நூல் புதிது
By DIN | Published On : 26th June 2022 06:00 AM | Last Updated : 26th June 2022 06:00 AM | அ+அ அ- |

அமைதிக்குக் காந்திய வழி - (செல்லக் குழந்தைகளுக்கான குட்டிக் கதைகள்); முனைவர் ஆ.குழந்தைசாமி; ரூ.350; வெளியீடு: காந்தி அமைதி நிறுவனம், 332, அம்புஜம்மாள் தெரு, ஆழ்வார்பேட்டை, சென்னை-18;
சிறுவர்கள் விரும்பும்படியாக, குட்டி அட்டைப் பெட்டியில் 21 குட்டி நூல்கள் வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு நூலிலும் ஒரு பக்கக் கதைகள் ஏழு உள்ளன. வண்ணப் பக்கங்களுடனும், கதைகளுக்கான வண்ண ஓவியங்களுடனும் இருப்பது கண்ணைக் கவர்வதுடன், படிக்கவும் தூண்டுகிறது. சிறுவர் கையில் அடங்கக்கூடிய அளவில் நூல்கள் வடிவமைக்கப்பட்டிருப்பது தனிச்சிறப்பு. தொழில்நுட்ப உலகில் சிக்கித் தவிக்கும் இன்றைய சிறுவர்களின் எதிர்கால வாழ்க்கை செம்மைப்பட வேண்டும் என்கிற அக்கறையில் இக்கதைகளை எழுதியுள்ள நூலாசிரியர், சிறுவர்களின் காலடி அமைதிப் பாதையில் பயணித்தால், எதிர்காலத்தில் அவர்கள் வாழ்வு மிகவும் சிறப்பாக இருக்கும் என்பதை இதிலுள்ள கதைகள் மூலம் எடுத்துக் கூறியுள்ளார்.
வீட்டில், பள்ளியில், பொது இடங்களில் - கோபத்தாலோ, பழிக்குப்பழி வாங்குவதாலோ, பொறாமையாலோ, சண்டை சச்சரவுகளாலோ சாதிக்க முடியாததைக்கூட காந்திய வழியில் - அமைதி வழியில் சென்று சாதிக்க முடியும் என்பதை இதிலுள்ள கதைகள் உணர்த்துகின்றன.
ஒளி எப்படி வந்தது?, சிக்கலைப் புரிந்து கொள்ளுதல், தீர்ப்பிடா ஒழுக்கம், முதுமைக்குள் இளமை, ஒற்றுமையுணர்வு, அம்மாவா மம்மியா?, தன்னையே செதுக்கிய செதுக்கன், ஒளியா இருட்டில் போட்ட நாடகம், அமைதிப் பண்பாடுகள், இணைக்கும் விளையாட்டுகள், அமைதிப் பள்ளி, "தயவுசெய்து' சொல்வோமா? - முதலிய கதைகள் அனைத்தும் முத்துக்கள்.
"அமைதிக்குக் காந்திய வழியைக் கற்போம்' என்றும், "சாந்தன் கடைப்பிடிக்கும் அமைதிக்கான ஆறு விதிகள்' என்ன என்பதையும், அமைதிக்கான காந்தியப் பண்பாடுகளையும் பட்டியலிட்டுத் தந்திருக்கிறார் நூலாசிரியர்.
ஒவ்வொரு பள்ளி நூலகத்திலும், ஒவ்வொரு மாணவர் வீட்டிலும் இருக்க வேண்டிய அமைதிப் பெட்டகம் இது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...