோரு வீரர்களை வெச்சுக்கிட்டே, நாங்க பயந்துகிட்டிருக்கோம். நம்ம கோபுவோ, தைரியமாக நாய்க்குட்டிகளை வெச்சி போட்டிக்கு வர்றான்.  பாவம்டா அவன்! 
இன்னொரு வீரர்: இரண்டு பிஸ்கட்டுகளைப் போட்டா அந்த நாய்க்குட்டிகள் எங்களைச் சுற்றி சுற்றி வரும்.  
இன்னொரு வீரர்: அதைச் சாப்பிட்ட பிறகு, அந்த நாய்கள் பெவிலியனை விட்டே வெளிய வராது. இந்தப் போட்டியில் அவன் கண்டிப்பா தோத்துடுவான். (அனைவரும் சிரிக்கிறார்கள்).
பாபு:  கோபு, உனக்கு வேணும்னா எங்க டீம்லேயிருந்து ஒரு பிளேயரைத்  தர்றேன். நாம இரண்டு பேரும் சமமா, பத்துப்பத்துப் பேரை வைத்து விளையாடுவோம்.
ஒரு வீரர்: அணிகள் சம பலத்துடன் போட்டியிட்டால்தான் சரியாக இருக்கும். இல்லாட்டா போட்டியில்  விறுவிறுப்பிருக்காது.
(கோபுவிற்கு அவர்கள் அனைவரும் பேசியது பிடிக்கவில்லை. பொய்க் கோபத்தில் அவர்களை கோபித்துக் கொள்கிறான்)
கோபு:  இப்பவே எதையும் முடிவு பண்ணிடாதீங்கடா... என் இரண்டு செல்ல நாய்க் குட்டிகளையும் யாரும் குறைவாக மதிப்பிட வேண்டாம். அதுங்களுக்கு நல்ல பயிற்சி கொடுத்து வெச்சிருக்கேன்.  இந்த போட்டியில என்னோட இரண்டு நாய்களும் கலக்கப் போறாங்க, பார்த்துகிட்டேயிருங்க!
(இதைக் கேட்ட பாபுவின் மாம்பலம் மகாராஜாக்கள் அணியின் வீரர்களுக்கு சிறிது பயம் ஏற்படுகிறது. கோபு தன் நாய்களுக்கு அப்படி என்ன சிறப்பாகப் பயிற்சி கொடுத்திருப்பான்? 


காட்சி - 4
பூவா, தலையா டாஸ் போடப்படுகிறது. டாஸில் கோபு வெற்றி பெறுகிறான்.  முதலில் மட்டையெடுத்து ஆட்டத்தைத் தொடங்க முடிவு செய்கிறார்கள்.
மயிலாப்பூர் மாவீரர்கள் அணியைச் சேர்ந்த வீரர்கள் மிகவும் வேகமாக பந்துகளை வீசுகிறார்கள். முதலில் அந்தப் பந்துகளைத் தடுத்து ஆட முடியாமல் திணறியது கோபுவின் அணி.
பொறுமையாக ஆட்டத்தைத் தொடங்கிய கோபுவின் அணி, நாலைந்து ஓவர்களுக்குப் பிறகு, தங்களுடைய அபாரமான ஆட்டத்தை ஆட ஆரம்பித்தனர். ரன்கள் குவிய ஆரம்பித்தன.
அணியின் தலைவனான கோபு நூறு ரன்களை எடுத்து மிகவும் சிறப்பாக ஆடிக் கொண்டிருந்தான். கோபுவின் இரண்டு நாய்க்குட்டிகளும் பெவிலியனில் உட்கார்ந்து கொண்டு அனைவரையும் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தன.
கோபுவின் அணி மடமடவென்று இருநூற்று பத்து ஓட்டங்களையெடுத்தது.  ஆடிய ஆட்டம் போதுமென்று, ஆறு வீரர்கள் இழப்பில் ஆட்டத்தை முடித்துக் கொண்டது கோபுவின் அணி. 
நூறு ரன்கள் அடித்து பெவிலியனுக்குள் நுழைந்த கோபுவை அந்த இரண்டு நாய்களும் மகிழ்ச்சியுடன் வாலை ஆட்டிக்கொண்டே அவனைச் சுற்றி சுற்றி வந்தன.


