தாய்க்கு மகன் ஆற்றும் உதவி...!

தாயின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக,  அவரை இரு சக்கர வாகனத்தில் வைத்துக் கொண்டு நாடு முழுவதும் பக்தர் ஒருவர் ஆன்மிகப் பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.
தாய்க்கு மகன் ஆற்றும் உதவி...!
Updated on
1 min read

தாயின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக,  அவரை இரு சக்கர வாகனத்தில் வைத்துக் கொண்டு நாடு முழுவதும் பக்தர் ஒருவர் ஆன்மிகப் பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.

கர்நாடக மாநிலத்துக்கு உள்பட்ட மைசூரு போகாதியைச் சேர்ந்த தெட்சிணாமூர்த்தி- சூடாரத்னம்மா தம்பதியரின் ஒரே மகன் கிருஷ்ணகுமார். நாற்பத்து நான்கு வயதான இவர்,  தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார்.

இவரது தந்தையின் மரணத்துக்குப் பிறகு,  2018- ஆம் ஆண்டு முதல் இன்று வரை தொடர்ந்து தனது தாயாருடன் இந்தியா முழுவதும் உள்ள கோயில்கள், மடங்கள், ஆஸ்ரமங்களுக்கு ஆன்மிகப் பயணம் மேற்கொண்டு வருகிறார்.

2001- ஆம் ஆண்டு மாடலுடைய பழைய இருசக்கர வாகனத்தில் தன் தாயாரை பின்புறம் அமர்த்திக்கொண்டு இதுவரை 10-க்கும் மேற்பட்ட மாநிலங்களுக்கு 
சென்றுள்ளனர்.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலுக்கு தனது தாயார் சூடாரத்னம்மாவுடன் சுவாமி தரிசனம் செய்ய வந்த தெட்சிணாமூர்த்தி கூறியதாவது:

""கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்த எங்களுக்காக என் தாயார் கடுமையாக ஓய்வே இல்லாமல் உழைத்தார்.  என் தந்தை இறக்கும் வரை அவர் வீட்டை விட்டு வெளியில் எங்குமே போனதில்லை.  

"பக்கத்துல இருக்கிற கோயிலுக்கு கூட நான் போனதே கிடையாது. எல்லா இடங்களையும் பார்க்க வேண்டும்'  என்ற ஆசை இருக்கத்தான் செய்கிறது என்றார். 

அப்போது நான், "உங்களால தான் நல்லா இருக்கேன்,கவலையே படாதீங்க. உங்களை இந்தியா முழுவதும் உள்ள கோயில்களுக்கு கூட்டிக்கிட்டு போகிறேன்'  என்றேன். 

அவர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவே இந்தியா முழுவதும் இருசக்கர வாகனத்தில் நானும்,அம்மாவும் ஆன்மிகப் பயணம் மேற்கொண்டு வருகிறோம்.

அப்பா எனக்கு முதல் முதலாக  2001- ஆம் ஆண்டு கொடுத்த இரு சக்கர வாகனத்தில்தான் பயணிக்கிறோம். அப்பா கொடுத்த வாகனத்தில் செல்வதால் அவரும் எங்களோடு வருவது போன்ற உணர்வே வருகிறது. பணியின்போது கிடைத்த ஊக்கத்தொகையை சேமித்து வைத்திருந்தேன்.அதைத்தான் இப்போது எடுத்து செலவு செய்கிறேன். 

கோயில்களில் மலை மீது ஏறும் போது அம்மாவால் ஏற முடியாது என்பதால் அவர்களை தூக்கிக் கொண்டு செல்வேன். 6 மொழிகள் தெரியும் என்பதால் மொழிப் பிரச்னை இல்லை. இருவரும் தலைக்கவசம் போட்டுக்கொண்டு தான் பயணிப்போம்.  வாகனப் பழுதுகளையும் நீக்கத் தெரியும்.

கோயில்களிலும், மடங்களிலும் தரும் உணவுகளை மட்டுமே சாப்பிடுகிறோம். உடலுக்குத் தீங்கு தரும் எதையும் சாப்பிடுவதில்லை.

பெற்றோர்தான் பேசும் தெய்வங்கள்.அவர்கள் இருக்கும்போது அவர்களை நல்ல முறையில் பார்த்துக் கொள்ள வேண்டும்.அவ்வாறு செய்யாமல் அவர்கள் இறந்த பிறகு அவர்களின் உருவப்படத்தை வைத்து வணங்குவது சிறிதும் நல்லதல்ல. பெற்றோருக்குச் செய்யும் சேவையே உயர்ந்த சேவை, அம்மாவை நல்ல முறையில் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே நான் திருமணமும் செய்து கொள்ளவில்லை'' என்றார்.

""எனக்கு கிடைத்த மகன் போல எல்லோரும் பிள்ளைகள் அமைய வேண்டும்'' என சூடாரத்னம்மா தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com