தெரியுமா?

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக, 1947-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14-இல் இந்தியர் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக, 1947-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14-இல் இந்தியர் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.  ஜஸ்டிஸ் ஹரிலால் ஜெகிஸன்தாஸ் கனியா என்பவர்தான் அவர்.  அப்போது 'இந்திய ஃபெடரல் நீதிமன்றம்'  என்றே உச்சநீதிமன்றம் அழைக்கப்பட்டது.
அதற்கு முன்னர் தலைமை நீதிபதியாக இருந்தவர் சர் வில்லியம் பாட்ரிக் ஸ்பென்ஸ். இவர் இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முந்தைய நாளே ராஜிநாமா செய்தது குறிப்பிடத்தக்கது.
இதன்பின்னரே,  ஃபெடரல் நீதிமன்றம் 1950-ஆம் ஆண்டு ஜனவரி 28-இல் உச்சநீதிமன்றமாக நடைமுறைக்கு வந்தது. அப்போது, ஜஸ்டிஸ் கனியாவே  உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்றார்.
குஜராத் மாநிலத்துக்கு உள்பட்ட சூரத்தைச் சேர்ந்த இவர், பம்பாய் உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தபோது, பதவி உயர்வு பெற்றார்.  இவரது சகோதரரின் மகன் எம்.எச்.கனியா 1991-இல் நாட்டின் 23-ஆவது தலைமை நீதிபதியாகப் பொறுப்பில் இருந்தார்.
1937-இல் இந்திய அரசு சட்டத்தின்படியே ஃபெடரல் நீதிமன்றம் உருவாக்கப்பட்டது.  1937-ஆம் ஆண்டு அக். 1-ஆம் தேதி லண்டனில் செயல்படும் 'ஜூடிஷியல் கமிட்டி' என்ற அமைப்புக்குப் பதிலாக இந்தியாவில் ஃபெடரல் நீதிமன்றம் உருவாக்கப்பட்டது.  
இந்தியாவில் உச்சநீதிமன்றம் தேவை என்று மத்திய சட்ட நிர்ணய சபையில் 1921-ஆம் ஆண்டு  மார்ச் 26-ஆம் தேதி சர் ஹரிசிங் கௌட் தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தார். இந்தக் கோரிக்கை 1927-ஆம் ஆண்டு செப். 23-இல் நிராகரிக்கப்பட்டது.  பின்னர், 1932-ஆம் ஆண்டு பிப். 10-இல் ஒரு உச்சநீதிமன்றம் தேவை என்று தீர்மானம் மீண்டும் தாக்கல் செய்யப்பட்டு, 36-17 என்ற வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து, மூன்று ஆண்டுகளுக்குப் பின்னரே ஃபெடரல் நீதிமன்றத்தை இந்தியாவில் அமைக்க பிரிட்டன் நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  அப்போது, தலைமை நீதிபதியாக சர் மோரிஸ் குவயர், நீதிபதிகளாக சர்ஷா முகமது சுலைமான், முகுந்த ராமராவ் ஜெய்கர் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.  அப்போதிலிருந்து தலைமை நீதிபதியாக ஆங்கிலேயரும்,   இரு நீதிபதிகளில் ஹிந்து, முஸ்லிம் என தலா ஒருவரும் நியமிக்கப்பட்டு வந்தனர்.
1946-ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் ஜஸ்டிஸ் கனியா ஃபெடரல் நீதிமன்றத்தில் நீதிபதியானார். பின்னர், ஒரு ஆண்டில் நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்னதாக, தலைமை நீதிபதியானார்.
நாட்டில் தற்போது 24 உயர்நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன.  சென்னை, மும்பை, கொல்கத்தா ஆகிய மூன்று உயர்நீதிமன்றங்கள் மிகவும் பழைமையானவை. 1862-இல் தொடங்கப்பட்டவை. உத்தரப் பிரதேசத்தில் உள்ள அலகாபாத் நீதிமன்றம் 1866-ஆம் ஆண்டும்,  கர்நாடகத்தில் உள்ள பெங்களூரு உயர்நீதிமன்றம் 1884-ஆம் ஆண்டும் தொடங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com