காட்சி - 5
பாபுவின் மயிலாப்பூர் மாவீரர்கள் அணி தங்களுடைய ஆட்டத்தைத் தொடங்கினர். கோபுவின் அணியினரை வெல்ல இருநூற்றி பதினோரு ரன்களை எடுத்தாக வேண்டும். கோபுவின்  அணி பந்து வீச ஆரம்பித்தார்கள். பாபுவின் அணியினர் கோபு அணி வீசிய பந்துகளை அனாசயமாக திருப்பியடித்து ரன்களை மடமடவென்று குவிக்க ஆரம்பித்தனர்.
பெவிலியனில் உட்கார்ந்துகொண்டு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த மயிலாப்பூர் மாவீரர்களின் அணி மகிழ்ச்சியுடன்  கைதட்டி ஆரவாரம் செய்து மகிழ்ந்தனர்.  ஒரு கட்டத்தில், கோபு நம்பிக்கையை  இழக்க ஆரம்பித்தான். தன்னுடைய அணிக் குழுவினருடன் கலந்து ஒரு முடிவெடுத்தான். அதுவரை அவர்கள் ஒன்பது வீரர்களை வைத்துக்கொண்டுதான் ஆடி வந்தனர். இப்படியே போனால் அவர்கள் கண்டிப்பாக தோற்றுவிடுவார்கள். உடனே தடுப்பாட்டத்தை பலப்படுத்த வேண்டும்.
பெவிலியனில் தூங்கிக்கொண்டிருந்த தன் இரு நாய்க்குட்டிகளை "டாமி, ஜிம்மி' என்று கூப்பிட்டான். இரண்டும் கோபு கூப்பிட்டதும் ஓடிவந்தன. கோபுவின் அணி சுறுசுறுப்படைந்தது. புத்துணர்ச்சி பெற்றனர்.
மயிலாப்பூர் மாவீரர்கள் அடிக்கும் பந்துகளை ஓடோடி  உருண்டு புரண்டு வாயினால் கவ்வி தடுத்தன.  நான்கு ரன்களை எளிதில்  எடுக்க வேண்டிய இடத்தில், ஒரே ஒரு ரன் மட்டுமே கிடைக்கும் படி மிக அழகாக தடுத்து விளையாடின அந்த இரு நாய்களும். உயர அடித்த அத்தனை பந்துகளையும் சரியாக வாயினால் கவ்விப்பிடித்து ஆட்டக்காரர்களை அவுட்டாக்கி வெளியேற்றிக் கொண்டிருந்தன.
ரன்கள் எடுக்க முடியாமல் மயிலாப்பூர் மாவீரர்கள் அணி தவித்தனர். ஒவ்வொரு வீரர்களாக ஆட்டத்தை விட்டு வெளியேறினர். இரண்டு நாய்க்குட்டிகளும் மிகத்திறமையாக விளையாடி, தங்களை தோற்கடிக்கும் என்பதை அவர்கள் எதிர்ப்பார்க்கவேயில்லை. கோபுவின் அணியை மிக கேவலமாக நினைத்துக் கொண்டிருந்த பாபுவின் அணி தோல்வியை நோக்கி போய்க்கொண்டிருந்தது.
ஒரு வழியாக மயிலாப்பூர் மாவீரர்கள் அணி  நூற்றி இருபது ரன்கள் எடுத்த நிலையில்  ஆட்டத்தை விட்டு வெளியேறியது. நாய்க்குட்டிகளுடன் விளையாடி தோல்வி அடைந்தது அவர்களுக்கு அதிர்ச்சியாகவும் அவமானமாகவும் இருந்தது.
மாம்பலம் மகாராஜாக்கள் அணி கோபுவின் இரண்டு நாய்க்குட்டிகளையும் தலைக்கு மேல் தூக்கி வைத்துக்கொண்டு கூத்தாடி மகிழ்ந்தனர். 
ஆட்டத்தின் சிறந்த நாயகர்களாக அந்த இரண்டு நாய்க்குட்டிகளும் தேர்ந்தெடுக்கப்பட்டன. அவை, தங்களுடைய வாலை ஆட்டி நன்றியைத் தெரியப்படுத்தின.
தோல்வியைச் சற்றும் எதிர்ப்பாராத பாபுவின் மயிலாப்பூர் மாவீரர்கள் அணி, தலை கவிழ்ந்தபடியே அந்த மைதானத்தை விட்டு மெதுவாக வெளியேறினர்.
-திரை -

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com