செய்திச் சிட்டு: காணாமல் போன கப்பல்!

படபட வென்று சிறகை அடித்துவிட்டு கிளையில் அமர்ந்தது சிட்டு. 
செய்திச் சிட்டு: காணாமல் போன கப்பல்!

படபட வென்று சிறகை அடித்துவிட்டு கிளையில் அமர்ந்தது சிட்டு. 

"இந்த வாரம் என்ன விஷயமோ?'' என்று ஆவலோடு கேட்டான் ராமு. 

"ரொம்ப இன்ட்ரஸ்டிங்கான விஷயம். 1914-இல் இங்கிலாந்திலிருந்து 'என்ட்யூரென்ஸ்' அப்படீன்னு ஒரு கப்பல் அன்டார்டிகாவை நோக்கி  சர் எர்னஸ்ட் ஷாக்கிள்டன் தலைமையில் ஒரு குழுவோடு புறப்பட்டது!''

"சரித்திரக் கதையா? லேட்டஸ்ட்  செய்தி எதுவும் இல்லையா?'' என்றான் பாலா.

"முந்திரிக்கொட்டை... பேசாம இரு!' என்றாள் மாலா.

"விடு... அவன்தான் குறும்புப் பயலாச்சே! சரி, விஷயத்துக்கு வருவோம்... 1915-இல் அந்த என்ட்யூரென்ஸ் கப்பல் புறப்பட்டு அன்டார்டிகா கடல் பகுதியான 
"வெட் டெல்' கடல் பகுதிக்கு வந்தபோது பயங்கரப் பனிப் பொழிவு. கடல் நீரெல்லாம் பனிக்கட்டியாக உறைந்துவிட்டது. கப்பல் பனிப் பாறைகளை உடைத்துக்கொண்டு போகும்போது, பனிப்பாறைகளில் சிக்கிக்கொண்டு நின்றுவிட்டது!''

"அச்சச்சோ... அப்புறம்?'' என்று பதறினாள் லீலா.

"நல்ல காலம் குழுவில் யாருக்கும் எந்தப் பாதிப்பும் இல்லாமல் தப்பிச்சுட்டாங்க. ஒருவழியா ஊருக்குப் போய்ச் சேர்ந்தாங்க. பனி உருக உருக கப்பல் மெல்ல, மெல்ல முழுக ஆரம்பிச்சுது... முழுகி,  வெட்டெல் கடலில் சுமார் 10,000 அடி ஆழத்துக்குப் போய்விட்டது! ரொம்ப அழகாக வடிவமைக்கப்பட்ட கப்பல் அது! அதைப் பார்த்தவங்க இனிமே கப்பலைப் பற்றிக் கவலைப்படறதுலே எந்தப் பிரயோஜனமும் இல்லேன்னு விட்டுட்டாங்க. 2022-இல் இங்கிலாந்தில் மறுபடியும் "மென்சன் பெளண்ட்' அப்படீங்கறவர் தலைமையில் இந்த என்ட்யூரன்ஸ் கப்பலோட நிலைமை என்னதான் ஆச்சுன்னு கண்டுபிடிக்கப் புறப்பட்டாங்க.

சொன்னா ரொம்ப ஆச்சரியமா இருக்கும்... கப்பல் மேலேயிருந்த பனியெல்லாம் உருகி, கப்பல் மெல்ல, மெல்ல மேலே வந்து, வெட்டெல் கடல் பகுதியில் பனிப்பாறைகளில் மோதி அழகாக செங்குத்தாக நின்று கொண்டிருப்பதை மென்சென் பெளண்ட் குழுவினர் பார்த்து பரவசமும், ஆச்சரியமும் அடைஞ்சுட்டாங்க...!''

"சூப்பர்... ரொம்ப சந்தோஷமா இருக்கு!''

"இருக்காதா பின்னே...? 107 வருஷத்துக்கு அப்புறமா, காணாமல் போய்க் கைவிட்ட கப்பல் கிடைச்சா சந்தோஷத்துக்குக் கேட்பானேன்... இது நடந்தது 9-ஆம் தேதி மார்ச் 2022!  கப்பலோடு பெருவாரியான பகுதிகள் சேதமே இல்லாமல் இருக்கிறதாம்... பழைய கட்டுமானங்களுடன் இருக்கும் இந்தக் கப்பலைப் பார்க்க எல்லோரும் ஆவலா இருக்காங்க. கப்பலை மறுபடியும் மிதக்க வைக்க முடியுமான்னு தெரியலே... பார்க்கலாம்...''

"சாரி, சிட்டு இது பழைமையும், புதுமையும் கலந்த ரொம்ப சுவாரசியமான செய்திதான். நான்தான் அவசரப்பட்டு கிண்டல் பண்ணிட்டேன்...'' என்றான் பாலா.

"பரவாயில்லை பையா... நீ இப்படிக் குறும்பு செய்யலேன்னா நம்ம குழுவுக்கு போரடிச்சுடும். வரேன்...'' என்று சொல்லிவிட்டுப் பறந்து செல்லும் சிட்டுக்கு டாடா காண்பித்தனர் பிள்ளைகள்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com