அப்பாவை அழைத்து வா..!

அன்று பள்ளிக்கூடத்தில் பாரதியார் விழாவை முன்னிட்டு கவிதைப் போட்டி நடந்தது. மாணவர்கள் சிலர் பெயர் கொடுத்திருந்தனர்.
அப்பாவை அழைத்து வா..!

அன்று பள்ளிக்கூடத்தில் பாரதியார் விழாவை முன்னிட்டு கவிதைப் போட்டி நடந்தது. மாணவர்கள் சிலர் பெயர் கொடுத்திருந்தனர். பத்தாம் வகுப்பு, வகுப்பறைக்குப் பாடம் நடத்த வந்த தமிழாசிரியர் தமிழ்வளவன், வகுப்பு முடியும் வேளையில், ""மணிக்குமார் நாளைக்கு உன்னோட அப்பாவை  அழைத்து வா...'' என்றார்.

""சரிங்கய்யா'' என்று மணிக்குமார் சொல்லிவிட்டானே தவிர, அவனது மனதுக்குள் அச்சம் அதிகமானது. எதுக்காக தமிழய்யா அப்பாவ கூட்டிட்டு வரச்சொல்றாரு... நாம எந்தத் தப்பும் பண்ணலையே... மணிக்குமாரின் மனம் குழம்பியவாறு இருந்தது. 

""சரியான காரணம் இல்லாம தமிழய்யா எதுக்கு ஒங்கப்பாவக் கூட்டிவரச் சொல்லுவாரு?  ஏதோ இருக்குடா மணி...'' என்று நண்பர்கள் அவனது பயத்தை அதிகப்படுத்தினர்.

அப்பாவிடம் சொன்னதும் அவரும் கோபப்பட்டார். ""எதுக்கு என்னைய வரச் சொல்றாரு... நீ என்ன சேட்ட செஞ்சியோ?  யார்கூடவாவது சண்டை போட்டியா என்ன?'' - இப்படிக் கேள்விகளால் அவனைத் துளைத்தெடுத்தார்.

""இல்லப்பா... அப்படியெல்லாம் நான் எதுவும் செய்யலப்பா...''  மணிக்குமார் பலமுறை கூறியும், அப்பா அவனை நம்பத் தயாராக இல்லை.

மறுநாள் காலை. மணிக்குமாரின் மனது பதற்றத்துடன் இருந்தது. அப்பாவும் மகனும்  தமிழய்யாவை ஆசிரியர் ஓய்வறையில் சென்று சந்தித்தனர்.

""ஐயா வாங்க... வாங்க... உங்க பையனுக்குக் கவிதை நல்லா எழுத வருது... கவிதையில ஈடுபாடு, ஆர்வம் அதிகமா இருக்கு... பாரதி விழா கவிதைப் போட்டிக்கு அவன் எழுதிய கவிதை அற்புதம். அவன் நூலகம் போறேன்னு சொன்னா தடுக்காதீங்க...  மணிக்குமார் கவிதைப் புத்தகங்களைப் படிக்கும்போது... "பாட புத்தகத்தைப் படிக்காம என்ன இப்பவே கவிதை படிக்கிறேன்னு' திட்டாதீங்க... இதைச் சொல்லத்தான் உங்களைக் கூட்டிவரச் சொன்னேன்..'' என்றார்.

தமிழய்யாவின் அறிவுரை மணிக்குமாருக்கும் அவனுடைய அப்பாவுக்கும் வறண்டு கிடந்த பூமியில் பெய்த மழையாய் மனதைக் குளிர வைத்தது. ஆசிரியருக்கு நன்றி சொல்லிவிட்டு, மகிழ்ச்சியாகத் துள்ளிக் குதித்தபடி வகுப்பறைக்கு ஓடினான் மணிக்குமார்.

ஆசிரியர் அப்பாவை அழைத்துவரச் சொன்னால், பிள்ளைகள் தவறிழைத்திருப்பார்கள் என்று அர்த்தமில்லை... என்கிற மனநிறைவுடன் பள்ளியை விட்டு மகிழ்ச்சியுடன் புறப்பட்டார் மணிக்குமாரின் அப்பா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com